Saturday, December 31, 2011

எங்களுக்கும் புத்தாண்டு இப்படியாய் விடியாதா?

(இக்கவிதை 01.01.2009 புத்தாண்டு அன்று எழுதியது. அப்போதிருந்த மனநிலை இதனை தரவேற்றவில்லை. 2ஆண்டு கழித்து 2012புத்தாண்டு பிறக்கவிருக்கிற இந்தச் சில நிமிடங்களின் முன் இதனை பதிவிடுகிறேன்.)

பன்னிரண்டு மணி
பட்டாடை கட்டி வானம்
விழித்துக் கொள்கிறது.

கருவானக் கதவுடைத்து
கனவு கலைந்து வான வெளி
கண்விழித்துக் கொள்கிறது.

வண்ண வண்ண ஒளிக்கலவை...
அழகின் இருப்பிடமெல்லாம்
அகன்ற வானில்
அள்ளிக் கொட்டியிருக்க
வீதிகளில் புகைமூடி
வர்ண ஒளிக்கீற்று
வடிவுதான்....

பனித்துளி சொட்டப்
பகலைத் தெளித்தது போல் பொழுது
பட்டாசுகளால் பல்வர்ணம்....
புத்தாண்டுப் பிறப்பு
பகற் சேமிப்பெல்லாவற்றையும்
பட்டாசாய் வெடித்து மகிழ்கிறது
பக்கத்து வீடுகள்.....

எனக்கு ?

புத்தாண்டு இன்று
என் மண்ணில்
பிணங்களின் மேலால் விடிகிறது.
முப்பதாண்டுச் சோகம்
முடியாமல் விடியாமல்
என் மக்களுக்குத்
துப்பாக்கிச் சத்தமும்
எறிகணைக் கூவலுமே
இருள் அகற்றிப் - போர்
முகம் காட்டுகிறது.

என் போராளித் தோழர்களின்
துப்பாக்கி முனைகள்
தூங்காமல்.....
என் தோழர்களின்
விழிகளைப் போல் தவமியற்றுகின்றன.
தமிழர் விதி மாற்றிவிடும்
கனவுடனே காவலரண்
கம்பி வேலிகளுக்கால்
தடையறுத்துச் சமர்க்களத்தில்
சத்தமின்றிப் போகின்றனர்.

எங்களுக்கும் புத்தாண்டு
இப்படியாய் விடியாதா ?
பொன்னள்ளிச் சொரிந்து
வானப் பண்ணள்ளி
வெற்றிப் பரணி பாட
எங்களுக்கும் புத்தாண்டு
இப்படியாய் விடியாதா ?

01.01.09

Monday, December 19, 2011

முள்ளிவாய்க்கால் முடிவு.


அவள் அவனுக்காகவே காத்திருக்கிறாள். அவன் வரும்வரை அது எத்தனையாண்டுகள் ஆனாலும் அவள் காத்திருப்பாள். அவன் விடுதலையாகி வெளிவரும் நேரம் ஒரு இலட்சியத்திருமணம் நிகழும் என்றுதான் பலர் சொன்னார்கள். இரண்டு இலக்கிய கர்த்தாக்களின் இணைவு இரண்டு மண்ணை நேசிக்கிற இதயங்களின் இணைவு ஒரு வரலாற்றை எழுதுமென்று அந்தக்காதலுக்குப் பலர் கெளரவ தூதர்களாக இருந்தது பெரிய கதை.

அந்தக்காதலன் புலியில்லை. புலிகளை நேசித்தவன். புலிகள் அமைப்பின் ஒரு பிரிவுக்கான முகவராக பணியாற்றியவன். 10ஆண்டுகள் முன் கைதாகி சிறையில் அடைபட்டவன்.

அந்தக்காதலி ஒரு பெண்புலி. 17வயதில் களம் சென்று பயிற்சியெடுத்துக் களங்களில் காவலிருந்து ஒரு காவியம் படைத்த சமரில் காயமுற்று ஊனமடைந்தவள். காவலரணில் நின்றபடி கவிதைகள் எழுதியவள்.

ஊனமுற்ற பின் களத்தைவிட்டு அரசியல்துறையில் இணைக்கப்பட்டாள். அரசியலில் இருந்தவளின் எழுத்தாற்றலை இனங்கண்டு அவளது எழுத்துக்களை ஊக்குவித்தார்கள். அவள் எழுத்துகள் வானொலி பத்திரிகை வரை வியாபிக்கத் தொடங்கியது. போராளிகள் ஒயாத இயங்கு சக்திகள் என்பதற்கு இலக்கணமாய் அவள் இயக்கம் ஒரு பிரிமிப்புத்தான் வெளியாட்களுக்கு.

அது சமாதானக்கதவுகள் திறபட்டதாய் நம்பப்பட்ட யுத்த நிறுத்தகாலம். சிறைகளில் உள்ளவர்களும் தொலைபேசும் வசதிகள் முதல் விஞ்ஞான வளர்ச்சியின் அத்தனை வசதிகளையும் வன்னிமண் பெற்றிருந்த காலம்.

சிறையில் இருந்தவர்களுடன் தொடர்பாடல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கம்பிகளின் பின் கண்ணீரோடு இருந்தவர்களுக்கு மனிதர்களோடு பேசக்கிடைத்த தருணங்களை அவர்கள் வரமாகவே எண்ணினர். அத்தகைய ஒரு அழைப்பில் தான் அவனுடன் பேசக்கிடைத்தது அவளுக்கு. ஆரம்பம் அவன் எழுதிய எழுத்துக்களை அவள் தட்டச்சுச்செய்து வெளியீடுகளுக்கு அனுப்பினாள். தனது நிகழ்ச்சிகளில் சேர்த்தாள். அவன் அக்கா என்றும் இவள் தம்பியென்றும் உருவானது உறவு.

நாட்கள் போகப்போக அக்கா தம்பியுறவு அன்னியமாகியது. ஒருநாள் கதையோடு கதையாக அவன் அவளைக் காதலிப்பதாகத் தனது காதலை தொலைபேசியில் வெளிப்படுத்தினான். அதுவரை காதல் கல்யாணம் எவ்வித சிந்தனையும் அற்றிருந்தவள் திடுக்குற்றுப் போனாள்.

அடுத்த நாள் பொறுப்பாளர் அக்காவிடம் தனியே கதைக்க வேண்டியிருப்பதாய் சந்திப்பு நேரம் கேட்டாள். ஏதோ கொடுக்கப்பட்ட பணிபற்றிக் கதைக்கப் போகிறாள் என்றுதான் பொறுப்பாளரும் நினைத்தார்.

அக்கா…..,அவன் என்னைக் காதலிக்கிறானாம்…..!
பொறுப்பாளருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
என்னடியாத்தை விளையாட்டுக்கும் அளவில்லையோ ?
அக்கா சிரிக்காதையுங்கோ….
உண்மையாத்தான் சொல்றன்……
என்னட்டை முடிவு கேட்டிருக்கிறார்….
உங்கடை சம்மதம் வேணுமெனக்கு….
சரி அவனுக்கு உன்னில காதல்…உனக்கு…? நானும் காதலிக்கிறேன்…..
எடுத்த எடுப்பிலேயே அவள் சொன்னாள்.
இதப்பாரம்மா….,அவன் சிறையில….
நீ வெளியில….
மற்றது உனக்கும் அவனைத் தெரியாது…அவனுக்கும் உன்னைத் தெரியாது…..இது சினிமாமாதிரியில்லையா…?
இது சாத்தியமாகுமோண்டு யோசிச்சீங்களோ ?
நேரை பாத்து விரும்பிச் செய்த கலியாணங்களே எத்தினை தமிழீழ நீதிமன்றத்துக்கு வந்த கதையள் உங்களுக்குத் தெரியுமெல்லோ….?

அவள் பொறுப்பாளரின் விளக்கம் விபரம் எதையும் கேட்கவில்லை. விடாப்பிடியாக நின்றாள். தங்கள் காதல் புனிதம் , தூய்மை , தெய்வீகம் , காவியம் என்றெல்லாம் கனக்க விளக்கம் சொன்னாள்.

அந்த முறுகலுக்குப் பின்னர் அந்தப்பிரிவை விட்டு அவள் வேறு பிரிவுக்கு மாறிப்போனாள். காரணம் முகம் தெரியாத குரல்கள் மட்டும் அறிமுகமான காதலைப் பிரிக்க நின்ற பாவம் பொறுப்பாளர் மேல் விழுந்தது. ஆனால் அவளது இலட்சியக்காதலுக்கு பலரது ஆதரவு கிடைத்து அவளும் சிறையில் இருந்த அவனும் காதலர்கள் ஆனார்கள்.

சமாதானப்பறவை இரத்தத்தில் சிதைய யுத்தம் ஆரம்பமாகி பல்லாயிரம் உயிர்கள் இழப்பு காணமற்போனவை கடைசியில் சிதைக்கப்பட்டவையென விடுதலைப்போராட்டத்தின் முடிவு மர்மமாகியது.

2009மேமாதம் அவளும் ஆயிரமாயிரம் பேருடன் சரணடைந்தாள். ஆயிரமாயிரம் துயரங்கள் சுமந்து அவளுக்கும் புனர்வாழ்வு கிடைத்துச் சிறையிருந்து 2010 விடுதலையாகி வெளியில் வந்தாள்.

இலட்சியக்காதலனின் தொடர்பைத் தேடிப்பெற்றுக் கொண்டு அவனுடன் தொடர்பு கொண்டாள். காவியக்காதல்கள் பற்றி புராண இதிகாசங்கள் தோற்றுப் போயிருக்குமென்றுதான் அவளது காதலுக்குத் துணைநின்ற பலர் நினைத்தார்கள்.

மீண்டும் புதுப்பிக்கப்பட்ட காதல் என்றென்றும் வாழும் சாகாதென்ற சத்தியத்தோடு உறவு புதுப்பிக்கப்பட்டது. அவன் வரும்வரை அவள் அவனுக்காகக் காத்திருப்பதாக மீண்டும் சபதமெடுத்தாள். அவனும் அப்படித்தான் அவளுக்குச் சொன்னான்.

2011வருட ஆரம்பம். புதுப்பிக்கப்பட்ட உறவு மெல்ல மெல்லக் கருகுவது போலிருந்தது அவர்களது காதலுக்குப் பச்சைக் கொடியோடு நின்ற நண்பர்களுக்கு.

ஒருநாள் ஒரு வெளிநாட்டுத் தோழி அவளுடன் பேசிய பொழுது அவர்களது காதல்பற்றிக் கேட்டாள் தோழி. அதைப்பற்றி அவள் அக்கறையெடுக்கவில்லை…..

என்னை வெளிநாடு எடுக்க முடியுமெண்டா உதவி செய்தால் நல்லம்….உதவ முடியுமா ? எனக்கேட்டாள்.

தோழிக்குப் பெரிய குழப்பமாகிவிட்டது. இலட்சியக்காதல் இதிகாசக்காதலென்ற தத்துவங்களையெல்லாம் நம்பியிருந்தவள். பச்சைக் கொடி மட்டுமில்லை அவர்களது திருமணத்திற்கு கட்டாயம் எங்கிருந்தாலும் போக வேண்டுமென்றிருந்தவளுக்கு ஆச்சரியம். அவள் சொன்ன காரணங்களுக்கான தனது தரப்புப்பதில்களைத் தோழி சொன்னாள். எதுவும் எடுபடவில்லை.

தகவல் பலமட்டங்களுக்குப் பரிமாறப்பட்டு இலட்சியக்காதலை வெல்ல வைக்கும் பிரயத்தனம் பல பக்கத்தால் நிகழ்ந்தது. எல்லாம் தோற்று கடைசிக் கட்டப் பேச்சுவார்த்தையை சிறையில் இருந்த அவளது காதலனுடன் ஒருவர் நிகழ்த்தினார். முடிவு சுபமாகுமென நம்பிய யாவரின் நம்பிக்கையும் தோல்வியானது.

அவளுக்குப் புதிய வெளிநாட்டு உறவுகள் உதவிகளாகக் கிடைத்தது. அவர்கள் பற்றி அவளது பழைய நட்புகளுக்குப் பெருமையாய்ச் சொன்னாள். ஆபத்தில் அவளுக்காக உதவியவர்களையெல்லாம் அவள் மறந்தாள் போலிருந்தது நிலமை. உதவுகிறவர்கள் அவளை வெளிநாடு எடுப்பார்கள் அவளுக்கான புதிய நல்வாழ்வைக் கொடுப்பார்கள் என்றெல்லாம் அவள் கனவு காணுகிறாள் என்பதனை மட்டும் புரிய முடிந்தது.

2011 இலத்திரனியல் அச்சு ஊடகங்களில் எல்லாம் அந்தச் செய்தி வந்தது. அது இலட்சியக்காதலனின் விடுதலைச் செய்தி. அந்தச் செய்தியை அவளது நட்புகள் பார்த்த போது உண்மையான காதல் தோற்காதென்று நம்பிக்கையை மீண்டும் வளர்த்தார்கள்.

2011வருட இறுதியாகிவிட்டது. இலட்சியக்காதலன் வெளியில் வந்து 5மாதங்கள் ஓடிவிட்டது. காதல் புதுப்பிக்கப்படவுமில்லை முடிவு சுபமாகவுமில்லை. மர்மமானது அந்தக்காதலர்களின் காதல்.

அண்மையில் அந்தக்காதலனின் ஊரவன் ஒருவன் சொன்னான். அவனுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக. பெண்யாரெனத் தோழியொருத்தி கேட்டதற்கு அவன் சொன்ன பெயர் அவன் வரும்வரை காத்திருப்பேன் என்று சொல்லிக் காத்திருந்த காதலியின் பெயரில்லை.

அப்ப அவேடை காதலின்ரை முடிவு முள்ளிவாய்க்கால் முடிவுதானென்றாள் தோழி. அந்த நண்பனுக்குப் புரியவில்லை.
என்னது ? முள்ளிவாய்க்கால் முடிவு ? முள்ளிவாய்க்காலில என்ன நடந்ததெண்டது ஆருக்கேன் தெரியுமோ ? இல்ல….அது அதுதான் இந்தக்காதலின்ரை முடிவு.

நான் கொஞ்சம் ரியூப்லைட் கொஞ்சம் விளக்கமாச் சொன்னால்….? என அவன் இழுத்தான். எட கேணைப்பயலே முள்ளிவாய்க்காலில அப்பிடி நடந்தது இப்பிடி நடந்தணெ்டு ஆளாளுக்கு அலசுறமெல்லோ ஆருக்காவது உண்மை தெரியுமோ ? தெரியாதெல்லோ ? முள்ளிவாய்க்கால் முடிவோடை சம்பந்தப்பட்டவையைத் தவிர மற்ற ஒரு குருவிக்கும் ஒரு நாசமும் தெரியாது. அதுமாதிரித்தான் நாங்கள் நம்பியிருந்த இந்த இலட்சிய காதல் சோடியைத் தவிர மற்ற ஒருதருக்கும் இலட்சியக்காதல் ஏன் தோற்றதெண்டது தெரியாது. அதுதான் சொன்னன் முள்ளிவாய்க்கால் முடிவு.

19.12.2011

Saturday, November 5, 2011

ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம்

அன்புள்ள அக்கா, **** அக்காவை அறிஞ்சிருப்பியள். அவாவும் ஒரு எழுத்தாளர். மகளீர் அமைப்பு வெளியிட்ட வெளியீடுகள் ஈழநாதம் புலிகளின் குரலில எல்லாம் அவாடை எழுத்துகள் வந்திருக்கு. தடுப்பிலயிருந்து இப்ப விடுதலையாகி வந்திருக்கிறா. குடும்பம் சரியான கஸ்ரம். பாவம் மேலும் 2தங்கச்சியவை இருக்குதுகள். இவாக்கு 37வயதாகீட்டுது. வெளிநாட்டு மாப்பிளைமார் ஆருக்கேன் கலியாணம் பேசி அவவுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்க வேணும். ஏதாவது ஒரு வழி செய்யுங்கோக்கா.
அன்புடன்
****

இதென்னடா அநியாயம் விழுந்தது….? நானென்ன கலியாணப் புறோக்கரெண்டு நினைச்சிட்டாங்களோ ? மனிசில சின்னக் கோவமும் வந்தது.
இந்த நாலுவரிக்கடிதத்தை எழுதினவனும் ஒரு காலத்தில ஒரு போராளி. பிறகு எழுத்தாளன். இப்பவும் எழுத்தாளன் தான். ஆனால் எழுதிற எழுத்துக்கெல்லாம் வேண்டுறது திட்டுத்தான். எல்லாரும் திட்டத்திட்ட எழுதிக் கொண்டு தன்னோடை வாழ்ந்த தனக்குத் தெரிஞ்ச முன்னாள் போராளியளுக்கு தன்னாலை முடிஞ்ச உதவியளைச் செய்து கொண்டுதானிருக்கிறான்.

வெளிநாடுகளில தனக்குத் தெரிஞ்சவையளிட்டை கேட்டு உதவிகளை ஒழுங்கு செய்து குடுக்கிறான். இடைக்கிடை இப்படியான கலியாணத்தரகர் வேலையும் (இலவசதரகர்) செய்யிறான்.

அவன் தந்த அந்த நாலுவரி விளக்கத்திற்கு பிறகு மேலும் பெரிய பந்திக்கடிதப் பரிமாற்றம் ஈமெயிலில் நடத்தி அந்தப் பெண்போராளியின்ரை படம் சாதகம் எல்லாம் வந்து சேர்ந்தது ஈமெயில. அந்தப்படம் வந்தாப்பிறகு சரியான கவலையாயிருந்திச்சு.

