Thursday, June 25, 2009

கடைசிக்கடிதமும் காயாத கண்ணீரும்.



அவன் இருக்கிறானா ? எங்கே….? வதைமுகாமிலா அல்லது வவுனியா முகாமிலா பத்தாயிரத்துக்கும் மேல் சரண்புகுந்த தோழ தோழியருள் அவனும் தப்பியிருக்கிறானா ? அக்கா அக்கா என அவன் ஸ்கைப் கூப்பிடும் குரலும் மறைந்து…ஸ்கைப்பில் அவன் பெயர் இப்போது சிவப்பாகிக் கிடக்கிறது….

ஏதோ எனது வீட்டில் என்கூடப்பிறந்த ஓர் இரத்த உறவு போல அவன் என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தவன். தனக்குள்ளான துயரங்களை வெற்றிகளையென எல்லாவற்றையும் கடிதமெழுதி இளைப்பாறிக்கொள்ள “அன்பின் அக்கா” என்று ஆரம்பித்து அனைத்தையும் எழுதியனுப்புவான். எத்தனையோ தோழதோழியரின் எழுத்துக்கள் ஞாபகங்கள் போல இவனும் எனக்கு எழுதிய கடிதங்கள் பேசிய வார்த்தைகளென இவன் ஞாபகமாய் ஏராளம் நினைவுகள்……

யாரையும் கேட்கவோ அறியவோ முடியாமல் அவன் எனக்குள் தேடப்பட்டுக் கொண்டேயிருக்கிறான். அவன் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதாக எனக்குள் நம்பப்படுகிறான். வவுனியாவில் அமைந்துள்ள போராளிகள் முகாமில் அவனும் அழவோ ஆறுதல் தேடவோ இயலாமல் எப்போதும் போல தனிமையைத் தேடுவானா…..? இருக்கிறானா என்பதைத் தேடமுடியாமலும் இல்லையென்று ஆற முடியாமலும் அந்தரிக்கிறேன்.

எல்லோரையும் போல இவனும் அம்மாவும் அக்காவும் அண்ணாவுமென இனிமையான வாழ்வுக்குச் சொந்தக்காரனாய்த்தான் இருந்தான். காலஓட்டம் காதலுக்காய் தன்னுயிரை அண்ணன் மாய்த்துக்கொள்ள அதுவரையிருந்த இனிமைகள் போய் குடும்பம் முதல் முதலாகத் துயரைச் சுமக்கத் தொடங்கியது.

அப்பா குடும்பத்தைப் பிரிந்த போது வராத அழுகை அண்ணனை இழந்த போது அவனுக்குள் ஆகாயம் பிழந்து அவன் மேல் இறங்கியது போல அழுத்தியது. கேள்விகளால் தன்னையே துளைத்தெடுத்து அந்த இழப்பிலிருந்து வெளியேற அவனுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் சிலவருடங்கள் சென்று முடிந்தது. ஆயினும் நினைவுகளோடு அண்ணனை தூக்கியெறிய முடியாதபடி அவன் அவர்களோடு வாழ்ந்து கொண்டிருந்தான்.

அக்கா உயிரியல் படித்துக்கொண்டிருந்த நேரம் அவன் சாதாரணதர பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்திபெற்றான். உயர்தரத்தில் கணிதத்தைத் தெரிவு செய்து படிக்க ஆரம்பித்தவனை சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை கல்வியிலிருந்த கவனத்தையெல்லாம் காவு கொண்டது. அம்மாவோடும் அக்காவோடுமாக சுற்றித் திரிந்த அவனது உலகம் போரையும் அகதி வாழ்வையும் நினைத்து நினைத்து நித்திரையை இழந்து போனான். சாதாரணமான இரவுகளெல்லாம் அவனுக்கு நீண்ட யுகங்களாகின…..என்னால் என்ன செய்ய முடியும் ?

அம்மா அக்கா இவருவரையும் விட அவன் நேசிப்பில் தாயக விடுதலை நெருப்பு மூண்டு எரியத் தொடங்கியது. ஊரெங்கும் நிரம்பிய துயரமும் அவனையும் நாளடைவில் போராளியாக்கியது.

