Wednesday, June 17, 2009

சயனைட்டைச் சாப்பிட்டிட்டான்.


இரவு விழுங்கிய அமைதியில் எல்லா ஜீவனும் உறங்கிக் கிடக்க எங்கோ தொலைவாய் நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. இடக்கையைப் பிடரிக்கும் , வலக்கையை நெற்றியுலுமாய் வைத்துக் கொண்டு படுத்திருந்தான்.

இரவின் கருமைக்குள் உறங்கிப் போகாது அந்த அறையின் இருளைத்தன் ஒளிக்கைகளால் துடைத்தபடியிருந்த சிமினி விளக்கினைப் பூச்சிக் கூட்டமொன்று சுற்றிக் கொண்டிருந்தது. அவற்றில் சில பூச்சிகள் சிமினியின் கண்ணாடியில் மோதி எரிந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த ஒளி விளக்கின் மீதான தன்பார்வையைத் திருப்பி நேரெதிரே பார்த்தான். அகிலன் எந்த அரவமுமின்றிக் கிடந்தான். அவனுக்குப் பக்கத்தில் அவனது அம்மா முளித்தபடிதானிருந்தாள்.

என்ன தம்பி நித்திரை வரேல்லயா ? கேட்டாள். இல்லையம்மா…அவங்கள் வருவாங்கள் போல கிடக்கம்மா….பின்கதவுப்பக்கத்தால் அவர்கள் வந்து போக அம்மா வைத்திருந்த பாதையைப் பார்த்தபடி சொன்னா….இல்லமோன நானிருக்குமட்டும் விமாட்டன்…..அம்மாவின் நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்குப் பிறகும்….. கைகளால் கழுத்திலிருந்த சைனைட் குப்பியை ஒற்றைக்கையால் தடவிப்பார்த்தான்.

அப்பா செத்துப்போட்டாராமடா…..செல்விழுந்து சிதறிப்போனாராம்….சின்னண்ணையைக் காணேல்லயாமடா….அம்மா தனிச்சுப்போனா…வலைஞர் மடத்தில பெரியம்மாவோடை இருக்கிறாவாம்…..எல்லாம் உங்கடை ஆக்களாலைதான்……நீயும் ஒருநாளைக்கு அனாதையாப் போப்போறாயடா....அப்பா நெடுகலும் கதைக்கேக்க பிள்ளை நீங்கள் நல்லாயிருங்கோண்டுதானடா சொல்லீற்றுப் போறவர்….கடைசியாக் கதைக்கேக்கயும் சொன்னவர் ஒரு முடிவு வரும் பிள்ளை எங்களைப் பற்றி யோசிக்கதையுங்கோண்டு சொல்லீற்றுப் போன மனிசன் இப்படிப் போட்டுதடா…. வெளிநாட்டிலிருக்கும் சின்னக்காவின் ஞாபகமும் அவள் அழுத அழுகையும் தான் அலைச்சுக் கொண்டிருந்தது.

கடைசியாய் வன்னியிலிருந்து அனுப்பப்பட்ட 75பேரில் இவன்தான் ஒரு வன்னிப்பொடியன். மற்றவவையள் எல்லாரும் கிழக்குமாகாணம். அந்தப்பயணத்தை விரும்பாமல் ஏற்றுக்கொண்டான். இடைக்கிடை போய்ப்பார்க்க கதைக்கவென அம்மாவும் அப்பாவும் அவனைத்தான் தேடுவார்கள் என்பது தெரிந்தும் சொல்லாமல் கொள்ளாமல் கட்டளையை ஏற்றுக்கொண்டு போய்ச் சேர்ந்தான்.