ஒருகாலம் அவள் தனது சொந்தமென்ற எல்லாத்தையும் நாட்டுக்கெண்டு குடுத்து கிட்டத்தட்ட 20வருசம் போராளியா இருந்தவள். அப்பவே எங்கினையும் ஒரு கலியாணத்தை கட்டி தானும் வெளிநாடு குடும்பம் குழந்தையள் நோகாத அரசியலெண்டு கதைச்சு எழுதிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அதையெல்லாத்தையும் விட்டிட்டு இலட்சியமும் கொள்கையும் சுமந்து மே 17 , 2009 வரையும் கொள்கைக்காகவே வாழ்ந்து கடைசியில குப்பி கடிக்கவும் மனமில்லாமல் சரணடைஞ்சாள்.

சரணடைஞ்சு அனுபவிச்ச நரகங்களையும் துயரங்களையும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கூட கோடிமுறை அழுதிருப்பாள். ஆனால் அதையும் தாண்டி விடுதலையாகி வெளியல வந்தாப்பிறகுதான் அவளுக்கு தான் தனிச்சுப்போனாளெண்டு உணர்வு உறைச்சது.

பெண்போராளிகள் பற்றி உலகத் தமிழினம் கட்டி வைச்சிருந்த கோட்டையில இசைபாடிக்கொண்டிருந்த பெண்போராளிகளின் வாழ்க்கை ஒரு நேரச்சோற்றுக்கே இறைஞ்சுகிற நிலமையில இருக்கிற துயரத்தை அவளும் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறாள். இப்ப அவளுக்கு அம்மா அப்பா தங்கைச்சிமாரின் கண்ணீரும் வலியும் வலிக்கத் தொடங்கியிருக்கிறது.

போற்றிப்பாடப்பட்ட பெண்போராளிகள் ஒவ்வொருவரும் படுகிற அவலங்களையெல்லாம் சோற்றோடும் சுதந்திரத்தோடு முடிச்சுப் போட்டு கவுரவச்சாவு சாக நிர்ப்பந்திக்கிற அனைவர் மீதும் அவளுக்கு கோபமாய் வந்தது.

அவளைச் சமாதான காலத்தில் சந்தித்த எத்தனையோ புலம்பெயர் கவுரவர்கள் எவரும் தன்னையோ தன்போன்றவர்களை ஏனெண்டும் திரும்பிப்பாக்காமல் விட்டிருப்பது பற்றிச் சரியான கடுப்பு. அதுக்குப்பிறகுதான் முடிவெடுத்தாள் தானும் திருமணம் செய்து கொள்ளுவமெண்டு. இனவிடுதலைக்காக தன்னையே 20வருடங்கள் இரைகொடுத்தவள் இனிமேல் தனக்கும் ஒருதுணை வேணுமெண்டு முடிவெடுத்திருக்கிறாள். தனது விருப்பத்தை அவளுக்கு மாப்பிளை தேடுகிற தனது போராளி நண்பனிடம் தெரிவித்திருக்கிறாள். அவனும் இப்போ அவளுக்காக புறோக்கராகி……..! என்னையும் புறோக்கராக்கி……!

அவன் தந்த அவளது விபரங்களை பரிசிலிருக்கிற ஒரு இலவச புறோக்கரிடம் ஈமெயிலில அனுப்பி 3வாரத்தில் அந்த புறோக்கர் தொடர்பு கொண்டார்.
தங்கைச்சி நீங்கள் தந்த பிள்ளையின்ரை குறிப்புக்கு நல்லதொரு பொருத்தமான பொடியன் கிடைச்சிருக்கிறான். பொடியனுக்கு படமும் பிடிச்சிருக்கு. மேற்கொண்டு விசயங்களை கதைக்க வேணும் என்றார்.

அவளுக்கு வெள்ளி திசையடிச்சுவிட்டது போலத்தானிருந்தது. இலவச புறோக்கர் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் அணுகுண்டைப் போட்டார்.
பொடியன் ஏற்கனவே கலியாணம் முடிச்சு 4பிள்ளையள். ஆனா டிவோஸ். வயது 48. ஆனால் வயது தெரியாத தோற்றம். கொஞ்சம் தண்ணிச்சாமி. மற்றது தெரியும்தான இயக்கத்தில இருந்த பெட்டையளெண்டா கனக்க கேள்வியள் கேப்பினம். ஆனால் இவன் அப்பிடியெல்லாம் கேக்கேல்ல. மற்றது பொடியன் வேதம். அதுமட்டும் தான் குறை. ஆனால் பிள்ளை மதம்மாறாமல் கலியாணம் கட்ட அவை தடையில்லையாம்.

அண்ணை அவளைவிட 11வயது ஆளுக்குகூடிப்போச்சு உது சரிவராது நீங்கள் வேறையாரும் சரிவந்தா சொல்லுங்கோ….இந்தப்பதிலை அவர் எதிர்பார்க்கேல்ல போல…..திருப்பிச் சொன்னார்…..தங்கைச்சி வயதென்ன பெரிய பிரச்சனை மனம்தானே முக்கியம்.

வயது போகட்டும் ஏற்கனவே மணமுறிவு மாப்பிளை தண்ணிச்சாமிதான் இடியெண்டதை அம்மாளறிய நான் சொல்லேல்ல. அவர் அந்த மாப்பிளை பற்றி அதிகமாக பில்டப் போட்டுக் கொண்டு போனார். உது சரிவராதண்ணை விடுங்கோ. அவை வேதக்காறரெண்டா சம்மதிக்காயினம்…..கடைசிக் கடத்தலாக மதத்தை காரணம் சொல்லி அவரைத் துண்டித்துக் கொள்கிறேன்.

4கிழமை முடிஞ்ச பிறகு அவளது போராளி நண்பன் முகப்புத்தகத்தில் வந்திருந்தான்.
அக்கா **** விசயம் ஏதும் சரிவந்ததோ ?
தம்பி ஒண்டும் சரிவரேல்ல. ஆனா ஒண்டு வந்தது. ஏற்கனவே கலியாணம் கட்டி பிரிஞ்சிருக்கிறார். வயது11 கூட.

ரெண்டாந்தாரமெண்டாலும் பறவாயில்லையக்கா பாருங்கோ. அவள் எதெண்டாலும் வாழ ஒரு வழி கிடைச்சாப் போதுமெண்ட நிலமையில இருக்கிறாள். வயது வித்தியாசம் , ரண்டாந்தாரம் பெரிய பிரச்சனையில்லையெண்டு நினைக்கிறேன்…..என்றான் அவன்.

அவனுக்கு பதில் எழுதாமல் முகப்புத்தகத்தை விட்டு வெளியேறினேன். எனக்கு உச்சந்தலையில உளியாலை குத்தினமாதிரியிருந்திச்சு. பெண்விடுதலை பெண்களின் மாற்றம் புரட்சியென்று எழுதியவள். களங்களில் கனவுகளோடும் இலட்சியத்தோடும் கனரகத்துப்பாக்கியோடும் திரிந்தவள். இன்று ரண்டாந்தாரமும் பறவாயில்லையென்ற நிலமைக்கு எப்படி வந்தாள்……..?

இதைவிடவும் இவையள் தங்களை முன்னாள் போராளியளெண்டு சொல்லாமலிருக்கலாம்….யாருக்கோ விலபோட்டா….அத்தியடிக் குத்தியரின்ரை ஆளாயிருக்கலாம்…..அல்லது அரச புலனாய்வா இருக்கலாம்…..உவையெல்லாம் பெண்போராளியள்…சீ….தூ….

அவள் பற்றிய கதையைச் சொல்ல நினைக்கிற என்னை நோக்கி….,

புலம்பெயர் தாயக விரும்பிகள் விடுலையுணர்வாளர்கள் புலத்திலிருந்து களம்காணும் புலப்போராளிகள் யாவரும் என் மூஞ்சியில் துப்பிக் கொண்டிருப்பது போல கனவு காணத்தொடங்குகிறேன்.

01.11.2011

Wednesday, October 12, 2011

தொடரும் துயரங்கள்…..! 2

தொடரும் துயரம் 2

அன்புள்ள அக்கா,
எனது குடும்பம் மிகுந்த வறுமையில் இருக்கிறது. கடைசிச்சண்டையில் புதுமாத்தளனில் எனக்கு தலையில் காயம்பட்டது. அதனால் எனது கையும் காலும் இழுத்துள்ளது. எனது மனைவிக்கு ஒருகால் இல்லை மற்றக்கால் முறிவு. தகரக்கொட்டிலில் தான் இருக்கிறோம். கிணறு மலசலகூட வசதிகள் எதுவுமில்லை. மகன் இந்த வருடம் பாடசாலை போகிறார். 01.10.2011 2வது குழந்தை பிறக்க இருக்கிறது. எங்கள் படம் கடிதத்துடன் அனுப்புகிறேன். எங்களது நிலமையை கருத்தில் கொண்டு உதவுங்கள்…..,

அவன் ஒரு முன்னாள் போராளி. நீண்ட அவனது கடிதத்தின் கிடைசிப்பந்தி இப்படித்தான் முடிந்திருந்தது. அவனது குடும்பப்படம் ஸ்ரூடியோக்காரரின் கைவண்ணம் பட்டு அந்த மாதிரியிருந்தது.

அவனது கடிதம் படம் எல்லாத்தையும் உதவிசெய்ய முன்வந்த ஒரு குடும்பதிற்கு மின்னஞ்சல் செய்துவிட்டு அவர்களது பதிலுக்காக 4நாள் காத்திருந்தேன். 5ம்நாள் காலை அவர்கள் அழைத்தார்கள்.

நீங்களென்ன கஸ்ரப்பட்ட குடும்பத்தை தாங்கோண்டு கேட்டா வசதியான ஆக்களின்ரை விபரத்தை அனுப்பியிருக்கிறியள்…?

அதெப்பிடியண்ணை கஸ்ரப்படாதவையெண்டு கண்டுபிடிச்சனீங்கள்…?

படத்தில அந்தமாதிரி வடிவாத்தானே உடுப்புப்போட்டு வெளிக்கிட்டிருக்கினம்….? பிறகென்ன கஸ்ரமவைக்கு ?

அண்ணை அவேட்டை சொந்தமா கமறா இல்லை. உதவிசெய்யிற உங்களுக்குத் தாறதுக்காக நான்தான் ஸ்ரூடியோவில போய் படமெடுத்து அனுப்பச் சொன்னனான். உங்களுக்குத் தெரியுமோ தெரியாது எங்கடை சனம் சோறுசாப்பிடாட்டிலும் வெளியில போகேக்க தங்கடை கஸ்ரத்தை வெளியில தெரியாமல் அயல்வீட்டில கடன்வாங்கியெல்லாம் நகைபோட்டு உடுப்புப்போட்டு வெளிக்கிட்டுப் போறதுகள். கஸ்ரமெண்டாலும் இருக்கிறதை வடிவாப் போடத்தானே எல்லாரும் விரும்புவினம். அதைத்தான் அதுகளும் செய்து படமெடுத்து அனுப்பியிருக்கினம். மற்றது ஸ்ரூடியோ போய் படமெடுக்கிறதெண்டா ஸ்ரூடியோக்காரரும் பிச்சையெடுக்கிறமாதிரிப் போனா படமெடுக்கவும் யோசிப்பினம்.

மறுமுனையில நிண்ட அண்ணை என்னைக் குறுக்கறுத்தார்.

நான் இயக்கத்தில இருந்த குடும்பமாத்தான் தரச்சொன்னனான்….நீங்களும் ஈமெயிலில எழுதியிருந்தியள் பொடியன் இயக்கத்திலயிருந்ததெண்டு ஆனா பொடியன் இயக்கத்தில இருக்கேல்லயாம்.

அதென்னண்டண்ணை அறிஞ்சனீங்கள் ?

நான் கேட்டனான் இயக்கத்தில இருந்தீரோ ? உம்முடை மனிசி இருந்ததோண்டு ? மற்றது எனக்குத் தெரிஞ்ச இயக்கக்காறரைக் கேட்டன் பொடிக்கு ஒருதரையும் தெரியாதாம்…..பொடியன் தாங்கள் ஒண்டிலையும் இருக்கேல்லயாமெண்டு சொல்லிச்சுது. எனக்கெண்டால் அவையில நம்பிக்கையில்லை.

அடுத்த விசயமென்னெண்டா உந்தச் சண்டையில அழிஞ்சு கஸ்ரப்பட்டு வந்திருக்கினம்….ஆனா அதுக்கிடையில அடுத்த குழந்தை பெறப்போறாவாம் மனிசி…..மனிசன் காலும் கையும் ஏலாது மனிசியும் ஏலாது ஆனால் அடுத்த குழந்தையை றெடிபண்ணீட்டினம்……உதெல்லாம் வைச்சுப் பாக்கேக்க எனக்கெண்டால் அவை நல்ல வசதியானவையெண்டுதான் தெரியுது. நீர் பிள்ளை எனக்கொரு கஸ்ரப்பட்ட இயக்கத்திலயிருந்த குடும்பமா தாரும் 3,4பிள்ளையள் உள்ள குடும்பமா அதுவும் அவை ஏலாத ஆக்களாயிருந்தா நல்லம். நான் அவைக்கு மாதம் ஒரு 5ஆயிரம் ரூபா குடுப்பன்.

எனக்கெண்டால் கோவம் பத்திக்கொண்டு வந்திச்சு. என்னேயிற பிச்சைகேக்க வெளிக்கிட்டாச்சு இதில ரோசம் மானம் பாத்து என்னத்தைச் செய்யிறதெண்டு வாயில வந்த எல்லாத்தையும் அடக்கிக்கொண்டு விளக்கத் துவங்கினேன்.

அண்ணை அந்தப்பொடியனும் ஒரு பெரிய பொறுப்பில இருந்தவன். கடைசிச் சண்டையிலதான் காயம்பட்டது…. அடுத்து நீங்கள் எடுத்தவுடனும் இயக்கமோ எண்டு கேட்டிருந்தா உடனும் யோசிக்குங்களெல்லோ ?

மற்றது நாட்டிலை குழந்தையளில்லை….எல்லாம் ஊனமும் நோயுமாத்தான் இருக்குதுகள். இஞ்சையிருந்து நாங்கள் பெத்த பிள்ளையளை ஒருதரும் அங்கை கொண்டு போய் நாட்டுக்காகக் குடுக்கப்போறதுமில்லை. ஆக குழந்தையள் பெறக் கூடிய ஆக்களை நாங்கள் ஊக்குவிக்க உதவியளைக் குடுத்தால் கூட நல்லமண்ணை….. அங்கை ரண்டாந்தரப் பிரசையளான தமிழர் 3ம்தரமாகிற நிலமையில இருக்கிறம். அதுகளும் மனிசர்தான….அதுகளிட உணர்வுகளை நாங்கள் கட்டி வையுங்கோண்டு சொல்றது ஞாயமில்லைத்தானே…?

இயக்கம் இருக்கேக்க இயக்கக்குடும்பங்களே 3,4 பிள்ளையணெ்டு பெத்தவை ஏனெண்டா நாட்டுக்கு பிள்ளையள் வேணுமெண்டு….அப்பிடிப் பெத்த கனபேர் கூட கடைசிச்சண்டையில தங்கடை 12,13வயதுப்பிள்ளையளையே களத்திலயும் விட்டு தாங்களும் மண்ணோடை மண்ணாப்போனவை…..!

எங்கடை இனம் அழிஞ்சு போச்சண்ணை கனக்க பிள்ளையள் பிறக்க வேணும்…..இந்த நாடுகள் மாதிரி எங்கடை சனத்துக்கு கூடக் குழந்தை பெறுகிறவைக்கு ஊக்குவிப்பா நாங்கள் உதவியளைக் குடுத்து எங்கடை சனத்தைப் பெருக்க வேணும்.

நான் விடாமல் கதைச்சுக் கொண்டு போனதையும் வெட்டிக்கொண்டு அண்ணை குறுக்காலை பாஞ்சார்…..

தங்கைச்சி நீர் உவையளை விட்டிட்டு எனக்கு வேறை குடும்பத்தைத்தாரும்….என்ரை மகளும் மருமகனும் உவையின்ரை படத்தைப் பாத்திட்டு சொல்லீட்டினம் உவைக்கு உதவி செய்ய வேண்டாமெண்டு….

அதுக்குமேலை என்ரை கதையைக் கேட்காமல் அண்ணை ரெலிபோனை கட்பண்ணீட்டார்.

000 000 000

24,09.2011

கலோ…..தம்பி நான் யேர்மனியிலயிருந்து…

சொல்லுங்கோக்கா….

உங்களோடை ஒரு அண்ணை கதைச்சவரோ ?

ஓமக்கா…. என்ற அவனது குரல் மாறீட்டுது. இயக்கத்தில இருந்தீரோ ? கடைசியில என்ன நடந்தது ? தலைவர் எங்கை ? எத்தினையாம் திகதி தலைவரை பாத்தமெண்டெல்லாம் கனக்கக் கேட்டவரக்கா……நான் இயக்கத்தில இருக்கேல்லயெண்டே சொல்லீட்டனக்கா…..அவர் கதைச்சதுகள் கொஞ்சம் பயமாவும் இருந்ததக்கா…
எங்கடை குடும்பப்படத்தில வடிவான உடுப்புப் போட்டிருக்கிறமாம் படத்தைப்பாக்க வசதியானாக்கள் மாதிரியிருக்கிறமாமெண்டெல்லாம் கதைச்சாரக்கா….. சரியான கவலையாக்கிடக்குதக்கா…. நாங்கள் படத்தில போட்டிருந்த உடுப்பு எங்களுக்கு காம்பில கிடைச்சதக்கா….. உங்களுக்கு அனுப்பிறதுக்காகத்தானேக்கா ஸ்ரூடியோவில போய் படமெடுத்தனாங்கள்…. அவன் அழுதான். அவன் தொலைபேசியை அவனது மனைவியிடம் கொடுத்தான்.

