Monday, November 2, 2009

மீள்குடியேற்றம் மீண்டும் அகதியாய் !


கோடைகாலச் சூரியனால் உறிஞ்சப்பட்ட
ஆழக்கடலின் கரைகளின் பாழங்களாய்
வாழ்ந்திருந்த வீடும் வழியறிவித்த தெருக்களும்
வடிவு தந்த பச்சைய மரங்களும்
எட்டும் தூரம் வரையும்
எதுவுமில்லாத் தரைமட்டமாய்….

சுடுகாட்டு வாசம் நாசியில் முட்டித்
தொண்டைக்குள் உறைகிறது….
ஊர் திரும்பிய மகிழ்வு உதிர்ந்து கருக
மீளவும் தடையரணில்
கால்கள் தடையிடப்படுகிறது…..

போரின் கோரம் மேமாதத்து நிகழ்வின் மீதமாய்
பெருநிலம் முழுவதும் யாருமற்றுப் போன பின்னும்
நிழல் இறக்கித் தலைவிரித்துத் தாண்டவ நெருப்போடு
காத்திருக்கும் கனம் இன்னும் மீதமாய்
குடியேற்றம் ஆயுதங்கள் நடுவே அமுலாகிறது……

*மீள்குடியேற்றம்*
மீண்டும் நிவாரணம் வரிசை
நிம்மதியற்ற நிகழ்வுகள் யாவும் வளமையாய்…..
பகலில் குடியிருந்த நிலத்தில் பணியும்
இரவில் பள்ளிக்கூடத்துள் பாய் விரித்தலும்
*அகதி* என்ற சொல்லுக்கு அர்த்தம் தரும் வகையில்
மீள்குடியேற்றம் மீண்டும் அகதியாய் !

இன்ரனெட் இணையம்
உலகவிரிவு உள்ளங்கைக்குள் திரள
நொடியில் விடயங்கள் உலகைச் செல்லும் காலத்தில்
இன்னும் எங்களின் நிலத்தில் தடைவிதிக்கப்பட்டு
ஓமந்தையோடு ஒளிப்படக்கருவி ஒலிக்கும் செல்லுலா
எல்லாம் கைமாற்றிக் கொடுத்துவிட்டுக் கடக்கிறது வாகனம்
எத்தனைதான் உலகு மாறினாலும் இந்தத் தமிழின விதி
தரித்திரவிதியோ….?
உள்ளெரியும் இதயத்துத் துயர்
வாகன இரைச்சலுக்குள் புதைகிறது.

29.10.09 (மல்லாவிப் பகுதியில் இலங்கையரசினால் கொண்டு போய் விடப்பட்டுள்ள மக்களுக்குப் பொருட்கள் விநியோகத்திற்குச் சென்று வந்து ஒரு UNHCR பணியாளரின் கருத்திலிருந்து இப்பதிவு எழுதப்பட்டுள்ளது)

2 comments:

M.S.R. கோபிநாத் said...

வரிகளில் சோகத்தின் ஆழம் தெரிகிறது.

தமிழவன் said...

வணக்கம்,
எம் மக்களின் நெடுதுயரங்களையும், தொலைந்துபோன எம் மக்களின் வாழ்வியலின் ஆறா ரணங்களையும், ஆயுதங்கள் முறைத்து நிற்கும் ஓர் பாழ்வெளியில் அல்லலுரும் எம் சனங்களின் கூக்குரலாய் இதுபோன்ற இன்னும் எண்ணற்ற படைப்புகள் தீ யாய், அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறியும் ஆயுதங்களாய் தன்னிலிருந்து புரப்படட்டும். தோழமையுடன்,
தமிழவன்.
குவைத்