யாழ்மாவட்டமே அகதியாகி வன்னி நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரம் இவன் வன்னிக்காடுகளில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தான். ஒரு பெரும் இலட்சியக்கனவு இவனுக்கும் இதயம் முட்ட……ஆயிரமாயிரமாய் அணிவகுத்து நின்ற போராளிகளில் ஒருவனாய் களங்களில் காவியம் எழுதிக் கொண்டிருந்தவனுக்கு அரசியல் பிரிவில் சு.ப.தமிழ்ச்செல்வனின் அருகாமையில் பணி அமைந்து விடுகிறது.

அமைதியும் கடமையும் அவனை ஓர் சிறந்த வீரனாக்கியது. அரசியல் பிரிவுக்குள்ளிருந்து தடைப்பட்ட கல்வியைக் கற்றான். கணணிவரை அவனது கற்றல் விரிந்து உலகைக் கைகளுக்குள் அடக்கும் வலுவையெல்லாம் பெற்றுக் கொண்டான்.

போரால் சிதிலமான வன்னிமண்ணை உலகம் வியந்து பார்க்கும் அளவுக்கு வியக்க வைத்தது வன்னியின் வளர்ச்சியும் எழுச்சியும். ‘அக்கினிகீல’ சமர் சமாதானக்கதவுகளைத் திறக்க வழிகொலியது. வந்த சமாதான காலம் அவனை எனக்கு அடையாளம் காட்டியது.

விரிந்த இணையம் அவனை என்னோடு தொடர் உறவாக்கியது. ஈழநாதத்தில் நான் எழுதிய பகிர்வுகளில் அவன் வாசகனாகி என்னோடு அவன் உறவாகினான். கருத்தாடல் கவிதைகள் கதைகள் என எல்லாவற்றையும் பகிரத் தொடங்கியவன். மெல்ல மெல்லத் தனக்குள்ளிருந்த எல்லாவற்றையும் என்னோடு பகிரத் தொடங்கினான்.

“ஏதோ கனகாலம் பழகினமாதிரியிருக்கு… உங்களிட்டை எல்லாத்தையும கதைக்கலாம் பகிரலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறீர்கள் அக்கா” என்றொருதரம் மடலிட்டிருந்தான். அன்றிலிருந்து அவனது மடல்கள் ஈமெயில்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என அவன் என் பிள்ளைகள் வரையும் நெருங்கியிருந்தான். குறைந்தது வாரம் ஒரு தரம் ஏதாவதொரு வகையில் அவன் தொடர்போடிருந்தான்.

2005 ஒரு மடலிட்டிருந்தான். அக்கா நிலமை இறுகப்போகிறது. வர முடியுமாயின் வாருங்கள். உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் போலுள்ளது. பிள்ளைகளையும் கூட்டிவாருங்கள். எப்போது சந்திக்க இனிக் கிடைக்குமோ தெரியாதென எழுதியிருந்தான்.

ஊர் போகும் ஏற்பாடுகள் முடியும் தறுவாயில் பயணம் தடைப்பட்டு அவனைச் சந்திக்க முடியாதென்றதை அறிவித்த போது அவன் மிகவும் ஏமாந்து போனான் என்பதை அவன் எழுதிய கடிதங்கள் மெய்ப்பித்திருந்தன.

தான் தலைவரிடமிருந்து பெற்ற கணணி , கமரா என எல்லாவற்றுக்குமான தனது சந்தோசங்களென அவன் மகிழ்வோடு எழுதிய மின்னஞ்சல் நிறைய…..!

அப்படியொரு நாளில் 2006 சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட பலர் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் பரவிய நேரம் இணையத்தில் நான் ஓடிப்போய் தேடியது அவன் முகத்தைத்தான். ஆயினும் அவன் முகம் அங்கில்லை.

அக்கா அக்காவென மடலிட்டுக்கொண்டிருந்த மிகுதன் போய்விட்டதாக மிகுதனின் முகம் கண்ணீரை மறைத்த கண்ணகளின் ஊடாகத் தெரிந்தது. அன்று வீரச்சாவடைந்த அத்தனை பேரின் நினைவுகளிலிருந்து எழ முடியாத படி அடுத்தடுத்த இழப்புக்கள்…..என்ன செய்ய..ஏது செய்ய…எதுவுமே புரியாமல்….என்றோ ஒருநாள் வெல்வோம் என்ற நம்பிக்கையில் காலம் ஓடிக் கொண்டிருந்தது…..