பழக்கப்படாத கிழக்குமாகாணம். இவனுக்கு அகிலனைத் தவிர இப்போது யாருமில்லை. கிழக்கின் காடுகளில் அந்த மரநிழல்களில் சுற்றித் திரிந்து 75பேரில் ஒவ்வொருத்தராய் திரும்பாமல் ஆமியிட்டைப்பிடிபட்டவனும் , சயனைட் சாப்பிட்டவனுமென எல்லாரும் ஏதோ வகையில் செத்துப் போனதும் சிறப்பு முகாம்களிலுமென இருக்க இவர்கள் இருவருமே தனித்துப் போனார்கள். அகிலன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தபடியால் இலகுவாய் அந்தக்காடுகளை அவன் துணையோடு சமாளிக்க முடிந்தது. அதுவும் இப்போ மாறி அவனது அம்மா யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுக்குள் இருவரையும் வைத்துக் கொண்டிருக்கிறாள். வன்னிக்காடுகள் போல இலகுவாய் ஒளித்துத் திரிந்து ஓட முடியாதபடி 6மாதம் கடந்த நிலையிலும் இடம் வலம் அறியவே சிரமப்பட்டான்.


தொலைவாய்க் கேட்ட வாகனஒலி முன்வீட்டு வாசலோடு அடங்கிவிட ஆட்கள் பரபரப்பாய் கதைப்பது கேட்கிறது. விளக்கை அணைத்துவிட்டு யன்னலை மெல்ல விலக்கி எட்டிப்பார்த்தாள் அகிலனின் அம்மா. யாரோ இறங்கி அவசரமாய் ஓடுவது தெரிந்தது. முற்றத்தில் படுத்திருந்த வீட்டுநாய் குரைக்கத் தொடங்கியது.

பேய்கள் வந்துவிட்டது போல் புலன்கள் உணர அவனைப் பார்த்தாள். அகிலன்….என வாயெடுத்து எழுப்புவதற்காக அவன் தோழருகே போன கைகளை ஒதுக்கிக் கொண்டாள். உறக்கம் மறந்து பலநாட்களின் பின்னர் இன்றுதான் அமைதியாக உறங்குகிறான். அது அவனையே மறந்த தூக்கமாய்த் தெரிந்தது அவளுக்கு. நாய்களின் குரைப்பு ஒயாமல் முன்வாசற்கதவை நோக்கி நெருங்க எரிந்து கொண்டிருந்த சிமினி விளக்கினை அணைத்து விட்டாள்.

நாய் குரைப்பில் தூக்கம் அறுபட....அம்மா என்றான் அகிலன். நானிஞ்சைதான் இருக்கிறன். சத்தம் போடாதை தம்பி…. இவனது இதய ம் இரட்டிப்பு வேகத்தில் அடித்துக் கொண்டிருந்தது. அம்மா பயத்தில் பதறுவதை உணர்ந்தவன்….அம்மா நான் குப்பி கடிக்கப்போறேன்….என்றான். தம்பி பொறுங்கோ… அவசரப்படாதையுங்கோ…..கைகளால் கவனமாய் பிடித்து வைத்திருந்தான் சயனைட் குப்பியை. கடைசியில் இதுதான் தன்னைக் காப்பாற்றும் என்ற முழுமையான நம்பிக்கையை இன்னும் கைவிடாமல் நம்பினான்.
நாயின் குரைப்பு ஓயாது தொடர நாயை நோக்கி யாரோ கற்களால் எறிந்தார்கள். எறியப்பட்ட கற்கள் கதவு சுவர்களில் விழுந்தன. நாய் பின்பக்கமாகக் குலைத்துக் கொண்டு ஓடியது.

டொக்.....டொக்......டொக்......முன்வாசற்கதவு தட்டப்படுகிறது. . காலன் வாசலில் வந்து அழைத்தாற் போல அவனுக்கும் அச்சத்தில் ஆவிபதறியது. டொக்.....டொக்......டொக்.......டொக்......மீண்டும் மீண்டும் வாசற்கதவு தட்டப்பட்டுக் கொண்டேயிருந்தது. அவங்கள்தான் வந்திட்டானுகள்.....நான் நினைச்சிட்டிருந்தது சரியாத்தானிருக்கு..... அம்மா முணுமுணுத்தாள். உள்ளிருந்து எந்து அசுமாத்தமுமில்லை.

கடந்த அரை மணிநேரமாக அந்த வாசலில் இருந்த பதட்டமும் , நாயின் குரைப்பும் மெல்ல மெல்ல அடங்குகிறது. இனி வரானுகள். சத்தமெல்லாம் குறைஞ்சிட்டுது. பயப்பிடாதையும் நாளைக்கு நாம எங்கையாவது போயிடுவம். நம்பிக்கையோடு சொன்னாள் அம்மா.