எங்களுக்கெண்டு இப்ப ஒண்டுமில்லையக்கா….இருக்கிறது தகரக்கொட்டிலக்கா ,தண்ணி வசதியில்லை , ரொயிலெட் வசதியில்லை, நான் இந்தப் பிள்ளை வயித்தோடை ரொயிலெட்டுக்கு போறதெண்டா வெளியில தூரமாத்தான் போயிருக்கிறனான். சமைக்கிறதுக்குக்கூட நல்ல பாத்திரங்களில்லையக்கா. 1ம் திகதி பிள்ளை பிறக்கப்போகுதக்கா ஆனா பிள்ளைக்கான சாமானுகள் கூட ஒண்டும் வாங்கேல்லயக்கா… அவனது மனைவியும் அழுதாள்.

சரி விடுங்கோ அழாதையுங்கோ…..எல்லாருக்கும் உங்கடை நிலமை விளங்காது. வேறையாரையும் ஒழுங்கு செய்யிறன்.

அவனதும் அவனது மனைவியின் அழுகையும் தான் அந்தரமாக்கிடந்தது. ஒருகாலம் அவனுக்காக தனியாக வாகனம் முதல் காவலாள் வரையும் இருந்தது. ஆனால் இயக்க வேலை தவிர்ந்த தனது சொந்த அலுவல்களுக்காக அவனிடம் ஒரு சயிக்கிள் தான் இருந்தது.

சமாதான காலத்தில் எத்தனையோ வசதிகளை எத்தனையோபேர் பெற்றிருந்த போதும் அவன் கிளிநொச்சி வீதியில் சயிக்கிளில் தான் திரிந்தான். அவனுக்காக கிடைத்த வசதிகள் என்றால் கணணி மட்டும்தான். அதுவும் அவனது வேலைக்குத் தேவையானதால் கணணி வசதியைப் பெற்றிருந்தான்.

எப்போதும் அவன் அயன்பண்ணி அழகாகவே ஆடைகளை அணிவான். இருக்கிற ஆடைகளை துப்புரவாகத் தோய்த்து அயன்பண்ணித்தான் போடுவானாம். அவனது நண்பர்கள் சொல்வார்கள்.

24.09.2011 அன்று பின்னேரம் அவனது விபரத்தை அனுப்பிய அவனது தோழன் எங்கள் தொடர்பாளன் தொடர்பு கொண்டான்.

அக்கா அவன் சரியாக்கஸ்ரப்படுறான். இண்டைக்கும் அவன்ரை வீட்டை போனனானக்கா. வேணுமெண்டா நான் ஒரு போட்டோக்காரரைக் கூட்டிக் கொண்டு போய் அவன்ரை உண்மையான நிலமையை படமெடுத்துத் தரட்டேக்கா….? அவன்ரை நிலமையை வேணுமெண்டா நேரிலை வந்து பாக்கச் சொல்லுங்கோக்கா.

குழந்தை பிறக்கப்போகுது ஏதும் உதவினீங்களெண்டா நல்லமக்கா. இல்லது ஒரு சுயதொழிலுக்கு ஏதாவது செய்து விட்டாலும் நல்லம். இயல்பில அவன் ஒரு ஒதுங்கின சுபாவமக்கா. இயக்கத்தில இருந்த காலத்திலயும் தனக்கெண்டு ஒண்டும் வாங்கமாட்டானக்கா.

அந்தத் தொடர்பாளன் அவனைப்பற்றி நிறையச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன்கூட ஒரு காலையிழந்தவன். மற்றக்கால் முறிவு கையொன்று முளங்கையின் கீழ் இயக்கமில்லை….ஆனால் தன்னைப்போன்ற நிலையில் இருக்கும் சக தோழனுக்காக இரக்கப்பட்டான்.

எனக்கு விளங்குது ஆனால் இஞ்சை எல்லாருக்கும் விளங்காது தம்பி. பாப்பம் வேறையாரையும் ஒழுங்குபடுத்துவம். அடுத்த கிழமை 10ஆயிரம் ரூபா அனுப்பிவிடுறென் குடுத்துவிடுங்கோ. ஏதாவதொரு ஒழுங்கைச் செய்வம்.

02.10.2011. தொடர்பாளன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான்.

அன்புள்ள அக்கா,

நீங்கள் *** மூலம் அனுப்பிய 10ஆயிரம் ரூபா கிடைத்தது. 01.10.2011 எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. உங்கள் உதவியால் பிள்ளைக்கான சாமான்கள் வாங்கினோம். உயிருள்ளவரை உங்களது இந்த உதவியை மறக்கமாட்டோமக்கா…..என அவனது கையெழுத்துக்கடிதம் தொடர்ந்தது……
02.10.2011

துயரங்கள் தொடரும்……………….

http://mullaimann.blogspot.com/2011/09/blog-post.html

Wednesday, September 21, 2011

காலம் கரைத்துவிட்ட வசந்தங்கள்.

வேலை முடித்து வீட்டுக்குள் கால் வைத்த போது * காதுக்குள் நுளைந்த பாடல் அது….வானுயர்ந்த சோலையிலே நானிருந்து பாடுகிறேன்*. இதயக்கோவில் படத்தில் மோகன் அம்பிகாவின் நடிப்பில் வெளியான படம். இதுவரை படத்தைப் பார்க்கவில்லை. எனது 13வது 14வது வயதில்1987 – 1988 வரையான காலத்தில் கேட்ட பாடலென்றுதான் ஞாபகம்.

அந்தப்பாடல்களை அந்தப்படங்களை எனக்கு வரிதப்பாமல் சொல்ல ஒருத்தியிருந்தாள். படிப்பு அது தவிர்ந்தால் எதுவும் அனுமதியில்லாத எனது வீட்டுச் சூழலிலிருந்து அவளது வீடு வித்தியாசமானது.

அவளது அயல்வீட்டில் வாரஇறுதி நாட்களில் விடிவிடிய சினிமாதான். அந்தக்கால அமலா , நதியா ,மோகன் , சுரேஸ் , கார்த்திக் என எல்லாருடைய படங்களும் ஓடும். அவளது அம்மா அப்பா எல்லாரும் கூடியிருந்து அயல்வீட்டில் படம் பார்ப்பார்கள். சிலவேளைகளில் சினிமாக் கொட்டகைகளுக்கும் அவள் போனதாகச் சொல்வாள். அவளுக்குத் தெரியாத பாடல்களே இல்லையெனும் அளவு அவள் எல்லாப்பாடல்களையும் ஞாபகம் வைத்துப் பாடிக்காட்டுவாள்.

அவளும் நானும் அதிகம் பேசத் தொடங்கியது உறவாடத் தொடங்கியது 6ம்வகுப்பு சித்தியடைந்து1986 வசாவிளான் மத்திய மகாவித்தியாலத்திற்குப் போன நேரம்தான். நான் குப்பிளான் விக்னேஸ்வராவிலிருந்து போக குரும்பசிட்டி பரமானந்தாவிலிருந்து அவளும் வசாவிளானுக்கு வந்தாள். எனது வகுப்பிற்கே அவளும் வந்தாள். புதிய முகங்கள் நடுவில் எனது ஊர்க்காரி அவளுடன் தான் போயிருந்தேன். உயரவமானவர்களை பின்வரிசையில் இருத்தினார்கள். அத்தோடு நானும் அவளும் இன்னும் 3பேரும் எங்கள் வகுப்பில் அதிக உயரமாகையால் கடைசி மேசையில் எங்கள் படிப்பு ஆரம்பமானது.

அவள் குரும்பசிட்டியால் வசாவிளானுக்கு வந்துவிடுவாள். நான் பலாலி வீதியால் போய்விடுவேன். கிடைக்கின்ற இடைவெளிகளில் அவளிடமிருந்து படக்கதையும் பாட்டும்தான் கேட்டுக் கொண்டிருப்பேன்.

அவள் சொல்லும் படங்களை நானும் பார்க்க விரும்புவேன். வீட்டில் சினிமாவென்று சொன்னாலே சொல்லத் தேவையில்லை. அம்மா அடிக்கடி படிப்பு படிப்பென்றுதான் ஓதிக்கொண்டிருப்பார்.

அப்பா வசந்தமாளிகை படத்தில் சிவாஜி கணேசனின் , வாணிசிறியின் நடிப்பையும் வசனங்களையும் பாடமாக்கி கள்ளடித்துவிட்டு ஊரெல்லாம் கேட்கப் பாட்டுப்பாடுவார். தனது இழந்துபோன காதலியின் வேலியில் போய் நின்று வெறியில் வசந்தமாளிகையை புதுபுதுப்பித்து உரைப்பார். வேலியைப் பிரித்துக் கொண்டு வந்து வெட்டு விழும்போல வேலிக்கால் குரல்கள் வரும். பின்னர் அப்பாவை இழுத்துக் கொண்டுபோய் அம்மாவும் நாங்களும் அப்பாவின் வாயைமூடுவிக்க ஆயிரம் வழிகளைத் தேடுவோம். ஆனாலும் அப்பா ஆளையறியாத வெறியிலும் கண் விழிக்கும் நேரமெல்லாம் காதலியின் பெயரை உச்சரிக்க மறப்பதேயில்லை.

அப்பாவின் சினிமாப்பயித்தியம் எங்களில் ஒட்டிவிடாமல் நாங்கள் படிக்க வேணும் என்பதும் தமிழர்களால் பெரும்பாலும் உச்சரிக்கப்படும் டொக்கர் தொழிலையுமே அம்மா கனவு காணுவா. காதில கொழுவி அம்மாவை நாங்கள் வருத்தம் சோதிக்க வேணுமெண்டது அம்மாவின் கனவு. அயல் பிள்ளைகள் அல்லது பாடசாலை நண்பர்கள் எவருடனும் பழக்கம் வைத்துக் கொள்ள அல்லது போய்வர எதுவித அனுமதியுமில்லை. காலமை பொழுது விடிய முதல் எழும்பிப்படிப்பு , விடிஞ்சா வீட்டு வேலைகளுக்கு உதவிவிட்டு 7.30இற்கு பள்ளிக்கூடம் போய் மதியம் 2மணிக்கு வந்து ரியூசன் படிப்பு மாலை இருளில் வீடு வந்து வளமையான சுழற்சி. அந்த வயதுக்கான விளையாட்டு அயல் பிள்ளைகளுடன் ஓடியாடி உலாத்தல் எதுவுமில்லை.

அம்மாவில் கடும் கோபம்தான் வரும். அதுவொரு சிறைச்சாலை போலவேயிருந்தது. எங்கள் வீட்டுக்கு ஒரு வளவு தாண்டியிருந்த வயிரவர் கோவில் ஆல்விழுதில் ஊஞ்சல் ஆடியும் வாசகசாலையின் முன்னுக்கு கிளித்தட்டு விளையாடுவதற்கும் அனுமதியில்லை. ஊர்ப்பிள்ளைகள் அங்கே விளைாயடுவதை வடக்குப் பக்க வாசல் கதவாலும் யன்னல் கம்பிகளாலும் நானும் தங்கைகளும் வரிசையில் நின்று பார்ப்போம். சிலவேளைகளில் அம்மா வரும் நேரத்தை முன்கூட்டி அறிந்தால் அம்மா வர முதல் ஆலடியில் போய் விளையாடுவோம். அம்மாவின் அரவம் கேட்டால் ஓடிப்போய் புத்தகங்களை எடுத்துப் படிப்பது போல் நடிப்போம். ஆனாலும் அம்மாவின் அந்தச் சிறைச்சாலைக் காவலுக்குள்ளும் அம்மா அறியாமல் தோழிகளுடன் சுற்றியது கீரிமலைக்குப் போனது பலாலிக்கடற்கரை பார்த்தது பலாலி விமான ஓடுதளம் பார்த்ததென நிறைய சொல்லாத சேதிகள். அதெல்லாம் போகட்டும். எனக்குள் இன்று மீண்டும் ஞாபகமாய் வந்த அவளைப்பற்றி அவள் கதைபற்றிச் சொல்லப்போறன்.

அவள் தான் அழகாயில்லையென்று தனக்குள்ளேயே ஒரு தத்துவத்தை வைத்திருந்தாள். தான் உருவத்தால் பெருத்தவள் என்ற தாழ்வுச்சிக்கலை அவளது சினிமாக் கதைகளுக்கு நடுவில் சொல்லிக் கொள்ள மறக்கமாட்டாள். அவளது வரிசையான நேர்த்தியான பற்களும் அவளது நீண்ட தலைமுடியை இரட்டைப்பின்னலாய் கறுத்த றிபனால் கட்டி வரும் அழகை மடிப்புக்கலையாத அவளது வெள்ளைச்சட்டையில் அவள் ஒரு தேவதையென்று சொன்னாள் நம்பவேமாட்டாள்.

முதலாவது றிப்போட் வந்தது. எல்லாப்பாடங்களுக்கும் அவளும் சிறந்த புள்ளிகள் பெற்றாள். சினிமாவும் பார்த்து சினிமாப்பாடல்களையெல்லாம் பாட்டுப்புத்தகம் வாங்கி படித்து எப்படி சிறந்த பெறுபேறுகளையும் பெற்றாள் என்பது எனக்கு விளங்கவேயில்லை.
சிலருக்கு இயல்பாயே எல்லாவற்றையும் கிரகிக்கவும் செய்யவும் கூடிய வரத்தை இயற்கையின் கொடையாய் இறைவனாக நம்பும் சக்தி கொடுத்துவிட்டிருக்கிற வரத்தை அவளும் பெற்றிருந்தாள்.

படங்களில் வந்த நகைச்சுவைக் காட்சிகளையெல்லாம் சொல்லுவாள். அவள் வகுப்பில் இருந்தால் அது எனக்கு புதியதொரு உலகத்தை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும். அவள் பார்த்த சினிமாப்படங்களையெல்லாம் எனது கொப்பிகளில் குறித்து வைப்பேன். படிச்சு முடிய அம்மா சொன்னமாதிரி எல்லாப்படங்களையும் பாக்க வேணுமென்ற ஆசையில். அந்தக் கொப்பிகளுக்குள் ஆயிரமாயிரம் கதைகளை கதைகளுக்கான தலைப்புகளையெல்லாம் எழுதி வைத்ததெல்லாம் அம்மா அறியவேயில்லை.

எங்கள் ஊரில் இயங்கியது இரண்டு தனியார் கல்வி நிலையங்கள். அதில் ஒன்றில் அவள் படித்தாள். மற்றையதில் நான் படித்தேன். இரண்டு நிலையங்களிலும் படிப்போருக்கு ஆளாளுக்கு அவர் பெரிசு இவர் சிறிசென்று சண்டையும் வரும். ஆனால் எங்களுக்குள் எவரைப்பற்றியும் பிரச்சனையில்லை. மாலைநேர வகுப்புகளுக்குச் செல்லும் சாட்டில் அவளோடு நானும் சேர்ந்து போவேன். கிடைத்த தருணங்களை அவளோடு செலவளிப்பதில் அத்தனை பிரியம்.

அடுத்த றிப்போட்டுக்கு முதல் பலாலியிலிருந்த ஆமி வசாவிளான் பள்ளிக்கூடத்தை ஆக்கிரமிக்கப் போவதான அசுகைகள் வெளியாகியது. கேணல்.கிட்டுவின் அறிவிப்பில் வசாவிளான் மத்தியமகாவித்தியாலயத்தின் கூரைகளும் கதவுகளும் கழற்பட்டுக் கொண்டிருந்தது.

ஒரு மாலைநேரம் அந்தச் செய்தி எங்கள் ஊர்வரையும் வந்தது. பாடசாலைப் பொருட்கள் புன்னாலைக்கட்டுவன் வழியாய் இடம்மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கள் அழகான பள்ளிக்கூடத்தின் நாங்கள் ஆசையுடன் ஏறியிறங்கும் மேல்மாடிக்கட்டடம் குரோட்டன்கள் அழகான தாமரைக்குளம் எல்லாம் தனித்து எங்கள் கனவுகள் புதைந்த பள்ளிக்கூடம் அகதியாகிப்போனது. நாங்களும் அகதியாகினோம். எங்கள் சமாதிகோவிலடி வீடுகளெல்லாம் உயர்பாதுகாப்பு வலயமாகி நாங்களெல்லாம் இடம்பெயர்ந்தோம்.

அடுத்து வந்த மாதங்கள் எறிகணை வீச்சு எங்களுடன் படித்த புன்னாலைக்கட்டுவன் பதுமநிதியும் அவளது அப்பா இளையதம்பியும் அவளது அக்காவும் இறந்து போன துயரம் அத்தோடு மட்டுமில்லாது எங்கள் ஊரிலும் பல உறவுகள் ஆமியின் செல்லிற்கும் கெலியின் சூட்டிற்கும் இறந்து போனார்கள்.