2008 நடுப்பகுதிக்குப் பின்னாலான இழப்புகளின் பின்னான சோர்வுகளை அவன் நிமிர்வுகளாக்குங்கள் அக்கா என எழுதிக் கொண்டிருந்தான். அப்படியே தொடர்பிலிருந்தவனின் தொடர்புகள் அற்றுப்போக அவனுக்காய் எழுதிய வரிகள் இவை…..

நலமறிய ஆவலுடன்.....,
"அன்புள்ள அக்கா,
நலம் நலமறிய ஆவல்"
அம்மாவுடன் கதைத்தேன்
அக்காவுடன் சண்டை பிடித்தேன்
பேச்சுவார்தைகள் நடக்கிறது
புலிகளின் நிலவரம்
போர்ப்பிள்ளைகளின் துணிகரம் என
இணையஞ்சல் ஊடாய்
நேசமொடு - என்
நெஞ்சில் இடம் கொண்டான்.

"ஊருக்கு வா அக்கா
உனைக்காண வேண்டும்
போருக்குள் நின்று வன்னி
பாருக்கு அறிமுகமாய்
ஆனகதை சொல்ல
ஊருக்கு வா அக்கா"
அடிக்கடி அஞ்சல் எழுதிய புலி.

பூவுக்கும் அவனுக்கும்
பொருத்தம் நிறைய.
அத்தனை மென்மையவன்.
போராளிப் பிள்ளையவன்
போர்க்களம் புடமிட்ட புலியவன்.
புலம்பெயரா உறுதியுடன்
பலம்பெற்ற தம்பியவன்
ஞாபகத்தில் நிற்கின்றான் - என்
நினைவகத்தில் பத்திரமாய்.

அம்மாவின் கதை
அண்ணாவின் கதை
அக்காவின் கதையென
உள்ளிருந்த துயர் யாவும்
இணைமடலில் கொட்டி
இளைப்பாறிய வேங்கையே !

வன்னியில் குண்டு விழ
இங்கென் இதயத்தில் இடிக்கிறது.
என் போராளித் தம்பியுன்
நினைவுகள் கனக்கிறது.

நலமா நீயென்று கேட்கேனடா - உன்
நலமறிய ஆவலுடன்.....,
எங்காவது இணைவலைத் தொடர்பிருந்தால்
ஒருவார்த்தை எழுதிவிடு
நலமாயிருக்கிறேனென்று.

அன்புடன்
**************
அவன் இருப்பான் என்று நம்பவோ அவன் இல்லையென்று சொல்லவோ தொடர்புகள் அற்றுப்போயின….ஆனால் அவனது கடிதங்களாக கருத்துக்களாக….நிழற்படங்களா.….அவன் என்னோடு வாழ்ந்து கொண்டிருந்தான்…...
 *********************************

அவன் தொடர்புகள் அறுந்து போன பொழுதில் இணையத்தில் இக்கவிதையை வாசித்துவிட்டு அவன் எழுதிய கடிதம் இது :-

அடுத்தடுத்து அவன் போல் பழகிய தோழர்களும் தோழியரும் பலர் களங்களில் தங்கள் உயிர்களை விதைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருந்த அழைப்புகளில் மரணநாட்களே தினம் பிறந்து கொண்டிருக்க….2009இன் பங்குனி மாதம் மீளவும் உயிர் தந்து அவன் இட்டிருந்த மடல் இது…..என்னை மீளவும் உயிர்ப்பித்தது…..

அன்பின் அக்கா அண்ணா மற்றும் பிள்ளைகள்,
நான் நலமாக இருக்கின்றேன் இதுவரை. நீங்களும் நலமேயிருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இம்மடலினை எழுதுகின்றேன்.
எப்பொழுது கடைசியாக உங்களுடன் தொடர்பு கொண்டேனோ தெரியவில்லை. மிக நீண்ட நாட்களாகிவிட்டன என்று நினைக்கின்றேன். எனக்கு தொடர்ச்சியாக இணையத் தொடர்பு இருந்த போதிலும் அண்மைக் காலமாக நிறைய வேலைகள் இருந்தமையால் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. எனினும் உங்கள் அனைவரையும் இடைக்கிடை நினைத்துக் கொள்வேன். அடிக்கடி என்று பொய் சொல்ல முடியவில்லை.