நிலம் வெளிக்க முதல் இவனும் அகிலனும் வெளியேறுவதெனத் தீர்மானமாகியது. அம்மா அவர்களுக்கு முன்னம் எழும்பி வெளிக்கிட்டு வந்தா. அம்மாவுக்குப் பின்னால் அவனும் அகிலனும் போனார்கள். ஊர் எல்லைக்குப் போனதும் அகிலன் சொன்னான். இனி நாங்க போவமம்மா நீங்க போங்கோ…..பின்னேரம் அந்தா அவடத்துக்கு வாங்கோம்மா என்றான். கவனம் சொன்னபடி அம்மா திரும்பிப் போனாள். அகிலனுக்குப் பின் அவன் போனான்.
இரவு பாதியில் அறுத்த தூக்கம் எங்காவது நிம்தியாய் விழுந்துபடுக்க வேணும் போலிருந்தது இருவருக்கும். அம்மா கொடுத்துவிட்ட மஞ்சி பிஸ்கெற்றை உடைத்தான் அகிலன். இருவரும் அதைப்பங்கிட்டுக் கொண்டார்கள். கொஞ்சத்துக்கு படுத்திட்டு உன்னை விடுறன்ரா என்று சொல்லியபடி… அகிலன் நிலத்தில் கொட்டியிருந்த இலைகள் நடுவில் படுத்தான். அதிகம் காடடென்று சொல்ல முடியாத அந்த நிழல்களின் இடுக்குகளால் வெளிச்சம் ஊறிக்கொண்டிருந்தது. ஏதோ சரசரத்தபடி வந்து நிலத்தில் வீழ்ந்தது. ஏதோவொரு சிறுவிலங்கு அது. இவனைத்தாண்டி ஓடியது.

நிப்பாட்டி வைத்திருந்த கைபேசியை எடுத்து இயங்கப் பண்ணினான். சின்னக்காவோடு கதைக்க வேணும்போலையிருந்தது. சின்னக்காவை அழைத்தான். சின்னத்தான் தான் ரெலிபோனை எடுத்தார். இவனென்றதும் அவளைக் கூப்பிட்டு விட்டார் சின்னத்தான்.
என்னடா எப்பிடியிருக்கிறா ? சின்னக்கா ஆரம்பித்தாள். என்னக்கா செய்தி ?. என்னத்தைச் சொல்ல ஆமீட்டைக் கனபேர் சரணடைஞ்சிட்டினமாமெண்டு இஞ்சை ரீவியளில காட்டிறாங்கள். சனம் முழுதும் வவுனியாவுக்கு போட்டுதுகளாம். வன்னியுக்கை எல்லாம் எரியுதாம். எங்கடை வீடுவாசல் சொந்த பந்தம் எல்லாம் அழிஞ்சிட்டுதுகளடா….ரீவியளைப் பாக்க சோறும் தின்னேலாமக் கிடக்கு….சின்னக்கா விக்கிவிக்கியழுதாள். அப்ப அம்மாவும் வவுனியாவுக்கை வந்திருப்பா என்ன ? என்றான். ஆருக்கும் தெரியும் என்றாள் அவள்.
நீயென்னடா செய்யப்போறா....? அதானக்கா தெரியேல்ல. நான் சொன்னனெல்லோ அகிலனெண்டு அவனும் நானுந்தான் இப்ப மிஞ்சியிருக்கிறம். அவன்ரை அம்மாதான் இப்ப உதவி. அவதான் முந்தநாள் ரவுணுக்குப் போய் ஒரு காட் வாங்கியந்து தந்தவ. செலவுக்கு வந்த காசுத் தொடர்புகளுமில்லாமப் போட்டுது. போன கிழமை பிடிபட்ட பொடியனிட்டை இந்த நம்பரை ஆமியெடுத்திட்டுத் தொல்லை பண்ணாங்கள். தங்களிட்டை வரச்சொல்றாங்கள். அகிலன் இருக்கிற வரைக்கும் இருப்பன் இல்லாட்டி பாப்பம். என்ரை ரெலிபோன் வராட்டி நானில்லையெண்டு நினையக்கா. ஏன்ரா அப்பிடிச் சொல்றா ? சின்னக்கா அழுது கொண்டு கேட்டாள். அதற்கான பதில் இப்போதைக்குத் தெரியவில்லை. தொடர்பைத் துண்டித்துக் கொண்டான்.