1987 “ஒபரேசன் லிபரேசன்“ நெல்லியடியில் கரும்புலி மில்லரின் தாக்குதலோடு முடிந்து இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தது. அகதியான நாங்கள் திரும்பவும் எங்கள் வீடுகளுக்குப் போனோம். பற்றைகள் மண்டிய வளவுகளைத் துப்பரவாக்கி புதிய மரங்களை நட்டோம். புதிய புதிய அழகிய பூக்கன்றுகளை நட்டோம். நம்பிக்கைகள் எங்கள் மனங்களில் சிகரமாக உயர்ந்தது. சண்டையில்லை சமாதானம் வந்துவிடுமென்று நம்பினோம். இயக்கத்தில் இருந்தவர்கள் பலர் படிக்கப்போனார்கள். பலர் வெளிநாடுகளுக்கு வெளிக்கிட்டார்கள்.
அகதியான எங்கள் வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் மீண்டும் புதிதாய் பிறந்தது. அவளும் பாடசாலைக்கு வந்தாள். திரும்பவும் வகுப்புப் பிரிப்பில் அவளும் நானும் ஒரே வகுப்பில் தான். அவளுக்கும் எனக்கும் 14வயதாகியிருந்தது. அவள் ரியூசன் போய்வரும் வழியில் சில சயிக்கிள்கள் அவளைச் சுற்றுவதாகச் சொன்னாள். அவள் பாடிய பாடல்களையெல்லாம் மிகுந்த இரசனையுடன் படித்தாள். பாடநேரங்களில் புத்தகத்துக்கு நடுவில் பாட்டுப்புத்தகத்தை வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

அவளைச் சுற்றியோர் கோட்டையை உயர்த்தி அந்த உலகில் அவள் சஞ்சரிக்கத் தொடங்கினாள். நல்ல கெட்டித்தனமாகப் படித்தவள் படிப்பிலிருந்து கவனத்தைச் சிதைக்கத் தொடங்கினாள். பலர் தனக்கு கடிதங்கள் எழுதுவதாகச் சொன்னவள். ஒருநாள் எங்கள் ஊரவன் ஒருவனின் பெயரைச் சொல்லி அவன் தன்னைக் காதலிப்பதாய் சொன்னாள். தானும் அவனைக் காதலிப்பதாய் சொல்லிச் சிரித்தாள். அவளது காதல் கதைகள் கேட்கப்பயமாயிருந்தது. அம்மா அறிந்தால் அவளுடன் பழகுவதையும் நிறுத்திவிடுவா. நான் பார்க்க முடியாத சினிமாக்கதைகளைச் சொல்ல அவள் இல்லாமல் போய்விடுவாள் என்ற சுயநலம் என்னை ஆட்கொண்டது.

அவளது அந்தக் காதலன் 5ம் வகுப்பு வரையும் தான் படித்திருந்தாகக் கேள்விப்பட்டேன். அவனது குடும்பத்தில் படிப்பு வாசனை சற்றுமில்லை. அவனது அண்ணன்கள் அக்காக்கள் மிகவும் இளவயதிலேயே திருமணம் செய்து கொண்டிருந்தனர். அவனது அக்காக்களுக்கும் அண்ணன்களுக்குள் 4,5,6,7 என குழந்தைகள் பிறந்திருந்தனர். காலையில் தோட்டங்களுக்குக் கூலிவேலைக்குப் போவார்கள். மாலையில் மம்மலுக்குள் வருவார்கள். புழுதியில் குளித்துக் குழந்தைகள் இருக்க சமைப்பார்கள் சாப்பிடுவார்கள் வீட்டின் ஆண்கள் சில நேரம் அதிகம் குடித்துவிட்டு சண்டை பிடிப்பார்கள். பெண்கள் ஆண்களின் அடிதாங்காமல் ஓலமெடுத்து அழுவார்கள் ஒப்பாரி வைப்பார்கள். இரவுகளில் 10வீடு தாண்டியும் அவர்களது சண்டைச் சத்தம் கேட்கும். அத்தகையதொரு குடும்பத்தில் வாழும் ஒருவன் 16வயதில் கூலிவேலைக்குச் சென்றுவரும் அவனை இவள் காதலித்தாள். அவனது வீட்டு ஆண்கள் போல் உன்னை அடிக்கமாட்டானா என்று கேட்டதற்குச் சொன்னாள். அவன் றெம்ப நல்லவன். என்னைக் கண்கலங்காமல் பாப்பனெண்டு சொன்னவன்.

இப்போது அவளது பள்ளிக்கூடப் பாதையில் ரியூசன் பாதையில் எல்லாம் அவன் வரத் தொடங்கினான். அவள் அவனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள். அவனது தமிழ்க்கொலைக் காதற்கடிதங்களைத் திருத்தி வாசித்துக் கொண்டிருப்பாள். தனது அழகான கையெழுத்தால் அவனுக்காக பாடநேரங்களில் கடிதம் எழுதினாள். அவள் மிகவும் மகிழ்ச்சியாய் நடமாடினாள். அதிகமான காதல் பாடல்களையெல்லாம் அழகாகப் பாடக்கற்றுக் கொண்டாள்.

உங்கடை அம்மா பேசமாட்டாவோ ?

கேட்ட எனக்குச் சொன்னாள்.

எங்கடையம்மாவும் காதலிச்சுத்தான் கலியாணங்கட்டினவா….

என்னுடைய அம்மாவும் அப்பாவை காதலிச்சுத்தானே கலியாணம் கட்டினவை…?
ஆனால் அவையளுக்குள் அந்தளவு அன்பு இருந்ததாய் தெரியேல்ல…?

அம்மாவின் அழுத முகம் , தனது வாழ்வை அப்பாவுக்காக தியாகம் செய்ததாய் சொல்லிக் கொள்ளும் தோல்வியும்தான் அம்மாவின் கதைகள் பற்றிய எனது அறிதல். இவள் எப்படி….? எனக்குள் பெரும் குழப்பத்தை உருவாக்கியது அவளது காதல்.

000 000 000

மீண்டும் போன எங்கள் பாடசாலையில் கட்டடங்கள் வெறுமையாகி கூரைகள் இல்லாது மொட்டையாகியிருந்தது மண்டபங்கள். தற்காலிக ஓலையால் வேயப்பட்ட கூரைகளின் கீழ் எங்கள் கல்வியும் கற்பித்தலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

1988ம் ஆண்டு தைமாதம் எனது வெள்ளைச் சட்டையில் சிவப்புகறைகள் படிந்ததை அவள்தான் முதலில் காட்டினாள். அதைக்கேட்டு அழுத என்னைச் சமாதானப்படுத்தி சிவபாதம் ரீச்சரிடம் சொல்லி ஏ.எல் அக்காக்கள் இருவரோடு என்னை வீட்டுக்கு அனுப்ப வைத்ததும் அவள்தான்.

எனது ரியூசன் தோழிகளுக்கெல்லாம் அவள் தகவல் சொன்னாள். எனக்குள் இன்று வரையும் காயமாய் கடிதமாய் கதைகளாய் கவிதைகளாய் இனிய ஞாபகமாய் இருக்கிற என் அந்தநாள் தோழி ஏழாலை நதியாவுக்குக்கும் புதினம் சொல்லியதும் அவள்தான்.

ஊரைக்கூட்டி பந்தல் போட்டு மணவறை வைத்து கம்பளம் விரித்து ஆராத்தியெடுத்து அழகான சேலையுடுத்தி போட்டோ எடுத்து எனக்கு அம்மாவினதும் அப்பாவினதும் ஏற்பாட்டில் நடந்த கொண்டாட்டத்திற்கும் அவள் எனது பிரத்தியேக அழைப்பின் பேரால் வந்திருந்தாள். கனகாம்பரமாலை கட்டி சிவத்தப்பாவாடை சட்டையும் வெள்ளைத் தாவணியும் போட்டு எனக்குப் பக்கத்தில் வந்து நின்றாள். என்றும் போல அவளது நகைச்சுவையும் சிரிப்பும் எனக்குள் புத்துயிர்ப்பைத் தந்தது.

கொண்டாட்டம் முடிந்து பள்ளிக்கூடம் செல்லத் துவங்கினேன். அவள் எங்கள் ஊரில் நடைபெற்றுக் கொண்டிருந்த காதல் கதைகளையெல்லாம் சொன்னாள். கோவில் திருவிழாவில் காணாமற்போன சோடிகள் பற்றியெல்லாம் சொன்னவள் ஒரு நாள் அவளும் அவனோடு ஓடிப்போனாளென்ற செய்தி எனக்கும் வந்தது.

அவள் ஓடிப்போவதற்கு முதல் ஒருநாள் எனக்கு ஒரு பரிசு தந்தாள். ரகுமானின் படம் போட்ட பாட்டுப் புத்தகம் அது. என்னை வைச்சிருக்கச் சொன்னாள். அத்தகைய புத்தகம் என்னிடம் இருப்பதை அம்மா அறிந்தால் சர்வாதிகாரி கிட்லராக மாறிவிடுவதுடன் அம்மாவின் கையில் எட்டும் எல்லாவற்றாலும் சாத்துவாங்க வேண்டுமென்று சொன்னேன். அவள் என்னை நக்கலடித்துச் சிரித்தாள். பயந்தாங்கொள்ளியென்று பரிகசித்தாள்.

சர்வாதிகாரி கிட்லரின் அடிக்குப்பயந்து அழகான ரகுமானின் படம்போட்ட பாட்டுப்புத்தகத்தை வாங்கவில்லை. அந்தப்புத்தகத்தில் முன்பக்கத்தில் இருப்பது ரகுமானென்றும் ரகுமானின் படப்பாடல்கள் அவையெனவும் சொன்னாள். படம் பார்க்காமல் முதல் பிடித்த நடிகராக ரகுமானுக்கு நான் ரசிகையாகிவிட்டேன்.

அடுத்த வருடத்துச் சிவராத்திரியில் எங்கள் வயிரவர் கோவிலில் ஓடிய சினிமாப்படத்தில் ரகுமான் , பிரபு நடிப்பில் வெளியான ஒருவர் வாழும் ஆலயம் படம் போட்டார்கள். வதனிமாமி ஊடாகக் கேள்விப்பட்டேன். எப்பிடியும் ரகுமானின் அந்தப்படத்தைப் பார்க்க வேணுமென்ற ஆசை. அம்மாவுக்குத் தெரியாமல் அம்மம்மாவிடம் இரகசிய அனுமதி வாங்கி வதனிமாமி இதயம்மாமியாக்களுடன் படம்பார்க்கப் போனேன்.

ஊர்ப்பிள்ளைகள் பெரியவர்கள் படம்பார்க்கக் காத்திருந்தார்கள். எனது முதலாவது சினிமாக்கனவு நிறைவேறிய நாள். நான் எதிர்பார்த்த ரகுமானின் படம் வராமல் பழசுகளின் விருப்பத்தில் கறுப்பு வெள்ளைப்படம் பராசக்தி தான் முதலில் ஓடியது.

2வதாக ரகுமானின் படம் துவங்கியது. அந்தச் சிறிய தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளிருந்து கலர்கலராய் நடிகர்கள் வந்தார்கள். அவள் எனக்குக் கதைசொன்ன சினிமாக்களில் நான் கண்ட சினிமாவுலகம் மிகவும் பெரியதாய் என் முன்னால் விரிந்தது. ஒற்றைச் சிறுபெட்டிக்குள்ளிருந்து இத்தனை அதிசயங்களா ?

அந்த வயிரவர் கோவில் முன் வெளியில் இருளில் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒளியை மட்டும் பரவவிட்டிருந்தார்கள். முன்வரிசையில் வதனிமாமிக்குப் பக்கத்தில் இருந்தேன். என்னிலும் 3வயது மூத்த வதனிமாமி தியேட்டரெல்லாம் போய் படம்பாத்திருக்கிறாள். வதனி மாமிக்கும் பாட்டு படமெண்டால் பயித்தியம்தான். ரயில் பயணம் தியேட்டரில் பாத்திட்டு வந்து ஒருநாள் எங்களுக்கெல்லாம் கதைசொல்லி பாட்டெல்லாம் பாடிக்காட்டியிருக்கிறாள். பிரபுவின் ரசிகர்கள் பிரபுவுக்குக் கைதட்டி ஆரவாரிக்க சிவகுமாரின் ரசிகர்கள் சிவகுமாருக்குக் கைதட்ட ரகுமானின் ரசிகை நானும் ரகுமானுக்குக் கைதட்டினேன்.

வானத்தில் பூத்திருந்த நட்சத்திரங்கள் யாவும் இறங்கி எங்கள் வைரவர் கோவில் வெளியில் கொட்டிக் கிடப்பது போலிருந்தது. அந்த இரவின் அமைதியையும் அழகிய நட்சத்திரங்களை அள்ளி வைத்திருக்கும் மேகத்தின் நடுவில் நடக்கின்றதான மிதப்பு. முதல் பார்க்கும் சினிமாவின் நாயக நாயகிகள் அந்த வெளியில் இறங்கி வந்திருப்பது போலிருந்தது.
எடியே எழும்படி…..! எழும்பு…! வதனிமாமியின் குரல் கேட்டு எழும்பிய போது பொழுது விடிந்துவிட்டிருந்தது. என்னைப்போல பல சிறுவர்கள் அங்கே அந்த மண்ணுக்குள் நல்ல நித்திரை. வதனிமாமி இதயம் மாமி இன்னும் சிலரும் நித்திரையான எல்லாருக்கும் கரியால் மீசை வைத்து விட்டிருந்தார்கள். *ஒருவர் வாழும் ஆலயம்* பார்க்கும் ஆசையில் போய் கடைசியில் மண்ணுக்கை நித்திரை கொண்டதுதான் மிச்சம். ரகுமானின் படம் பார்க்கும் கனவு நிறையாமல் போனது சோகம் தான்.

வீட்டுக்கு ஒளித்து வந்தேன். ஆனால் கிட்லர் அம்மாவுக்கு இரகசியம் தெரிஞ்சு கிழுவங்கட்டையோடு அம்மா நிண்டா. சர்வாதிகாரி கிட்லர் அம்மாவிடம் அடிவாங்காமல் தப்ப அன்னை தெரேசாவின் வடிவான அம்மம்மாவிடம் அடைக்கலமானேன்.

கிட்லர் அம்மா அம்மம்மாவைப் பேசிக்கொண்டு போனா. குமர்ப்பிள்ளையை இரவில படம்பாக்க விட்டிருக்கிறா. படம்பாத்தா படிப்பெங்கை ஏறப்போகுது….ஓமடியாத்தை போ நீ படிச்சுக் கிழிச்சனிதானே….அம்மம்மா புறுபுறுத்துக் கொண்டிருந்தா.

அது இந்திய இராணுவ காலம். காலையும் மாலையும் அவர்களது ஒலிபரப்பிலும் இலங்கை வானொலியில் பொங்கும் பூம்புனலிலும் புதுப்புதுப்பாடல்கள் வரும். எங்காவது வானொலிச் சத்தம் கேட்டால் அந்தத் திசைநோக்கியே எனது செவிப்புலன் வேரூன்றிவிடும். அன்றோடு அம்மாவின் நேரடிக்கண்காணிப்பில் கொண்டு செல்லப்பட்டேன்.

அவளை வீதியில் காணுவேன். அவள் சேலையுடுத்துக் கொண்டு போவாள். அவளுடன் ககைக்க முடியாது தடைச்சட்டம் அம்மாவிடமிருந்து பிறந்திருந்தது. அவள் குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறாள் எனச் சொன்னார்கள். அவளை அம்மாவாகப்போகிற பெரிய வயிற்றுடன் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஒருநாள் நிறைவேறியது. அவள் கிளினிக் போய்விட்டு ஒரு நாள் பகல் 11மணிபோல் எங்கள் வீட்டடியால் நடந்து போனாள். என்னைப் பாத்திட்டுத் தெரியாதமாதிரிப் போனாள்.

இந்திய இராணுவம் முளத்துக்கு முளம் சென்றிபோட்டு இருந்த வீதிகள் தாண்டி அவள் ஒருநாள் குழந்தைப்பேற்றுக்காக யாழ் பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அவளது முதல் பிரசவம். அவளது குழந்தை உலகைக்கண்திறந்து பார்த்த மறுநாள் அந்தப் பெரியாஸ்பத்திரியில் ஒரு மனிதப்படுகொலை நிகழ்ந்தேறியது. பல உயிர்கள் அங்கு பலியெடுக்கப்பட்டது. தங்கியிருந்த நோயாளிகள் ஆளாளுக்குத் தப்பியோடினர்.
அவள் தனது குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு வீட்டை வந்திட்டாளாம்….பஞ்சாய் செய்தி ஊரெல்லாம் பரவியது. பின்னர் அவளது அம்மாவும் வேறு பெரியவர்களும் குறுக்குப் பாதைகளால் போய் யாழ் பெரியாஸ்பத்திரியில் அவளது குழந்தையைக் கொண்டு வந்துவிட்டதாய் 5வது நாள் செய்தி அடிபட்டது.

000 000 000

காலம் யாரினதும் இடைஞ்சலுமின்றித் தன்பாட்டில் போய்க்கொண்டிருந்தது. இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பம் அதன் பின்னான எங்கள் ஊர்பிரிவு…..இடம்பெயர்தல் என எங்கள் பயணங்களில் 1992 மார்ச்மாதம் 5குடும்பம் இணைந்திருந்த அவள் இருந்த வீட்டுக்கு முன்னால் நாங்களும் போயிருந்தோம். அவள் 3பிள்ளைகளுக்கு அம்மாவாகியிருந்தாள்….. அவளது பழைய முகம் அவளிடமில்லை. வயதிற்கு மீறிய முதுமையும் குடும்பபாரமும் அவள் மீது விழுந்து கிடந்தது. அவளது வாழ்வு மாறிப்போனது.