அம்மா அக்காவுடனும் போனவருடம் 10ம் மாதம் கதைத்தபின்னர் சென்ற மாதம்தான் கதைத்தேன். அவர்களுக்கு கூட நான் இதுவரை கடிதம் எல்லாம் எழுதியது கிடையாது. உங்களுக்குத் தான் கடிதம் எழுதுகின்றேன். சிலவேளைகளில் - அநேகமாக இறுதிக் கடிதமாகக்கூட இருக்கலாம்.

போன மாதம் இணையத்தில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக உங்களுடைய வலைப்பதிவிற்கு வரநேர்ந்தது. அதிலும் எனக்காக நீங்கள் எழுதிப் பதிந்திருந்த “நலமா நீயென்று கேட்கேனடா” என்ற பதிவை கண்களில் நீருடன் படித்தேன். எனக்காக யாருமே அருகிலில்லை என்ற உணர்வு சிலவேளைகளில் தலைதூக்கும். களைத்தபொழுது தலைசாய்த்து ஆறுதல் காண அன்னை மடி இல்லையே என்று ஏங்குவேன். அப்பொழுதெல்லாம் யாருடனும் எதுவும் கதைக்கப் பிடிக்காது எங்காவது தனியே போய் இருப்பேன். ஆனால் உங்களுடைய அந்தப் பதிவைப் பார்த்தபோது என்னையே அறியாமல் கண்களில் நீர்வந்துவிட்டது. அதிலும் நான் அந்தப் பதிவைப் படிக்கும்போது யாருமே அருகிலில்லை. மனம்விட்டு கொஞ்ச நேரம் அழுதேன்.

நீங்கள் இவ்விட நிலைமைகளையும் அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். உலகமே திரண்டுவந்து எம்மீது போர்தொடுத்துக் கொண்டிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் என்னோடு தோளோடு தோள் நின்று ஒன்றாக படுத்துறங்கி ஒருதட்டில் உணவுண்டு வாழ்ந்த உறவுகள் பலர் களத்தில் வீழ்ந்துவிட்டார்கள்.

பல தடவைகள் மரணம் மிக அருகில் வந்துவிட்டுப் போயிருக்கிறது. ஆனால் இன்னும் வந்து கட்டித்தழுவி அழைத்துச் செல்லவில்லை. அதிஸ்டமோ துரதிஸ்டமோ தெரியவில்லை இந்தக்கணம்வரை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

இன்று அம்மா அக்காவுடன் கதைத்தேன். அம்மா நிறைய யோசிக்கின்றா போலத் தெரிகிறது. குரல் உடைந்து போயிருந்தது. நான் எதுவுமே காட்டிக்கொள்ளாது சாதாரணமாகக் கதைத்துவிட்டு வைத்துவிட்டேன். நீங்கள் உங்களுடைய தொலைபேசி எண்ணை அனுப்பினால் சிலவேளைகளில் கதைக்க முடியும். சில படங்களும் அனுப்பிவிடுகின்றேன். அம்மாவின் அக்காவின் தொலைபேசியிலக்கம் அனுப்புகிறேன். அம்மாவுடன் இடைக்கிடை கதையுங்கள். நேரம் கிடைக்கின்ற போது அம்மாவோடு கதையுங்கள். அம்மா என்னை நினைத்துக் கவலைப்படாமல் இருக்க ஆறுதலாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

என்றாவது சந்திப்போம் என்ற நம்பிக்கை போய்விட்டது ஆனாலும் ஒருமுறை கதைக்கலாம் என்ற நம்பிக்கையுடன்
தம்பி
****************
இக்கடிதத்தின் பின்னர் ஒரு சனிக்கிழமை மாலை நேரம் தொலைபேசியில் அழைத்தான். அக்கா என்றழைத்தவன் அரைமணித்தியாலங்கள் வரையில் அத்தனை நாள் கதைகளையும் சொல்லி முடித்தான். ஸ்கைபில் தினமும் வரும் நேரங்களைச் சொன்னான். அத்தோடு ஒரு மடலிட்டான்.