இவன் 18வயதில் வீட்டை சொல்லாமல் காணாமல் போய்விட இவனைத்தேடித் தேடி ஒவ்வொரு இடமாய் அலைந்தவள் சின்னக்கா. ஊரிலுள்ள கோவில்களுக்கெல்லாம் நேத்தி வைச்சு இவனை எதிர்பார்த்தவள். ஒரு இரவு தோழர்களுடன் அம்மாவையும் சின்னக்காவையும் ஆச்சரியப்படுத்தினான்.

ஏன்ரா எங்களை ஏமாத்தீட்டுப்போனனீ…எனக் கேட்டு அழுதாள் சின்னக்கா. அவனது தோழர்களும் அவனுமாக 5நாள் நின்று கதைச்சுச் சிரிச்சு சாப்பிட்டு மகிழ்ந்து போய்…..பூனகரியில் சென்றியிலிருந்த போது இவனும் சென்றியில் நின்றவர்களும் அறியாமல் ஆமி இவர்களைச் சுற்றி வளைத்த போது சயனைட்டை நம்பியே 7சென்றிப் பொடியளும் இருந்தார்கள்.

தம்பியவை அவசரப்படைதையுங்கோ…..நாங்கள் அடிச்சுக் கொண்டிருக்கிறோம்….என்று தளபதியொருவரின் குரலும் அந்தப் படையணியின் மீதான நம்பிக்கையும் 3நாட்களை அந்தப் பதுங்குகுழிக்குள் கழித்து மீளவும் உயிர் பிழைத்துத் திரும்பிய போது 1மாத லீவு கொடுத்துப் பொறுப்பாளர் வீட்டையனுப்பினார்.

சின்னக்கா ஒரே இவனைத்தான் சுற்றிக் கொண்டிருந்தாள். அப்பிடியே அவன் விலகுவதற்கான கடிதம் எழுதும் வரையும் சின்னக்கா அவனைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். லீவு முடிந்து போனவன் தான் விலகப்போகும் விருப்பத்தைப் பொறுப்பாளருக்கத் தெரிவித்தான்.

என்னடாப்பா பூனகரியோடை பயந்திட்டியோ…..என்றார் பொறுப்பாளர். இல்லையண்ணை அவசரமெண்டாக் கூப்பிடுங்கோ வாறன் என்றான். தண்டனையின்றி வீட்டுக்குப் போக அனுமதியும் கிடைத்து வீட்டுக்கு அவன் போக சின்னக்காவுக்கு வெளிநாட்டு மாப்பிளை சரிவந்ததது சின்னக்காவுக்கு. அவனுக்கு விருப்பமான சின்னக்கா ஊரையும் அவனையும் விட்டு வெளிநாடு போனாள். நான் போய் உன்னைக் கூப்பிடுவன் என்று சொல்லிப் போனாள். அவளது பிரிவு தாங்க முடியாமல் அம்மாவிடம் கூடப்பலதரம் திட்டுவாங்கியிருக்கிறான். நீயெங்களை விட்டிட்டுப்போகேக்க நாங்கள் எவ்வளவடா துடிச்சனாங்கள்…..என அவனது அலட்டலை அடக்கிவிடுவாள் அம்மா.

நிலமை இறுகி அவன் திரும்பவும் அழைக்கப்பட்ட போது அம்மாவும் அப்பாவும் தடுத்ததையும் கேக்காமல் வீட்டுக்கு ஒராளெண்டாலும் போக வேணுமம்மா. சொல்லித்தான் போனான். போய்ச் சிலமாதங்களில் கிழக்கிற்கு அனுப்பப்பட்டான். அதன் பின்னான மாற்றங்கள் அவனால் அவனது தோழர்களால் நினைத்தும் பார்க்க முடியாதவையாக எல்லாம் ஏதோ கனவுபோல மாறியது.