000 000 000

கிட்டத்தட்ட 10 வருடங்கள் கடந்த 2002…சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்ட நேரம். வவுனியாவிலிருந்து வன்னிக்குப் போவதற்கான பாஸ் அனுமதிக்காக பிறவுண் கொம்பனியில் காத்திருந்த நேரம் அவளது சித்தியை அங்கே கண்டேன். அவளது சித்திக்கு என்னை ஞாபகமில்லை மறந்துவிட்டிருந்தா.

உறவினர் ஒருவரிடம் அவளைப்பற்றி விசாரித்த போது இப்படிச் சொன்னார்கள்.….,
அவளது காதல் கணவன் தற்கொலை செய்துவிட்டானாம். இவள் உயிரோடு இருக்க அவனை நம்பி பள்ளிக்கூடம் போக வேண்டிய வயதில் அவனை மட்டும் நம்பித் தனது எதிர்காலத்தை இருளாக்கிப் போனவளை விட்டு ஊரில் ஒருத்தியுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாம். அவன் குடித்துவிட்டு அவளை நெடுலும் அடிப்பானாம்.

அவனது கள்ளத் தொடர்பு அவளுக்குத் தெரிய வந்து அவளுடன் முரண்பட்டானாம். கள்ளக்காதலி நல்ல வடிவான பெட்டையாம். அவளும் அவனோடு வாழ வேணுமெண்டு அடம்பிடித்தாளாம். கடைசியில் கள்ளம் ஊரெங்கும் தெரியவர அவன் தற்கொலை செய்து கொண்டானாம். அவள் தனது குழந்தைகளுடன் தனித்துப் போனாள். இளவயதுக்காதல் திருமணம் அவளை இளவயதிலேயே விதவையாக்கி குழந்தைகளோடு கூலி வேலைக்குச் சென்று தனது குழந்தைகளைப் பராமரித்தாளாம்.

2004இல் அவளது பெண்குழந்தை நோயுற்றிருப்பதாகச் சொன்னார்கள். கண்டுபிடிக்கப்படாத நோயால் வலிதாங்கியது அவளது குழந்தை. ஓடியாடிய குழந்தை படுக்கையில் போனது. அதன் பின்னர்தான் அவளது பெண் குழந்தையின் எலும்பில் புற்றுநோயென்று அறியப்பட்டது. அவளது குழந்தையும் நோயின் கடைசி எல்லையைத் தொட்டு இறந்துபோனது. 30வயதிற்குள் அவள் வாழ்வு எல்லாச்சுமைகளையும் தாங்கி துயரப்பட ஏதுமில்லாமல் நொந்து போனாள்.
2010இல் முகப்புத்தகத்தில் உறவு ஊரவர் என நண்பர்களாக்கிய ஒரு உறவின் அல்பத்தில் அவளைப் பார்த்தேன். திரும்பி அவளைப்பற்றித் தேடியதில் கிடைத்த விடை. அந்தப் படத்தில் நல்ல அழகான ஒரு இளைஞனைக் காட்டிச் சொன்னார்கள். அதுதான் அவளது மகன். தகப்பன் மாதிரி நல்ல வெள்ளைப்பொடியனெல்லே…? அடையாளம் காட்டிய நட்பு எனக்குச் சொல்லியது. அந்த மகன் பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியிருக்கிறானாம். பண உதவி தாராளமாகக் கிடைக்கிறதாம். வெளிநாட்டில் உள்ள உறவுகளால் அவள் நல்ல வசதியோடு வாழ்கிறாளாம்.

உவ லேசுப்பட்ட ஆளில்லைத் தெரியுமோ…? ரெண்டு மூண்டு வருசத்துக்கு முன்னை காசைக்கண்டவுடனும் பெட்டைக்கு கால்கை புரியேல்ல…..ஆரோ ஒரு வான்காரனோடை தொடர்பிருந்ததாம்…..பிறகு ஆக்கள் பேசி அவனை விட்டிட்டுதாம்…..ஊரவர் ஒருவரின் வாயிலிருந்து இந்தச் செய்தி வந்தது.

திருமண வயதை எட்டாத வயதில் அவள் காதலித்தாள். காதலுக்கான அர்த்தம் பரியாத அவளது காதலுக்கு ஆதரவு கொடுத்த அவளது அம்மா அப்பாவின் அக்கறையீனம்….திருமணம் என்றால் வாழ்க்கையென்றால் புரிந்து கொள்ள முடியாத வயதில் அவள் குழந்தையைப் பெற்ற போது....காதல் கணவன் கள்ளத் தொடர்பு தற்கொலை வரை பேசாமலிருந்தவர்கள்……

இப்போது எல்லாம் அறிந்த வயதில் அவள் ஒருவன் மீது காதல் கொண்டிருந்தாள் என்பதனை ஏற்கமுடியாது அவளை விமர்சித்து கலாசாரம் பண்பாடு பேசுகின்ற எல்லார் மீதும் கோபம் வருகிறது. அவள் துன்பத்தோடு வாழ்ந்த போது இவர்களெல்லாம் எங்கே போனார்கள்…..?

08.06.2011

Tuesday, September 13, 2011

தொடரும் துயரங்கள்…..!

இரவு ரண்டு மணியிலிருந்து அந்த அழைப்பு வந்து வந்து கட்டாகிக் கொண்டிருந்தது. சத்தத்தை நிறுத்தி வைத்திருந்த தொலைபேசியின் வெளிச்சம் அடிக்கடி மின்னி மின்னி மறைந்தது. இரவு பகல் என வித்தியாசம் பாராமல் இப்படித்தான் இப்போது வீட்டுத் தொலைபேசியும் கைபேசியும் புதியபுதிய குரல்களால் நிறைகிறது.

பகல் பலரது இலக்கங்களுக்கு அழைத்து அவர்களது தேவைகள் அவசரங்களை பதிவு செய்து கொண்டேன். ஆனால் அந்த இலக்கத்தை மறந்து போனேன். அன்று மாலை 17.44மணிக்குத் திரும்பவும் அந்த இலக்கம் வந்தபோதுதான் ஞாபகம் வந்தது.

000 000 000


எதிர்முனையில் ஒரு பெண்குரல்...
நான் யேர்மனியிலிருந்து***……என நான் ஆரம்பிக்க…..
நான் உங்கடை ******* பெறாமகள் *****…. அவள் தன்னை ஒரு அன்னியமான ஒருத்தியை அறிமுகம் செய்வது போல் அறிமுகம் செய்தாள். அடியாச்சி….என்ன இது ஆரோ பிறத்தியார் மாதிரி கதைக்கிறியே…? அவள் குரல் உடைந்து தடுமாறியது……

சரி அம்மா என்ன செய்யிறா…? நான் அவளது கதைகளைத் திசைமாற்றினேன்.

அம்மா தான் உதவி…கொழும்பில ஒரு கடையில நிக்கிறா….அவாக்கும் வயசு போட்டுத்தான….
எத்தின பிள்ளையள்….? 4பேர்….மூத்தவன் இந்த வருசம் ஏ.எல் எடுக்கப்போறான்….மகள் ஓ.எல் எடுக்கப்போறாள் கடைசிக்கு 9வயது….. மாமியாக்களோடைதான் இருக்கிறேன்…. அவர் பூசாவில….. ஆளைப்பாக்கவும் கனநாள் போகேல்ல….எங்கை வருமானமொண்டும் இல்லைத்தானே….மாமா மாமியும் வயசுபோனாக்கள்….பிள்ளையளின்ரை படிப்பு செலவுகளெண்டு ஒரே தலையிடி…..
அவள் தனது கதைகளைச் சொல்லிக் கொண்டு போன பாதியில் கேட்டேன்….
அப்ப தம்பி என்னேயிறான்….?
அவன் உதவியில்லையோ…?
அதவிடு….ஒருதரும் உதவியில்லை….சலிப்போடு சொன்னாள்.

என்னை உதவிசெய்யென்று கேட்காமல் தனது வாழ்வுப்பாடுகளைச் சொன்னாள். கிட்டத்தட்ட 52நிமிடம் கதைச்சேன்.
சரி பிள்ளையளுக்குச் சமைக்க வேணும்…..இன்னொரு நாள் எடுக்கிறனே…..
மறக்காம எடு கனக்க கதைக்க வேணும்போலையிருக்கு…..கேட்டுக் கொண்ட அவளது வேண்டுதலுக்கு ஓம் சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தேன்.

000 000 000


காலம் 1986…..

எங்கள் குடும்பத்தில் ஒரு திருமணம்..அவளது மாமாவுக்கு நிச்சயமானது. அவளது ஊர் தென்மராட்சியின் ஒரு கிராமம். கொடிகாமத்திலிருந்து எங்கள் வீட்டுக்கு பழக்கமான ஒருவரின் ஏற்பாட்டால் அந்தத் திருமணம் ஒழுங்காகியது. யேர்மனியில் இருக்கும் அவளது மாமாவுக்கு எங்கள் வீட்டிலிருந்து மணமகள் யேர்மன் போக காத்திருந்தது.

சம்பந்தபகுதிக்கலப்பில் இரு வீடுகளும் பேச்சுகள் முடிந்து சம்பந்தம் கலக்கும் நாள் வந்தது. எங்கள் ஊரிலிருந்து பஸ் எடுத்து நெடுந்தூரத்தில் இருந்த அவர்களது ஊருக்குப் பயணமானோம். அந்த ஊரின் எல்லையை அடைந்ததும் குரங்குகள் தாவித்திரிந்தன. குளங்கள் வெளிகள் மணல் நிலம் வடலிகள் என ஒரு புதிய ஊரின் அறிமுகம்……அங்கேயே தங்கிவிடலாமென்ற ஆசையை அந்த ஊரின் அழகு ஏற்படுத்தியது…..

வாசலில் கும்பம் வைத்துப் போடப்பட்டிருந்த பந்தலிலிருந்து எங்கள் வீட்டு மணமகளை வரவேற்று ஆராத்தி எடுத்தார்கள். அங்கேதான் அவள் முதல் முதலில் அறிமுகமானாள்….அவளின் பின்னொரு சிறுவன்…..அவர்களோடு நாங்கள் விளையாடினோம்…..அவளும் அந்தச் சிறுவனும் என்னை மச்சியென்றார்கள்.

மச்சிமுறையுள்ளவர்கள் நிறைய இருந்தும் யாரையும் அந்த முறைசொல்லியழைக்காத என்னை அவர்கள் மச்சியென்று அழைத்தது எனக்குப் பிடிச்சிருந்தது. அவளும் நானும் அன்றிலிருந்து நல்ல சினேகிதமானோம். அவள் என்னைவிட ஒரு வயதால் மூத்தவள். எங்கள் ஊருக்கு இனிமேல் தான் வருவேனென்றும் சொன்னாள். அவளோடு சேர்ந்து அவளது ஊரின் அழகை அன்று தரிசித்தேன். அவள் வீட்டுக்கு கிட்டவுள்ள குளமொன்றுக்கு கூட்டிப்போனாள்…..அங்கே அவள் நீந்துவதாகவும் சொன்னாள். கிணற்றைத் தவிர எங்கள் ஊரில் குளம் என்பது இல்லை. வீட்டுக்கிணறு தாண்டினால் தோட்டக்கிணறு தோட்டங்களுக்குப் பாயும் தண்ணீர் வாய்க்கால்களைத் தவிர நீரோடைகள் தெரியாத எனக்கு அவளோடு நின்றுவிட வேண்டும் போலிருந்தது. எனது ஆசையை அம்மாவிடம் போய்க்கேட்டாள். அம்மா பார்த்த பார்வையோடு எனக்கு அவளோடு நிற்கும் ஆசையே போய்விட்டது.

திருமணக்கலப்பு முடிந்து எங்கள் வீட்டு மணமகள் அவளது மாமாவிடம் போய்விட்டா. அவளும் அவளது குடும்பமும் எங்களிடம் வந்து போவதும் அவள் பாடசாலை விடுமுறையில் எங்களுடன் வந்து தங்கிவிடுவதும் நடைபெறத் தொடங்கியது.

அவள் தனது அம்மாவைப்பற்றித் தான் அதிகம் சொல்லுவாள். அவளது அம்மா மத்தியகிழக்கு நாடொன்றுக்குப் போய்விட்டதாகவும் காசும் உடுப்புகளும் தனது அம்மா அனுப்புவதாகவும் சொல்லுவாள். அழகான ஆடைகள் அணிந்து வருவாள். கட்டை ஜீன்ஸ் போட்டு பூபோட்ட சட்டையும் போட்டு நல்ல வடிவாக வருவாள். வாசனை மிக்க வாசனைத்திரவியமும் அடித்துக் கொண்டு வருவாள். மத்தியகிழக்கு போன அம்மாவிற்கு நிகராக அவளுக்கான தேவைகள் யாரையும் அவளுக்குப் பெரியம்மாவும் அம்மம்மாவும் செய்வார்கள்.

உங்கடை அப்பா எங்கை….? ஒரு விடுமுறையில் அவள் வந்து நின்ற நேரம் கேட்டேன்.
அவர் அவற்றை அக்காவோட இருக்கிறார்…..யாரோ காதலிச்சவையாம்….அதுக்கு உதவிசெய்ததில அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆரோ வெட்டீட்டினமாம்…..பிறகு அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சிட்டினம்…..நானப்ப சின்னப்பிள்ளையாம்…..ஆனா நான் அப்பாவோடை கதைக்கிறனான்….அப்பாவும் எனக்கு உடுப்பெல்லாம் வாங்கித்தாறவர்…..சந்தோசமாகச் சொன்னாள்.

காலம் 1987….

எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரான குரும்பசிட்டி வரையும் ஆமி வந்துவிட்டதால் எங்கள் ஊரிலிருந்து இடம்பெயர்ந்து போனோம். அம்மா அப்பா எங்கள் ஊரின் தெற்கில் இருக்க பிள்ளைகள் எங்களை சின்னமாமா வாடகைக்கு எடுத்த மல்லாகம் கல்லாரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். இவளும் எங்களோடு அங்கு வந்து நின்றாள். சின்னமாமாவைக்குப் பிறந்த இரட்டைப்பிள்ளைகளில் ஒருவன் இறந்து போக மிஞ்சிய ஓங்காரனை நாங்களும் அவளும் தூக்கி வைச்சிருப்போம். விளையாடுவோம். அவனுக்கு பால்மா கரைத்துக் கொடுக்க அத்தை எங்களுக்குப் பழக்கிவிட்டா.

எங்கள் கையில் பால்மா வந்ததோடு பால்மா கெதியில முடியத் துவங்கீட்டுது. அத்தைக்கு சந்தோசம் தனது மகன் நாங்கள் பால் பருக்குவதால் அதிகம் பால் குடிக்கிறானெண்டு. குழந்தையின் பால்மாவை அவளும் நானும் வாயில் போட்டு விழுங்கிவிடுவதால் தான் பால்மா கெதியில் முடியுதெண்டதை அறியாத அத்தை பலதரம் எங்களிடம் குழந்தையை பால் பருக்கத் தந்துவிடுவா. அவளும் நானும் சேர்ந்து பாத்திரங்கள் கழுவுவோம் சமையலுக்கு காய்கறி வெங்காயம் வெட்டிக் கொடுப்போம். விடுமுறை முடிய அவள் தனது ஊருக்குப் போய்விடுவாள்.

காலம் 1987 ஆடி….

1987 “ஒபரேசன் லிபரேசன்“ நெல்லியடியில் கரும்புலி மில்லரின் தாக்குதலோடு முடிந்து இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தது. அகதியான நாங்கள் திரும்பவும் எங்கள் வீடுகளுக்குப் போனோம். பற்றைகள் மண்டிய வளவுகளைத் துப்பரவாக்கி புதிய மரங்களை நட்டோம். புதிய புதிய அழகிய பூக்கன்றுகளை நட்டோம். நம்பிக்கைகள் எங்கள் மனங்களில் சிகரமாக உயர்ந்தது. சண்டையில்லை சமாதானம் வந்துவிடுமென்று நம்பினோம்.

கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடியில் கரும்புலியாகி வெடித்ததோடு சொன்னார்கள்……இந்திய இராணுவம் வரப்போவதாகவும் அமைதிகாக்கும் படைகளால் எங்களுக்கு தாயகம் வந்துவிடப்போவதாகவும் பேசிக்கொண்டார்கள் சனங்கள்…..

ஒருநாள் மாலை வானத்தில் விமானங்கள் பறந்தது…..மேலிருந்து ஆடியாடி வந்து பொட்டலங்கள் விழுந்தது….அது இந்தியன் ஆமி சாப்பாடு போட்டதாமெண்டு சொன்னார்கள்…..அதையெல்லாம் இயக்கம் தேடித்தேடி எடுத்துக் கொண்டு போனார்கள். கொஞ்சநாளில் புலிகள் ஆயுதங்களை கையளிப்பதாக பல இடங்களில் ஆயுதக்கையளிப்பு நடந்தது. இயக்கத்தில் இருந்தவர்கள் பலர் படிக்கப்போனார்கள். பலர் வெளிநாடுகளுக்கு வெளிக்கிட்டார்கள்.

இந்தியஇராணுவ வாகனங்கள் எங்கள் வீதிகளில் வலம்வந்தன. அந்த நேரம் எங்கள் ஊரில் உலவிய புலிமாமாக்களின் சொற்படி வந்திருந்த இந்தியப்படைகளை வீதிகளில் தோரணம் கட்டி வாழைமரம் கட்டி வீதிகளை அழகாகத் துப்பரவாக்கி வரவேற்றோம். வீதியில் வருகிற அவர்களுக்கு கைகாட்டி எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து மகிழ்ந்தோம்.