நான் கடவுள் படத்தில் “அம்மா உன் பிள்ளை நான்…” என்ற பாடலை கேட்டுப்பாருங்கள். பழைய “மாதா உன் கோயிலில் மணிதீபம் ஏற்றினேன்..” என்ற பாடலின் மெட்டில் இளையராஜா மீண்டுமொருமுறை தான் ராஜாதான் என்பதை நிரூபித்திருக்கிறார். நல்ல அர்த்தமான பாடல் வரிகளும் கூட.
அமைதியான ஒரு இடத்தில் மெல்லிய சத்தத்தில் பாடலை கேட்டுப்பாருங்கள். கேட்டுவிட்டு கருத்து எழுதி எனக்கு அனுப்புங்கள்.
தம்பி
****************

அவனுக்குள்ளிருந்த நல்ல ரசனைகளில் ஒன்று தனக்குப் பிடித்த பாடல்கள் கவிதைகளை எனக்கும் அனுப்பி வைப்பான். அவைபற்றிய கருத்துக்களையும் என்னிடமிருந்து கேட்பான். அவன் விரும்பிக் கேட்கும் பாடல்கள் யாவும் எனக்கும் வந்து சேரும். அவை எனக்கும் பிடித்த பாடல்களாக……

அதன்பின்ஸ் கைப்  மூலம் அடிக்கடி கதைத்துக் கொள்வான். அவனுக்காக ஸ்கைப் அவன் வரும் நேரங்களிலெல்லாம் பச்சையில் நிற்கும். சிரித்தபடி கதையும் தனக்குப் பிடித்த பாடல்களுமென தொடர்போடு இருந்தவன். 06.05.09 அன்றுசொன்னான். அக்கா இயன்றவரை உறவுகளைப் பேணுவோம். நாளைக்கு வேறையிடம் போறேன். இனிமேல் கதைக்க முடியுமோ தெரியேல்ல. அதிஸ்டம் இருந்தால் கதைக்கலாம்.

நம்பிக்கை தரும்படி எதையாவது தருவான் என்ற எனது நம்பிக்கையில் அவன் கதைகள் ஏதோவொரு புதிர்போல இருந்தது. அதன் பின்னால் அவனை எதிர்பார்த்து ஸ்கைப்பில் தவமிருந்தது. அவன் வரவேயில்லை……ஒன்லைன் போகும் நேரமெல்லாம் ஸ்கைப்பில் காத்திருந்தேன். அவன் வரவேயில்லை---

நம்பிக்கைகள் அறுபட்டு நீ
இருப்பாயின்னும் என்ற நினைப்பும்
விடுபட்டுப் போன ஒரு
அந்திப் பொழுதில் அழைத்தாய்....

"அக்கோய் சுகமோ" ?
நினைக்காத பொழுதொன்றின்
நினைவுகளில் வந்து நிரம்பினாய்....

"எப்படியிருக்கிறாய்" ?
எப்போதும் போலான கேள்வியில்
அப்போதும் சிரித்தாய்....
"அக்கா இருக்கிறேன்"
அதிஸ்டமோ இல்லை ஆயுள் நீளமோ ?
அறியேன் என்றாய்....

ஐந்து நிமிடமோ
அதற்கும் சில நொடியோ
" அக்கா போகிறேன்"
தொடர்பறுத்து விடைபெற்றாய்....
கடைசிச் சிரிப்பும் கலகலத்த பேச்சும்
கனவிலும் மாறாமல் நீ....

வீரச்செய்திகளுக்குள் நீயும்
வித்தாய்ப் போனாயோ ?
காலம் அள்ளி வரும்
களச் செய்திகளில்
காவியமாய் ஆனாயோ ?
இல்லைக் கல்லறையும் இல்லாமல்
காற்றோடு கலந்தாயோ....?