அம்மாவை வரச்சொன்ன நேரம் நெருங்கிவதை அகிலனுக்குச் சொன்னான். அகிலன் தனியே போயிட்டு வாறனெண்டு சொல்லிக் கொண்டு வெளிக்கிட்டான். சேகுவராவின் புத்தகத்தை வெளியில் எடுத்து வாசிக்கத் தொடங்கினான். இயக்கத்துக்குப் போன புதிதில் வாசித்த புத்தகம் நேற்று அகிலனின் அம்மாவிடமிருந்து வாங்கிக் கொண்டான். மனசை அரிக்கும் விடயங்களை மறக்க புத்தகத்தில் மூழ்கினான். சேகுவராவின் வாழ்க்கையை வாசிக்க வாசிக்க மீண்டும் மனம் ஏதோவெல்லாம் உணர்வுகளால் நிறைந்தது.

போன அகிலன் வந்து சேர்ந்தான். அம்மா குடுத்த சோற்றை அவனுக்கு முன் வைத்துவிட்டுச் சொன்னான். நீயில்லாட்டி நான் செத்துப் போயிடுவன்ரா. அம்மா கனக்க யோசிக்கிறா. நாங்களினித் தனிச்சு என்னத்தைச் செய்யப்போறம்….பேசாமல் குப்பிடியைக் கடிக்கலாம் போலையிருக்கு என்றான் அகிலன்….இவன் பதில் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தான்.

இருளத் துவங்கியது. அம்மா ஊரின் எல்லையில் இவர்களுக்காகக் காத்திருந்தாள். மாற்றங்களை அவதானித்தபடி இருவரும் அம்மாவைத் தேடினார்கள். அம்மா தலையில் ஏதோ பாரத்தோடு நின்றிருந்தாள். அம்மாவுக்குப் பக்கத்தில் 3பேர். இவர்களுடன் ஒன்றாய் வன்னியிலிருந்து கிழக்கிற்கு வந்தவர்கள். கிட்டடியில் பிடிபட்டு மகசீன் சிறையில் என்று ஊரில் யாரோ சொன்னதான அம்மா தான் சொன்னது ஞாபகம் வந்தது.

இவன் யோசிப்பதற்கிடையில் அகிலன் சொன்னான். அவங்கள் பிடிபடேல்லயாம். எங்கெயோ மாட்டுப்பட்டு நிண்டவங்களாம். உன்னையும் என்னையும் தேடித்தான் அம்மாட்டை வந்தவங்களெண்டு அப்போதை அம்மா சொன்னவா.

இன்று இரவு அகிலனின் பெரியப்பா வீட்டில்தான் தங்குவதாகச் சொன்னான் அகிலன். அகிலனின் பெரியப்பா வீட்டிலிருந்து 3பிள்ளைகளை நாட்டுக்காகக் குடுத்தவர். அவருக்கெண்டிருந்த 3பேரும் இப்ப இல்லை. பெரியப்பாவும் பெரியம்மாவும் தான் இருக்கினம். ஆனா பெரியம்மாக்கு மூளை பிசகீட்டுது பிள்ளையளை இழந்தாப்பிறகு…அகிலன் பெரியப்பா குடும்பம் பற்றிச் சொல்லிக் கொண்டு போனான்.

வானொலியில் செய்தி போய்க் கொண்டிருந்தது. 9ஆயிரம் வரையில் போராளிகள் சரணடைந்துள்ளதாகவும் பலநூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அவன் கனவு கண்ட எல்லாம் உடைந்து சிதிலமாகிக் கொண்டிருந்தது. அவர்களுடன் எதையும் கதைக்கப் பிடிக்கவில்லை. எப்பிடி நடந்தது ? என்ன நடந்தது ? எல்லாம் மர்மமாக….பாய் விரிக்காமல் தரையிலே படுக்கப்போவதாகச் சொல்லிக் கொண்டு தரையில் சரிந்தான்.

சின்னக்கா ஞாபகத்துக்குள் நின்றாள். அவள் வாழும் நாட்டில் இப்போ நேரம் இரவு 3மணியாகியிருக்கும். அவளுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினான். சின்னக்கா அந்தத் தகவல் பார்த்து உடைந்து போவாள். ஓவென்று உரக்கக் கத்துவாள். தனது பிறக்கப்போகும் குழுந்தையைக் கூட நினைக்காமல் இவனுக்காக அழுவாள் என்பதுவரை எல்லாம் புரிந்தவன் தான். ஆனால் அவனால் எதையும் யோசிக்க முடியவில்லை.