1984ம் ஆண்டின் பின்னர் ஆமியை வீதியில் காணுவது அப்போதுதான். அதுவும் இன்னொரு நாட்டு இராணுவம். இனிமேல் எங்கள் கனவுகளில் கெலிகொப்டர் வந்து குண்டு போடாதுஎறிகணை வெடிக்காதென்ற எத்தனையோ கற்பனைகள் எங்கள் சின்ன மனங்களுக்குள் துளிர்விடத் தொடங்கியது.

அமைதிகாக்க வந்த படையோடு யுத்தம் வரப்போகிறதாமென ஊரில் பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். எங்கள் குழந்தைக்கனவுகள் கருகத் தொடங்கியது. எங்கள் குழந்தைக்கனவுகளையும் உயிர்களையும் இந்திய இராணுவ டாங்கிகள் கொன்று போடத் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகிக் கொண்டிருந்தது.

15-09-1987அன்று தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஊரெங்கும் கதைத்தார்கள். ஊர்கூடி அரசியல் கதைக்கத் தொடங்கினார்கள். எங்கள் பிள்ளையார் கோவிலடியிலிருந்து வாசகசாலைவரையும் அந்தக் கதைகள் ஆளாளுக்கு ஏற்ற ஞானத்தின் படி ஆய்வுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது.


தியாகி திலீபனின் மரணத்தோடு ஒக்ரோபர் 5 பன்னிரு வேங்கைகள் பலாலியில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்த செய்தி வந்து எங்கள் கனவுகளில் திரும்பவும் துப்பாக்கிகளும் யுத்த டாங்கிகளும் ஒக்ரோபர் மாதமே இந்திய இராணுவம் புலிகளுக்குமிடையில் யுத்தம் ஆரம்பித்தது.

இரத்தமும் மரணமும் எங்கள் நிலமெங்கும் நிரம்பத்தொடங்கிய மாதமொன்றில் அவளும் அவளது பெரியம்மாவும் எங்கள் ஊருக்கு வந்தார்கள். அதுவும் ஒரு பாடசலை விடுமுறைதான். அவள் தனது ஊரில் நிகழும் இந்திய இராணுவம் புலிகள் சண்டை பற்றியெல்லாம் சொன்னாள்….

அவளது வீட்டில் அவர்களோடு பழகி அவர்கள் வீட்டில் உண்டு உறங்கி வீரச்சாவான பலரது கதைகளைச் சொன்னாள். தக்காளியென்ற போராளி அவளது அம்மம்மாவுடன் வந்து அவர்களது மாட்டுக்கொட்டிலில் தங்கியது மலேரியாவில் பாதித்தது….பின்னர் தக்காளி வீரச்சாவானதையெல்லாம் கண்ணீரோடு சொன்னாள். இந்தியன் ஆமியை ஒவ்வொரு குழந்தையும் வெறுத்து ஒதுக்கியதற்கான சாட்சியமாக அவள் தனது வெறுப்பையெல்லாம் சொன்னாள்.

காலம் 1990….

இந்திய இராணுவ வெளியேற்றம் நிகழ்ந்து யாழ்தேவியில் ஊருக்கு வெளிநாட்டிலிருந்து ஆட்கள் வரத்தொடங்கினார்கள். அவளது தம்பி ஒருநாள் காணாமல் போய்விட்டான். அவனது சயிக்கிள் வீட்டுக்கு வந்தது. அவன் இயக்கத்துக்குப் போய்விட்டான். அவள் அழுதாள். தம்பியைத் தேடித் திரிந்தாள். அவன் பயிற்சிக்கு போய்விட்டான். மத்தியகிழக்கிலிருந்து திரும்பிய அவளது அம்மாவுக்கு அவனில்லாமல் போனது பெரும் துக்கமாகியது.

யேர்மனி போன எங்கள் வீட்டு மணமகள் அவளது மாமியாக ஒரு குழந்தையுடன் வந்திறங்கினா. குழந்தைக்கு நேர்த்தி செய்ய நைனாதீவுக்கு போகப் போவதாகவும் வீட்டில் பேசிக்கொண்டார்கள். வெளிநாட்டு வரவான அந்தக் குழந்தையை நாங்கள் ஆளாளுக்குப் போட்டி போட்டுத் தூக்குவது விளையாடுவது என இரண்டு குடும்பமும் ஒரேயிடத்தில் சிலவாரங்கள் கூடினோம்.

ஒருநாள் பின்னேரம் அம்மா சொன்னா அவளும் நானும் வீட்டிலை நிண்டு சமைக்கட்டாம் மற்றவையெல்லாரும் நைனாதீவுக்குப் போகினமாம்…..நைனாதீவுக் கடலில் பயணிக்கும் எங்கள் இருவரது் ஆசையும் நாசமாப்போனது. அவளும் நானும் அழாக்குறை….காலமை விடிய வெள்ளண எல்லாரும் எழும்பி இருட்டோடு பஸ்சேறிப் போக வெளிக்கிட அம்மாவுக்குச் சொன்னேன்…..

போட்டு வாங்கோ உப்புக்கறி சமைச்சு வைக்கிறோம்……

எங்கள் இருவரின் கண்ணீர் சோகம் எல்லாத்தையும் ஒருவரும் கவனிக்கேல்ல….அவையெல்லாரும் போட்டினம்….
அன்றுதான் முதல் முதலாக அவளும் நானும் வீட்டுக்காறருக்கு சமைக்கப்போகிறோம். அவளும் நானும் சமையலுக்கு அடுப்பு மூட்டி ஆரம்பமானோம். சோறு புக்கையாப் போச்சு…..அதை பானையோடு கொண்டு போய் கிணற்றடியில் நிண்ட மாதுளமரத்து வேருக்கு கிட்ட கிடங்கு கிண்டி புதைச்சோம்…புதிசா சோறு அவிய பக்கத்தில நிண்டு பாத்து அவள்தாள் வடித்தாள்.

கத்திரிக்காய் பால்கறியை நான் இலகுச்சமையலென எனது கையில் எடுத்து கத்தரிக்காயை அவளோடு கதைச்சுக் கதைச்சு மசிக்கத் தொடங்கினேன். சட்டி அடியாலை உடைஞ்சு அடுப்புக்கை கத்தரிக்காய் பால்கறி போக மிஞ்சியதை அடுப்பிலிருந்து அள்ளி ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்தேன்.

எங்களுடைய முதல் சமையலை அன்று இருவரும் சேர்ந்து முடித்தோம். எங்கள் இருவரின் சமையலைச் சாப்பிட பகல் வீட்டை வந்தவைக்கு அன்று சோதனைதான். நான் சொன்னமாதிரி நான் செய்த எல்லாத்திலும் உப்பு கூடவாம்….ஏதோ கோவத்தில சொன்னது உண்மையானதுக்கு அம்மா பேசினா…..

எங்கள் ஊருக்கு அவள் வந்தால் நானும் அவளும் சைக்கிளில் டபிள் போவோம். தோட்டம் துரவு முழுக்க சுற்றி வருவோம்…..அவள் ஊருக்கு நாங்கள் புத்தூரால் வாதரவத்தை வெளி வண்ணாத்திப்பாலம் தாண்டி சயிக்கிளில் போயவரத் தொடங்கினோம்.

காலம் 1990 ஆனி….

இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம். எங்கள் ஊர் மீளவும் இடம்பெயரத் தொடங்கியது. பலாலியிலிருந்து வருகிற எறிகணைகள் எங்கள் ஊருக்குள்ளும் வீழத்தொடங்கியது. முதல் சண்டை ஆரம்பமாக அவளது ஊருக்கு நானும் எனது தங்கைகளும் அவளது வீட்டுக்கு போனோம். அம்மா அப்பா ஊரில் கொஞ்சத் தூரம் தள்ளியிருந்தார்கள்.

அவளது ஊரின் குளத்திலும் தரவைகளிலும் குளித்து நீச்சல் பழகி அந்த மணல் நிலமெங்கும் விளையாடித் திரிந்தோம். அவளது இயக்கத்துக்குப் போன தம்பி ஊருக்கு வந்தான். தென்மராட்சிப் பொறுப்பாளராக இருந்த பாப்பாவுடன் மோட்டசயிக்கிளில் திரிந்தான்.

மீசாலையில் இருந்த முகாமொன்றில் அவன் இருப்பதாகத் தகவல் அறிந்து அவள் அவனைப் பார்க்கப்போகப் போவதாய் சொன்னாள். ஒருநாள் சாவகச்சேரி சந்தைக்கு என்னையும் கூட்டிக்கொண்டு போனாள். வீதிகளில் அவளைத் தெரிந்த பலருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள்.

சந்தையில் மாம்பழம் இன்னும் சில இனிப்புப்பண்டங்களும் வாங்கினாள். அது தம்பிக்கு அன்று மாலை சந்திக்கும் போது கொடுக்க வேணுமென்றாள். அவள் கல்வி கற்கும் சாவகச்சேரி இந்து மகளீா் கல்லூரிக்கு அவளது ஊரிலிருந்து போய்வருவது தூரம் என்பதால் அங்கேயொரு வீட்டில் தங்கியிருந்துதான் படிப்பதாய் சொன்னாள். தான் தங்கியிருந்த வீட்டிற்கு கூட்டிப்போனாள். அங்கே ஒரு அன்ரியும் 2பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தியும் இவளும் ஒரே வகுப்பாம். அவர்களுக்கு என்னைத் தனது மச்சாள் என சொன்னாள். தனது தம்பி மீசாலையில் வந்து இருப்பதாக அன்ரிக்குச் சொன்னாள். அன்று அவனைப் பார்க்கப் போவதாகவும் சொல்லிவிட்டு வெளிக்கிட்டாள்.

000 000 000

அன்று மாலை அவளது தம்பியை பார்க்க அவன் இருந்த மீசாலை காம்பிற்குப் போனோம். வரியுடுப்போடு எங்கள் முன் வந்திருந்தான். வேறும் 3பேர் வந்தார்கள்.

இது அக்கா…. இது மச்சாள்….

எங்கள் இருவரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவர்களை ஏற்கனவே வீதிகளில் கண்டிருக்கிறேன். இன்று அவர்களுடன் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

நீங்க ரெண்டுபேரும் எப்ப இயக்கத்துக்கு வரப்போறியள்…?
அவர்களில் ஒருத்தன் எங்களுடன் கதையை ஆரம்பித்தான்.

இப்பவே வரலாம்…..? எடுப்பீங்களோ….? என்ற எனது பதிலை அவன் எதிர்பார்க்கவில்லையோ என்னவோ…..சிரித்துச் சமாளித்துக் கொண்டு…..

மட்டுவிலில இருக்கிற அக்காக்களிடை காம்புக்கு போங்கோ….அவைக்குச் சொல்லிவிடுறம்…..
அடுத்தவன் அவனுக்கு முதுகில் அடித்தான். வாயை வைச்சுக் கொண்டு சும்மாயிருக்கமாட்டியே…?

அடுத்தவன் எங்களுக்குத் தேனீர் கொண்டு வந்து தந்தான். நாங்கள் அமர்ந்திருந்த மேசையில் பல புத்தகங்கள் பத்திரிகைகள் இருந்தது. அதிலிருந்து ஈழநாதம் ஒன்றை எடுத்தேன். மச்சான் , மச்சாள் , மற்றையவர்கள் 3பேரும் கதைக்க ஈழநாதம் பத்திரிகையில் வந்திருந்த கவிதைப்பக்கத்தைத் தேடி வாசித்தேன்.

அக்காக்கு கவிதை பிடிக்குமோ…..? இல்ல உங்கடை கதையும் பிடிக்கும்…..சிரித்துக் கொண்டு சொல்லிவிட்டுப் பத்திரிகையை மேசையில் வைத்தேன்.

அவன் போரியல் வரலாற்று நூலொன்றைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். தான் படித்த புத்தகங்கள் சிலவற்றைப் படிக்குமாறும் சொன்னான். நல்லதொரு இலக்கிய ரசனைமிக்கவனாக அவனது நூல்கள் பற்றிய அறிதல் இருந்தது. போராட்டம் போர்க்களம் தாயகம் பற்றிய அவனது ஆதங்கம் கருத்துக்கள் மனசுக்குள் ஒரு களத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் போராட வேண்டுமென்ற கட்டாயத்தை தனது அனுபவத்தால் அறிந்த யாவற்றையும் சொல்லி விளக்கிக் கொண்டிருந்தான்.

அந்தச் சந்திப்பு சில நல்ல பண்பாளர்களையும் தாயகப்பற்றாளர்களையும் தந்திருந்தது. இரண்டரை மணித்தியாலம் கதையும் சிரிப்புமாய் கழிந்தது. சயிக்கிள் நிறுத்திய மரத்தடிக்குப் போனேன். அவள் கண்ணீரோடு அவள் தம்பியிடமிருந்து விடைபெற்றாள்.

நாங்களும் தம்பிதானக்கா உங்களுக்கு….என அவர்களில் ஒருத்தன் சொன்னான். வாசல்வரை அவன் வந்து அக்காவை வழியனுப்பிவிட்டான். இங்காலை வரேக்க வா அக்கா என்றான் அவன்…..

அவர்களது முகாமைவிட்டு வீதிக்கு ஏறினோம். அவள் அவனைப் பற்றிச் சொல்லியழுதாள். அவன் வீட்டை வரமாட்டானாம்…..அம்மா பாவம்….எனத் தாயை நினைத்துக் கலங்கினாள்.

000 000 000

நாங்கள் பிரதான வீதியில் ஏறினோம். அவள் தனது மனசுக்குள்ளிருந்த பல கதைகளை எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளைத் துரத்துகிற சயிக்கிள்கள் பற்றி…அவளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் பற்றி….அந்த இடைக்குள் வேம்பிராய் தாண்டி றோட்டுக்கரையை அண்டிய ஒரு வீட்டடியில் சயிக்கிளை நிப்பாட்டச் சொன்னாள்…..அவளுடன் படிக்கும் ஒரு தோழி அந்த வீட்டில் இருப்பதாகச் சொன்னாள். அவர்கள் எனக்கு அறிமுகமில்லாதபடியால்….

நான் வரேல்ல….நீ போட்டு வா நான் வெளியில நிக்கிறேன்…..

நான் அந்த வீதியில் காவல் நிற்க அவள் அந்தவீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் களித்து வந்தாள். வரும்போது அருநெல்லிக்காய் ஒரு பைநிறையக் கொண்டு வந்தாள். நான் ஒரு அருநெல்லிக்காய் சாப்பிடும் கெடு என்பதை அவளுக்குச் சொல்ல….எனக்கு இனிமேல் இலவச அருநெல்லி கிடைக்க அவள் வழிசெய்வதாய் சொன்னாள்.

நான் சயிக்கிள் மிதிக்க அவள் கரியரில் இருந்து கதைத்துக் கொண்டு வந்தாள். வறணிக்கு கிட்டவாக 2பொடியள் எங்கடை சயிக்கிளைத் துரத்திக் கொண்டு வந்தினம். அவளோடு அவை கதைச்சினம். ஒருத்தன் நாமப்பொட்டு வைத்து நடுவில் கும்குமம் வைத்து சாமிபக்தனாய் வந்தான். அவன் தான் இவளோடு அலட்டிக்கொண்டு வந்தான். அவளும் கனநாள் பழகினவையோடை கதைக்கிறமாதிரி அவனோடு கதைத்துக் கொண்டு வந்தாள்.

காட்டுத்தேன் வேணும்….உங்கடை பக்கம் எடுக்கலாமெல்லோ….? நாளைக்கு அங்காலை வருவம்…. வீட்டை வரலாமோ…எனக் கேட்டான்.

அதுக்கென்ன வாங்கோ….அம்மம்மாக்குத் தெரிஞ்ச தேன் விக்கிறவையும் இருக்கினமெண்டாள். அப்ப அம்மம்மாட்டை கேட்டு வையுங்கோ…என்றான் அவன்.

அவளது வீட்டுக்குப் போகும் ஒழுங்கைக்குள் நாங்கள் இறங்க அவர்கள் நேரே போனார்கள். ஒழுங்கையில் இறங்கிய பின்னர் சொன்னாள். நாமப்பொட்டு வைச்சிருந்தவன் அவளது அப்பாவின் உறவாம்….ஏற்கனவே தெரியுமாமெண்டாள்.

000 000 000

மறுநாள் வெள்ளிக்கிழமை சுட்டிபுரம் அம்மன்கோவிலுக்குப் போவமென்றாள். எனக்கும் புதிய ஊரில் ஒரு கோவிலுக்குப் போக விருப்பமாயிருந்தது. பின்னேரம் நாங்கள் குளத்தில் போய் குளிச்சிட்டு வந்தோம். முதல்நாள் சந்தித்த 2பொடியளும் அவளது வீட்டு ஒழுங்கையில் வந்து அவளது வீட்டையடைந்தார்கள். அம்மம்மா வீட்டில் இல்லாததால் அவர்களுக்கு தேன் வாங்க முடியாமல் போனது. தேனீர் போட்டுக் கொடுத்தாள்….குடித்துவிட்டுப் போனார்கள். வீட்டில் நடந்த இந்த நிகழ்வுகளை அவதானித்த ஒரு நல்லுறவு அவளது அம்மம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் போட்டுக் குடுத்துவிட….மாடுகளை பட்டியில் அடைத்த குறையில் விட்டுவிட்டு ரெண்டு பேரும் அவளிடம் வந்தார்கள்.