"எப்போதாவது சந்திப்போமென்ற
நம்பிக்கை போய்விட்டது
ஒருதரம் கதைக்க வேணும்"
இலக்கம் தாவென்றவனே...!
ஏனடா எங்கள் விதி
இப்படியாய்....?

விடுபட்டுப்போன நம்பிக்கைகள்
உனக்காய் துளிர்விடுகிறது.
சுயநலத்தோடு பிரார்த்திக்கிறேன்.
சாகாமல் நீ என்னைச்
சந்திக்க வேண்டும்.

06.05.09

அவனுக்காய் சிலவரிகள் எழுதி அவனை எதிர்பார்த்தபடி காத்திருக்க…..கள நிலவரம் கைகளை விட்டுப்போனது போல…..நம்பிக்கைகள் இழந்து நம்ப முடியாத எல்லாம் நடந்து முடிந்து நந்திக்கடலோரம் நாங்கள் நேசித்த நிமிர்வுகளெல்லாம் சரிந்து வீழ்ந்து எங்கள் சந்ததியின் கனவெல்லாம் சாய்ந்து கிடந்தது…..

12ஆயிரத்துக்கும் மேலாக போராளிகள் சரணடைந்ததாக செய்திகள் வந்த போதும் எதையும் நம்பும் நிலையில் மனசு இல்லை. 3லட்சத்துக்கும் மேலாக மக்கள் முகாம்களில் முடங்கியுள்ளதாக முகாம்களுக்குள்ளிருந்து வந்த உறவுக் குரல்கள் கேட்ட பின்னும் நம்பிக்கையோடிருந்தது எல்லாம் பொய்த்து எல்லாம் முடிந்து போய்……

எங்கள் இனிய உறவுகளின் உயிர்களையெல்லாம் கொடுத்துவிட்டு எம் இயலாமைகளை நொந்தபடியிருக்க…..அவன் இருக்கிறான் இருக்கிறான் என உள் மனம் சொல்கிறது. யாரையாவது விசாரித்து அவன் இருப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி அதையும் விட்டாயிற்று. நாங்கள் அவனைத் தேடப்போய் நரிகளிடம் அவனை இழந்து விடுவோமா என்ற பயத்தில் எல்லாவற்றையும் கைவிட்டு விட்டோம்.

அவனது அம்மா அக்காவுடன் இடையிடை அவன் பற்றி விசாரிப்போடு போகிறது நாட்கள். என்போல அவர்களும் அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு……அவன் தொடர்பில்லாத வெற்றிடத்தை நிரப்ப அவனது அக்காவும் அம்மாவும் அவன் பற்றி என்னுள் அவனை ஞாபகப்படுத்தியபடியிருக்கிறார்கள்.

அவனைத் தேடவா விடவா அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் இப்படியே இருக்கவா…..? அவன் இல்லையென்று உறுதியாகினால் உடைந்து போகும் அவன் அம்மாவும் , அக்காவும் கூட நானும் அவனில்லையென்று நம்பும் நிலையிலும் மனசின்றி…..அவன் நினைவுகளைத் தினமும் அவனுக்குப் பிடித்த பாடல்கள் ஊடாக….அவனது கடிதங்கள் ஊடாக….அவனது நிழற்படங்கள் ஊடாகவென அவன் நிறைந்து கிடக்கிறான்……எத்தனையோ பேர் அங்கிருக்கினம் இங்கிருக்கினம் என தொடர்புகள் வந்து சேர்ந்துள்ள நிலையில் இவன் இன்னும் எந்தவித தொடர்புமின்றி மெளனமாயிருக்கிறானா….? அல்லது…..?????

22.06.09

3 comments:

Anonymous said...

அந்தத்தம்பி எங்கென்றாலும் நன்றாக இருக்க எல்லாருக்கும் பொதுவான இறைவன் துணையிருப்பான்.

வரதா

இளைய அப்துல்லாஹ் said...

எல்லா வாழ்வும் இப்பபடித்தான் எதிர்பார்ப்போடதான். கண்ணீருக்குள்தான் ஏங்கள் இருப்புகளை தேடுடகிறோம்.

Anonymous said...

போராட என்று போன பிள்ளைகளக்கு இப்படியான நிலமையா ? நெஞ்சுவலிக்கிறது.