எப்போதுமே தன்னைக் காக்குமென்று நம்பிய குப்பியை வாயினுள் மென்று கொண்டான். படுமுட்டாளென ஒரு சுயநலம் மிக்கவனென நாளை அகிலனும் அல்லது அவனது நண்பர்களும் திட்டலாம்….இவனுக்காக அழலாம்…..நாளை இவர்களும் சரணடைதல் என்ற நிலை வந்து சின்னக்கா ஒரு நாள் சொன்னது போல் சித்திரவதைபடுவதில் பிரியமில்லை இவனுக்கு.

அவனது கடைசித்துளிகள் அவனை விட்டுப் போய்க் கொண்டிருந்தது. அம்மா அப்பா சின்னக்கா சின்னண்ணா பெரியக்கா ஆசையைக்கா மாமா மாமி மருமக்கள் என உறவுகள் எல்லாம் அந்தக்கணங்களில் அவன் முன்னால் நிற்பது போலவும்…அவனுக்காக அழுவது போலவுமிருந்தது…அவனது கடைசித்துளி கரைந்து அவன் நிரந்தரமாக உறங்கிவிட்டான்.
17.06.09

6 comments:

Anonymous said...

இது கதையல்ல. உண்மைச்சம்பவம்.விடுதலைக்கெனப் புறப்பட்ட ஆயிரமாயிரம் இளம் குருத்துக்களின் கதியிதுவே .அதிகாரப்போட்டியில் கவனம் கொள்வோருக்கு
இவர்களைப்பத்தி யோசிக்கத் தோன்றாதுதானே.
-வாணி

Anonymous said...

இப்படியானவை இனி தெடர்ந்து நடக்கத்தான்போவுது. இவர்களெல்லாம் வெளிநாட்டுத் தமிழர்கள் கண்ணில துரோகியள்.
sivam

குடுகுடுப்பை said...
This comment has been removed by a blog administrator.
சாந்தி நேசக்கரம் said...
This comment has been removed by the author.
Shan Nalliah / GANDHIYIST said...

WE ALL SHD THINK OF UNITY AND PROGRESS IN THE FUTURE!
WHAT IS BEST FOR PEOPLE WHO ARE TRAPPED IN CON.CAMPS,,,! WE SHD FIND ANSWER FOR THIS!
LET US FORGET ABOUT PAST AND UNITE ON THE BASIS OF HUMANRIGHTS,FREEDOM,EQUALITY,JUSTICE AND AHIMSA NOW!! WE SHD USE ALL POLITICAL TACTICS,DIPLOMACY,HUMANITARIAN GESTURE! WE CANNOT FIGHT EACH OTHER ANYMORE!POOR BOYS AND GIRLS FROM POOR FAMILIES!SAD!!!GOD BLESS AND HELP THEM ALL!

சாந்தி நேசக்கரம் said...

Shan Nalliah / GANDHIYIST said...

WE ALL SHD THINK OF UNITY AND PROGRESS IN THE FUTURE!
WHAT IS BEST FOR PEOPLE WHO ARE TRAPPED IN CON.CAMPS,,,! WE SHD FIND ANSWER FOR THIS!
LET US FORGET ABOUT PAST AND UNITE ON THE BASIS OF HUMANRIGHTS,FREEDOM,EQUALITY,JUSTICE AND AHIMSA NOW!! WE SHD USE ALL POLITICAL TACTICS,DIPLOMACY,HUMANITARIAN GESTURE! WE CANNOT FIGHT EACH OTHER ANYMORE!POOR BOYS AND GIRLS FROM POOR FAMILIES!SAD!!!GOD BLESS AND HELP THEM ALL!

June 21, 2009 2:19 PM
************************************

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா. நாங்கள் சாபங்களால் சபிக்கப்பட்டவர்கள் போலாகிவிட்டோம். எங்கள் இனம் தொடர்ந்து அழியும் இனமாகிவிட்டதை நினைத்து அழவும் அரற்றவும்தான் முடிகிறது.அவர்களுக்காக எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

சாந்தி