யாரவங்கள்….? இஞ்சையெப்பிடி வருவாங்கள்….? என திட்டு விழுந்தது. அவள் பெரியம்மா என்னையும் கேட்டா…
உனக்கும் அவங்களைத் தெரியுமா…?

அவா கேட்டு முடிக்க முதல் நான் இல்லையெனத் தலையாட்டினேன். என்ரை அம்மா இதெல்லாம் அறிஞ்சா என்ர நிலமையை நினைக்க குளத்தில குளிச்சு வந்த சந்தோசமே போய்த் தோலைந்தது.

000 000 000

வேம்பிராய் அருநெல்லிக்காய் வீட்டடி வாசலில் நான் காவல் நிற்க அவள் அங்கே போய் கனநேரத்துக்குப் பிறகு நிறைய நெல்லிக்காயோடு வருவாள். நெல்லிக்காய்க்கெடு நான் புளிக்கப்புளிக்க நெல்லிக்காயைச் சப்புவேன்.

அந்த வீட்டுக்கு வெளியில் வீதிக்கரையில் நான் பலதரம் நின்ற போது அதாலை போய்வரும் மோட்டார் சயிக்கிளொண்டு அடிக்கடி முறாய்ச்சுப் பாத்துக் கொண்டு போகும்…..நானும் அந்தக்கண் பார்வை என்னைவிட்டு விலகும் வரை ஏலுமெண்டா பார் பாப்பமெண்டு பார்ப்பேன். அந்த மோட்டார் சயிக்கிளில் போகும் போராளி நான் றோட்டில் நிக்கிற விசயத்தை அவளது அம்மம்மாவுக்கு ஒருக்கா சொல்லிவிட்டது போதாமல் என்னையும் ஒருக்கா வந்து கேட்டிச்சுது…..

உதிலை என்ன அலுவல்…..? அவள் தனது சினேகிதியைப் பாக்கப் போட்டாள். அவளுக்காக நான் காத்திருப்பதாய் சொன்னேன்.

உதிலை நெடுக நிக்க ஆக்களென்ன நினைப்பினம்….? என்றான் அவன்.
பாவமெண்டு நினைப்பினம்….இது நான்.

அதற்குள் அவள் நெல்லிக்காயோடு வந்து சேர்ந்தாள். அண்ணை எப்பிடியிருக்கிறீங்கள்….? தம்பியையெப்பிடி இருக்கிறான்……? அவர்கள் கதைக்க அவள் கொண்டு வந்த அருநெல்லிக்காயை நான் சப்பத்தொடங்கினேன்.

பேக்கோவம் வந்திச்சு எனக்கு…. முறால்…முறால்…..மனசுக்குள் அவனைத் திட்டினேன். வளமையா அந்த முறால் மூஞ்சையின் பார்வை மறையும் மட்டும் பாக்கிறனான் அண்டைக்கு நிமிந்தும் பாக்கேல்ல….

அவன் அவளுக்குச் சொன்னான்….அந்த வீட்டை போகேக்க என்னையும் உள்ளை கூட்டிப்போகச் சொல்லி….நெடுகலும் உப்பிடி தெருவில நிண்டா ஆக்கள் என்ன நினைப்பினம்…..இவள் தான் ஆக்களைத் தெரியாதெண்டு வரமாட்டனெண்றவள்….அதான் நானும் விட்டிட்டுப் போறனான்…..

அவன் என்ன நினைத்தானோ சிரித்தான். நெல்லிக்காய் மரத்தை குப்பிளானில கொண்டு போய் நடுங்கோ…..சொல்லிவிட்டுப் போனான். அண்டையிலயிருந்து எனக்கு அந்த மோட்டார் சயிக்கிளைக் கண்டால் கீரியைப் பாம்பு கண்ட நிலமைதான்.

அப்பிடித்தான் ஒருநாள் அவளது ஊரிலிருந்து எனது ஊருக்கு தனியப்போய்க்கொண்டிருந்தேன். மட்டுவில் அம்மன்கோவில் தாண்டினதோடை என்ர சயிக்கிள் தன்ரை மூச்சைவிட்டிட்டுது. இடையில ஒரு சயிக்கிள் கடையும் இல்லை. புத்தூர் வந்தால் தான் காற்றடிக்கலாம். நடைக்கோச்சில சயிக்களை உருட்டிக் கொண்டு வந்து கொண்டிருக்க….. வண்ணாத்திப் பாலத்தாலை முறால் இன்னொரு ஆளையும் ஏத்திக் கொண்டு மோட்டார் சயிக்கிளில் வந்து கொண்டிருந்தது.

கிட்ட வந்து நிப்பாட்டி….அருநெல்லி….எனச் சொல்லீட்டுப் போச்சுது. அருகில கிடந்ததாலை தூக்கியெறிய வேணும்போலையிருந்தது. அது போதாதெண்டு…..“நடடா ராசா மயிலைக்காளை நல்ல நேரம் வருகுது….“ பாட்டையும் பாடிக்கொண்டு போய்ச்சுது.

000 000 000

காலம் 1991….ஆடி…

ஆனையிறவு “ஆகாயக்கடல் வெளிச்சமர்“ அத்தாக்குதலை ‘இலங்கையில் இரு மரபுவழி இராணுவங்கள் உள்ளன’ என பி.பி.சி. வர்ணித்த அச்சமருக்கு முன்னர் உப்பளவெளி முகாமையண்டிய இடங்களில் எல்லாம் பதுங்குகுளிகள் அமைத்துக் கொண்டிருந்தனர் புலிகள்.

அந்த உப்பளவெளிக் கள நாயகர்களுக்கு உதவியாக பதுங்குகுளி அமைத்தல் மண்மூடை கட்டுதலை அவள்கூடச் சேர்ந்து நானும் அந்த இடங்களுக்குச் சென்றேன். அந்த நிகழ்வுகள் எனக்குள்ளும் ஒரு நிமிர்வையும் தைரியத்தையும் தந்தது.

பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட விதியை மாற்றியெழுதிய அக்காக்கள் பலர் அங்கே அறிமுகமானார்கள். அவளும் நானும் அக்காக்களுடன் நிற்பதனை அறிந்த வீட்டுக்காறார் ரெண்டு பேரையும் தனித்துப் பிரித்தார்கள். அவளது ஊருக்கு நான் போவதற்குத் தடையுத்தரவு விழுந்துவிட்டது.

1990 மாவீரர் வாரத்தில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்த புலிகளின் குரல் வானொலியில் வீரம் மிக்க எழுச்சிமிக்க படைப்புகளும் அஞ்சலிகளும் ஒலித்துக் கொண்டிருக்கும். இரவு ஒலிபரப்பில் வரும் சோகத்தையெல்லாம் சயிக்கிள் சில்லைச் சுற்றி டைனமோவில் வானொலியை இணைத்து புலிகளின் குரலைக் கேட்போம்.

ஆனையிறவுச்சமர் நிகழ்ந்து கொண்டிருந்தது. நாங்கள் குடியேறிய மேற்கு ஏழாலையில் அமைந்துள்ள உத்தமன் சிலையடியில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி இரவு ஒலிபரப்பை ஊரெங்கும் கேட்க வைக்கும். ஒலிபரப்பு ஆரம்பமாக நாங்கள் இருந்த வீட்டின் முன்தென்னையில் போயிருந்து புலிகளின் குரலைக் கேட்டுக் கொண்டிருப்பேன். சொல்லிப்புரிவிக்க முடியாத உணர்வலைகளை அந்த ஒலிபரப்புத் தந்து கொள்ளும்.

ஆனையிறவில் தமிழர்படை மும்முனைகளாலும் பலம் பொருந்திய இராணுவத்தின் பலத்தையெல்லாம் தாக்குப்பிடித்து சமர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த அக்காக்கள் பற்றி அந்தச் சமர்முனையின் அண்ணாக்கள் பற்றி எழுதத் தொடங்கினேன்.

கவிதைகளாக கதைகளாக எழுதியவற்றையெல்லாம் தெருக்களில் செய்திப்பலகையின் அருகில் உள்ள தபாற்பெட்டிக்குள் எழுதிப் போட்டுவிடுவேன். அவை வானொலியில் ஒலிபரப்பாகின்ற போது பெருமிதமாக இருக்கும்.
ஒருநாள் அப்பாவின் நண்பர் எனது பெயரை வானொலியில் கேட்டுவிட்டு….

உங்கடை மகள் கவிதையெழுதுவாவோ….? நேற்று றெடியோவில கேட்டனான்…..என்றதோடு நான் சங்கக்கடைக்குப் போன நேரம் எனக்கும் எனது கவிதையைக் கேட்டது பற்றிச் சொன்னார். அப்பாவுக்குத் தெரியாத கவிதைகள் எனக்குள் இருப்பதை அப்பா அறியாமல் இருந்தார். அதனால் அது அவளாயிருக்காது…..வேறையாரும் அவளின்ரை பேரில எழுதியிருக்குங்கள்….என்றிருக்கிறார்.

என்னண்ணை எனக்குத் தெரியாதே உங்கடை பேருமெல்லொ வந்தது என்ற அவரது விளக்கம் வேலையால் அப்பா வீட்டுக்கு வந்ததும் அம்மாவின் காதுக்குள் போடப்பட்டது. ஒலிபரப்பு ஆரம்பமானதும் நான் தென்னைமரத்தோடு ஒட்டிப்போவது ஏனென்ற காரணங்களை அம்மாவும் அப்பாவும் கண்டுபிடித்து விட்டார்கள்.

படிக்கிற வழியைக் காணேல்ல…கவிதை எழுதுறாவாம்….அம்மா பேசினா…..பக்கவாத்தியம் அப்பாவும் சேர்ந்தார்…..

அப்போது நான் கற்றுக் கொண்டிருந்த வாணி கல்வி நிலையத்தில் கற்கும் சக தோழிகள் தோழர்கள் வரையும் எனது கவிதைகள் போயிருந்தது. வீட்டுத் திட்டுகளையெல்லாம் எங்கள் நண்பர் குளாமுக்கு அறிவிக்க அங்கே என் கண்ணீர் துடைக்கப் பல கைகள் எனக்குப் பலமாயிருந்தன……ஆனையிறவுச் சமர்க்களத்தில் நிற்கிற அண்ணாக்களுக்கும் அக்காக்களுக்கும் நாங்கள் ஆதரவாய் பின்தள ஆதரவுகளை வழங்கிக்கொண்டிருந்தோம்…..

காயமடைந்து வருகிறவர்களுக்கான பராமரிப்பு உலர் உணவு சேகரிப்பு…..என எல்லாக் கல்வி நிலையங்களும் செய்து கொண்டிருந்தது. எங்கள் பங்களிப்பும் கோரப்பட்டது. எங்கள் வகுப்பிலிருந்து ஒரு குழு தயாரானது. வீட்டுக்காரருக்குப் பயப்பிடாமல் வேலைகளில் இறங்கினோம். அதுவொரு பொற்காலம் அப்படித்தான் நினைப்பதுண்டு.

1500போராளிகள் வரையில் அங்கவீனர்களாகவும் 600இற்கு மேற்பட்டோர் வீரச்சாவடைந்தும் ஒன்றரை மாதச்சமர் முடிவுக்கு வந்தது.

000 000 000

அவள் இப்போது எங்கள் வீட்டுக்கு வருவதில்லை. காரணம் சொல்லாமல் அவள் வரவு நின்று போனது. ஒருநாள் அவளது மாமா நாங்கள் இடம்பெயர்ந்திருந்த மல்லாகம் கல்லாரைக்கு சயிக்கிளில் வந்தார். பெரியவர்களுக்குள் குசுகுசுத்தார்கள்.

விடயம் மெல்ல மெல்லப் பரவியது. அவள் ஓடிப்போய்விட்டாளாம். 17வயதில் அவள் ஒருவனைக் காதலித்து அவனோடு வாழப்போய்விட்டாளாம். அம்மா என்னைக் கூப்பிட்டா…..கோவத்தோடு கேட்டா….
உனக்குத் தெரியாதோ…..? அவள் ஆரை விரும்பினதெண்டு….?

எனக்குத் தெரியாதென்று ஊரிலிருந்த எல்லாச்சாமிகள் மீதும் சத்தியம் செய்தேன். அம்மாவும் நம்பவில்லை. அவளது மாமாவும் நம்பவில்லை. நெல்லிக்காய் வீடும் அவள் போக்குவரத்துப் பற்றியும் சொன்னேன். ஒரு சீவனும் நான் சொன்னதை நம்பவேயில்லை. அவள் யாரோடு ஓடிப்போனாள் என்பது எனக்குத் தெரியும் என்றுதான் எல்லாரும் அடம்பிடித்தார்கள்.

அத்தோடு அவளது கதை முடியாமல் யேர்மனி வரையும் கதை கடிதமாகப் போய்….அவளது மூத்தமாமா எனது சித்தப்புவுக்கும் நான்தான் வில்லியாகினேன். அவளை யாரோடோ நான்தான் இணைச்சு விட்டமாதிரி கதைபோய்…..நான் தான் அவளை அனுப்பிய துரோகியாகிவிட்டேன். காரணமில்லாமல் நான் துரோகியாக்கப்பட்டேன்.
வீட்டில விழுந்த திட்டுக்கும் நம்பிக்கையீனத்துக்கும் ஆறுதல் தேடி வாணியில் படித்த நட்புகளுக்கே சொல்லியழுதேன். அதற்குப் பின்னர் அவள் பற்றி எதுவும் தெரியாது. எங்கோ குடும்பமாக குழந்தைகளுடன் வாழ்கிறாள் என்றது மட்டும்தான் எனக்கும் தெரிஞ்ச தகவல்.

அதற்கும் பின்னால் நானும் புலம்பெயர்ந்து அவளை கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தேன். எப்போதாவது ஞாபகம் வரும்போது அவளை ஒருகாலம் சந்திக்க வேணுமென்று நினைச்சுக் கொள்வேன்.

காலம் 2011 யூன்மாதம்…..

அண்மையில் அம்மா சொன்னா…****உன்ரை ரெலிபோன் நம்பர் கேட்டவளாம்….? குடுக்கவோ…? எங்கை…எப்பிடி…என்ன செய்யிறாள்….? என்ற எனது கேள்விகளுக்கு அம்மா சொன்னா….

அவளின்ரை புரிசன் பூசாவிலயாம்…..கலியாணம் கட்டின பிறகு பொடியன் இயக்கத்தில சேந்ததாம்…. …..4பிள்ளையளாம்….இப்ப முகாமிலயிருந்து போய் மாமியாரோடை இருக்கிறாளாம்……சரியான கஸ்ரமாம்….உன்னோட கதைக்க வேணுமெண்டு கேட்டவளாம்…..

அவள் நிச்சயம் உதவிக்காகத் தான் எனது தொடர்பைக் கேட்டிருப்பாள் என்பது புரிந்தது. அவளைப்போல தங்களது கணவர்களை , மகன்களைத் தடுப்பில் விட்டுவிட்டுத் துடிக்கிற பெண்களும்…..

காணாமற்போன தங்கள் உறவினர்களைத் தேடும் குடும்பங்களும் உதவி உதவியென்று வருகிற விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாமல் ஒவ்வொருவரிடமும் உதவுங்கள் உதவுங்கள் என்ற இறைஞ்சல் எனது இரவுகளையும் பகல்களையும் நிம்மதியையும் பறித்துவிட்டிருக்கிற இந்த நாளில் இவளும் உதவிக்காகவே உறவை மீளப்புதுப்பிக்கிறாள்…..

வேலையை இழந்து 5மாதங்களாக எனது சுமைகளைத் தாங்க முடியாத இக்கட்டோடு அல்லாட இவளுக்கு உதவ என்ன செய்ய…? அவள்பற்றிப் பிள்ளைகளுக்குச் சொன்னேன்.

ஏனம்மா நேசக்கரத்துக்கு உதவிற ஆக்களிட்டை கேளுங்கோவன்….? அந்த அன்ரியும் சண்டையில தானேயம்மா கஸ்ரப்பட்டவா…?

சொந்தக்காரருக்கெல்லாம் நேசக்கரம் உதவேலாது பிள்ளையள்….!
அம்மா வேலைசெய்துதான் செல்லங்கள் அவாக்கு உதவ வேணும்…..
அதெப்பிடியம்மா….?
பிள்ளைகள் தங்கள் பக்க நியாயங்களை அடுக்கிக் கொண்டு போனார்கள்…..

வெறுங்கையாய் நிற்கிற என்னிடம் உதவி வேண்டுகிற அவளுக்கு உறவாக மச்சினியாக நான் கட்டாயம் உதவ வேண்டும். ஒரு குறுகிய காலத்தில் நல்லுறவாகத் தோழியாக இருந்த அவளுக்காக அவளது பிள்ளைகளுக்காக அடிக்கடி கரம் தருகிற Barclays Bank கிறடிற்காட்டையே நம்பியிருக்கிறேன்.

துயரங்கள் தொடரும்……

Wednesday, August 31, 2011

என் மகளே செங்கொடி....!


*செங்கொடி*
நீ செழித்து வேரூன்றி விழுதெறிந்து
மானிட விடுதலையை
வென்றிருக்க வேண்டிய வித்து நீ.
ஏனடி பெண்ணே…?
எரிந்தாய் நெருப்பில்….?

அவசரப்பட்டு விட்டாய் மகளே..…!
அண்ணன்களைக் காக்க நீ அணைத்த தீ
அவர்களை வாழும்வரை வருத்தப்போகிற
வலியல்லவா உனது தீ….!
நீ வாழ்ந்திருக்க வேண்டியவள்
வரலாறுகள் படைத்திருக்க வேண்டிய பலம் நீ.
ஏனடி பெண்ணே….? இந்த அவசரம்….?

உன்போல்வீரமும்மானிடப்பெறுமதியும்புரிந்தவர்கள்
இவ்வுலகில்அதிகமில்லையடிமகளே…..!
மாற்றங்கள் நிகழ உன்போன்ற
மங்கையரும் மகனாரும் தேவையடி எங்களுக்கு….!

அரசியல் புலிகளும் நரிகளும்
உங்கள் உயிரில் தீமூட்டிக் கரியாக்கி
வீர உரை நிகழ்த்தி இன்றோடு உன்னை மறந்திடுவர்……
நாளை அல்லது இன்னொரு நாளில்
குருத்தொன்றை மூட்டத்
தீப்பெட்டியும் பெற்றோலும் விநியோகம் செய்யும்
முகவர்களின் நண்பர்களாவார்கள்…..

மொழிக்கு மொழி முத்துக்குமாரனையும்
செங்கொடியையும் சொற்களால் உயர்த்திச்
சுயநலச்சாக்கடை வியாபாரம் செய்வார்கள்.
சிந்திக்கத் தெரிந்த உம்போன்ற செடிகளைத்
தீயெரிக்கத் தீயெரிக்க உணர்ச்சித் தீயெடுத்து
உங்கள் சிதைகளுக்கு வீரத் தீமூட்டுவார்கள்…
அத்தோடு அவர்கள் கதை முடிந்துவிடும்....

முத்துக்குமாரன் முடிந்தான் தமிழகத்தில் என்ன
பாலும் தேனுமா பாய்கிறது…?
செங்கொடி நீ முடிந்தாய் என்ன தமிழகத்தை
செல்வச்செளிப்பாயா மாற்றப்போகிறார்கள்…?
இல்லையடி மகளே உங்கள் உயிர்களை
விதைத்து அரசியல் வியாபாரிகள் பைகள் தான் நிரம்புகிறது.

போதும் பிள்ளைகளே…!
உங்கள் பெறுதற்கரிய உயிர்களை
வெறும் தீக்கிரையாக்கி
வீணடிக்காதீர் விழுதுகளே…..!
உயிர்களை ஆயிரமாயிரமாய் இழந்த வலியின்னும்
ஆறாமல் துடிக்கிற எங்களால் உங்கள்
இழப்புக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நீங்கள் வாழ வேண்டும்
இவ்வுலகம் வாழ உங்கள் விலையற்ற உயிர்களை
வீணாயெரிக்காமல் வரலாறு படைக்க வேண்டும்.
அதுவே எங்களுக்குக் கிடைக்கின்ற பெருவெற்றி.

போய்வா மகளேயென்று வீரவணக்கம் சொல்லியுன்னைப்
பொய்யுரைத்து வணங்கமாட்டேன்.
மீள வராத உனக்காய்
கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்குகிறேன்.
ஒற்றைக் கவிதையால் அஞ்சலித்து
இனியொரு தீக்குளிப்பை எதிர்க்கிறேன்…..
என் மகளே செங்கொடி
எனது கண்ணீர் வணக்கங்களோடு விடைபெறுகிறேன்……


31.08.2011 (ஓகஸ்ட் 28.2011 அன்று பேரறிவாளன், முருகன், சாந்தன் போன்றோரின் தூக்குத்தண்டனையை நிறுத்தக்கோரி தன்னைத் தீமூட்டியெரித்த 27வயதான செங்கொடி என்ற இளம் பெண்ணின் நினைவாய் எழுதிய வரிகள் இவை)

Friday, August 19, 2011

தமிழர்களுக்கு உதவா(த)தா…? 8000CRகொப்பிகளும் பேனாக்களும்..! உறங்குமிடம் த.தே.கூ.பா.உ. யோகேஸ்வரன் அலுவலகம்.


(முன்குறிப்பு :- எப்ப பார் தமிழர்களின் பிரதிநிதிகளாக விளங்கும் த.தே.கூட்டமைப்பைத் திட்டுவதே உங்கள் வேலையாய்ப் போச்சென்று திட்டாதீர்கள். மக்கள் முன் சொல்லப்பட வேண்டியவற்றை மக்களாகிய நாங்களே சொல்ல வேண்டியுள்ள கடமை இருக்கிறது)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் நிறைந்து கிடக்கிறது. இதிலும் குறிப்பாக மாணவர்களின் கல்வியுதவிக்கான வேண்டுதல்கள் யுத்தத்தால் பாதிப்புற்ற சகல இடங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இன்னும் இயங்குகின்ற முகாம்களில் வாழும் பிள்ளைகளின் கல்வி நிலமை மிகுந்த பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது.

செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாமில் 2000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இம்மாணவர்களுக்குத் தேவையான கற்கை உபகரணங்களான கொப்பி பேனா போன்றவையே மிகுந்த தட்டுப்பாடாக உள்ளது. இவற்றைத் தமக்கு வழங்கமாறு அம்மாணவர்கள் வேண்டுகின்றனர்.

வாழும் முகாமில் அடிப்படை வசதிகள் பெறுதலே மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இருக்க கற்றலை வளப்படுத்த இவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். வெளியில் இருந்து இயங்கும் நிறுவனங்களும் சரி தமிழர்களின் வாக்குகளை வென்றவர்களும் சரி இம்மாணவர்களைத் திரும்பியும் பார்க்காதுள்ளனர். சில பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இம்மாணவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் தொடர்பாக கேட்கப்பட்டும் இன்னும் முன்னேற்றம் எதனையும் காணாத நிலையே.

17.08.2011 அன்று மட்டக்களப்பில் த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். தற்போதைய பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள மர்ம மனிதர்களின் தொல்லைகள் தொடர்பாக இந்நிகழ்வு நிகழ்ந்திருந்தது.

இந்நிகழ்வுக்கு கலந்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு CRகொப்பியும் பேனாவும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தது. யோகேஸ்வரன் அவர்களின் அலுவலக வட்டாரங்களிலிருந்து கிடைத்த தரவுகளின் படியும் நேரடியாகப் பார்த்தவர்களின் தரவுகளின்படியும் 8000ஆயிரம் (எண்ணாயிரம் CRகொப்பிகள்) பெட்டிகள் உடைக்கப்படாமல் உறங்குகின்றது.

ஒரு கொப்பியின் விலை 135ரூபா 135,00/= X 8000 = 1080000,00/=

அண்ணளவாக ஒருமில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான கொப்பிகள் யோகேஸ்வரன் அவர்கள் அலுவலகத்தில் உறங்குகின்றன. இத்தொகையை வழங்கிய உறவுகள் மக்களுக்குப் பயன்படத்தானே உதவினார்கள். ஆனால் பொலித்தீன் கழற்றப்படாத கட்டுகளில் உறங்கும் கொப்பிகள் அடுத்த தேர்தல் வரை அப்படியே யோகேஸ்வரனின் அலுவலக அறையில் உறங்கப்போகின்றனவா ? அடுத்த தேர்தலுக்கிடையில் கொப்பிகள் கறையான் அரித்து மண்ணுக்குப் போக முன்னர் ஏன் பாதிக்கப்பட்ட செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமிமுகாம் மாணவர்களுக்கு அல்லது கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிப்புற்று மீள்குடியேறிய ஊர்களில் கல்வி கற்கும் வசதிகளற்ற மாணவர்களுக்கு வழங்கக்கூடாது ?

மெனிக்பாம் முகாமிற்கு இப்போது சென்றுவரக்கூடிய அனுமதியிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான அனுமதியினைப் பெற்றுச் சென்று கூட அந்த மாணவர்களுக்குக் கறையானுக்கு இரையாகப்போகிற கொப்பிகளை வழங்கலாமே…..?

ஆனந்தகுமாரசாமி முகாமில்வதியும்குடும்பமற்றும்மாணவர்களின்மொத்தஎண்ணிக்கை:-

மொத்த குடும்ப எண்ணிக்கை – 1827 (ஆண்கள் =2268, பெண்கள் =3153)
மாணவர்கள்: 5வயதிலிருந்து 10வயதுவரை = 837 (ஆண்கள்: 369, பெண்கள் : 468)
11வயதிலிருந்து 18வயதுவரை = 1194 (ஆண்கள்: 587, பெண்கள் : 607) மொத்த மாணவர்கள் எண்ணிக்கை : 2031.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வியுதவியை எதிர்பார்க்கும் சில இடங்கள் பற்றி:

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவும் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே படுவான்கரை என அழைக்கப்படும் பிரதேசத்தில் ஒரு பகுதியாகும்.

இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு பல தடவைகள் மக்கள் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற பகுதியாகும் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பிரதேசங்களை 2007 ஆம் ஆண்டு இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர் இதனால் இந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்து பல மாதங்களுக்குப் பின் மீண்டும் குடியேறினர்.

இப்பிரதேசத்தில் உள்ள மக்களில் அனேகமானோர் யுத்தப் பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களாகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் கல்வியிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. இதற்கான முக்கிய காரணம் கற்றலுக்கான வளங்கள் இங்கு குறைவாகக் காணப்படுவதும் மக்களின் வறுமை நிலையுமேயாகும்.

மண்முனைதென்மேற்குபிரதேசசெயலாளர்பிரிவு.

மொத்தக் குடும்பங்கள் (அண்ணளவாக) – 15500
மொத்தச் சனத்தொகை – 23988 (2007 ஆம் ஆண்டு)
கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் – 24

போரதீவுப்பற்றுபிரதேசசெயலாளர்பிரிவு

மொத்தக் குடும்பங்கள் (அண்ணளவாக) – 18000
மொத்தச் சனத்தொகை – 38282 (2007 ஆம் ஆண்டு)
கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் – 43

இப்பகுதிகள் யோகேஸ்வரன் அவர்கள் எவரினதும் அனுமதியின்றியே போய் உதவக்கூடிய ஊர்கள்.

எங்களுக்காக எஞ்சிய சொத்து கல்வி மட்டுமே. எங்கள் இனத்தின் நம்பிக்கையும் உயிர்ப்பும் அதுவே. அக்கல்வியை வளப்படுத்த யோகேஸ்வரன் அவர்கள் கருணை காட்டுவாராக. தமிழர்களின் வாக்குகளை வென்ற தமிழ் அரசியல்வாதி நீங்கள் என்ற உரிமையோடு கேட்கிறோம் உங்களிடம் உறங்கும் கொப்பிகளை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்குங்கள்.

இன்னும் மக்களுக்குப் பகிரப்பட வேண்டியவை நிறையவே உங்களிடம் இருக்கிறது. அதையெல்லாம் தோண்டியெடுத்து உங்களை சிக்கலில் சிக்க வைக்கும் நோக்கமில்லை. மனிதாபிமானத் தேவைகளைப் புரிந்து உரிவர்களுக்கானதை வழங்குங்கள். இம்மக்களின் சேவையே உங்களை அடுத்து வருகிற தேர்தல்களிலும் தொடர்ந்து வாழ வைக்கப் போகிறது.

(படம்- தினக்கதிர் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது)

Sunday, August 14, 2011

கே.பி , கருணான்ரை ஆளை கலியாணம் கட்டாதை…!

அவன் ஒரு நாத்திகன். கடவுளை நம்பாதவன். இயல்பிலேயே சம்பிரதாயம் , சாத்திரம் , சாதி , வேற்றுமை எல்லாவற்றிற்கும் எதிரானவன். வீட்டில் வணங்கும் சாமிகளின் உருவங்களை இவன் கண்ணிலிருந்து மறைத்து வைத்தது ஒருகாலம். 9பிள்ளைகளிலும் அம்மா அப்பாவிற்கும் அண்ணன் அக்காக்களுக்கும் வில்லங்கம் பிடித்த இளைய பிள்ளையவன்.

இயல்பிலேயே அவன் வாசிப்புப்பழக்கம் மொழிகளைக் கற்றுக்கொள்தல் அவனுக்குக் கொடையாயிருந்தது. பைபிள் , பகவத்கீதை , குரான் அடங்கலாக இராமாயணம் முதல் உலகப்புரட்சியாளர்கள் வரை படித்திருக்கிறான். எல்லாவற்றிற்கும் அவனிடம் மாற்றுக்கருத்து இருந்து கொண்டேயிருக்கும். வீட்டில் எல்லாரும் சொல்வார்கள் “அவன் ஒரு கலகக்காரன்“ என்று.

1984ம் ஆண்டு தனது 20வது வயதில் கல்வியை இடைநிறுத்திவிட்டு ஈழவிடுதலைக்கனவோடு ஊரிலிருந்து காணாமற்போனவன். தனது சுயவிருப்போடு விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டான். இந்தியாவில் பயிற்சி முடித்துத் திரும்பி வந்தவன் அவன் பிறந்த மாவட்டத்திற்கே பணிக்காய் அனுப்பப்பட்டவன்.

25வருட போராட்ட வாழ்வு. அரசியல்துறை , புலனாய்வுத்துறை , பொருண்மியம் , வெளியகப்பணி , வெளிநாட்டுக்கல்வி , வெளிநாட்டு ஆயுதப்பயிற்சியென ஐரோப்பா ஆசியா ஆபிரிக்காவெல்லாம் அலைந்து தாய்நாட்டுக்கான பணிகளில் தன்னை அர்ப்பணித்தவன்.
அவனோடு வெளிநாடு வந்த பலர் வந்த இடங்களில் நின்றுவிட்ட பின்னரும்….., நாடு நாடுதந்த கல்வி , உயர்வு அதையெல்லாம் இன்னொரு நாட்டில் முதலீடு செய்ய விரும்பாமல் தாயகத்திற்கே திரும்பிய உன்னதபோராளி.

கடைசி யுத்தமுனையிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு காடுகளால் சென்ற அணியோடு கிழக்கிற்குச் சென்றவன். கிழக்கில் கனவோடு இவர்கள் கள நிலமைகளை எதிர்பார்த்திருக்க 2009 மே 18 நினைத்தவையெல்லாம் தவிடுபொடியாகி அவனும் அவனோடு பலரும் தனித்துப் போனார்கள்.

அவன் நம்பிய தலைமை அவன் நேசித்த தோழமைகள் அவன் தோழோடு தோழ் நின்ற பலரை யுத்தம் விழுங்கியிருந்தது. இனி வாழ்வா சாவா என்ற நிலமையில் பிரமை பிடித்தாற்போலக் கழிந்த நாட்கள் அவை. அடுத்த கட்டம் என்ன செய்வதென்று அறியாத நிலமை…..தன்கூட இருந்தவர்களை நண்பர்களின் உதவிகளை நாடி மத்தியகிழக்கு நாடுகள் அயல்நாடென அனுப்பிவிட்டான்.

அன்று தன்னால் செய்ய முடிந்தவற்றையெல்லாம் செய்து மிஞ்சியவர்களுக்கான பாதையொன்றை அமைத்துவிட்டு தனது கடைசி முடிவைத் தேடிக்கொண்டிருந்த நேரம்….அவனது சில நண்பர்கள் நாட்டைவிட்டு வெளியில் வருமாறு அழைத்தார்கள்.
எல்லாம் முடிஞ்சுது…..இனி நானென்னத்தைச் சாதிக்கப்போறன்…..இங்கினை ஏதாவது முடிவைப்பாப்பம்……எனச் சலித்தவனைச் சில நண்பர்களின் தொடர் முயற்சி நாட்டைவிட்டு வெளியேறும் முடிவை அவனுக்குள் விதைத்தது.

கடைசிச்சரணடைவு பல்லாயிரம் பேரைச் சிறைகள் தாங்கிக்கொள்ள கொழும்பிற்குள் நுளைந்தான். அவசர அவசரமாக ஏற்பாடுகள் முடிந்து கட்டுநாயக்காவில் காலடி வைத்த நேரம் சாவின் முடிவு எழுதப்பட்டதாகவே நினைத்துக் கொண்டிருந்தான். கடும் சோதனைகள் , விசாரணைகள் தாண்டியும் ஏனோ தானோ இனி என்ன நடந்தாலென்ன என்ற வெறுப்போடு தான் விமானம் ஏறினான்.

போயிறங்கிய நாடும் ஐரோப்பாவுமில்லை , அமெரிக்காவுமில்லை ஆசியநாடொன்றுதான். செத்துப்போய்விட்டதாக நம்பிய பலர் அங்கே அவன் சந்தித்தான். எல்லோரும் ஏதோ இருக்கிறார்களே ஒளிய ஒருவரும் உண்மையான நிம்மதியுடனில்லையென்பதை உணர்ந்தான்.

வந்த ஆரம்பம் பழைய நண்பர்கள் பலர் அவனைத்தேடித் தேடி தொலைபேசியில் அழைத்தார்கள். என்னமாதிரி மச்சான்….? என்ன நடந்தது…? என்ன மச்சான் ஏமாத்திப் போட்டியள்….? ஒண்டையும் விடமாட்டியள் நிலமையை மாத்தீடுவியளெண்டு நினைச்சம்….ஏன்….? கடைசி நிலவரத்தை அறியும் ஆவல் பல அழைப்புகளில் இருந்தது. சில உண்மைகளை அவனும் சொல்லித்தான் விட்டான்.

அண்ணையென்னமாதிரி…? இருக்கிறாரோ…? பலர் கேட்டார்கள். அவனது பதில் எல்லோரையும் போல வருவார் அல்லது வரலாம் , அல்லது அவருக்கு மரணமில்லையென்று இல்லாமல் 25வருடம் தனது அனுபவங்களையெல்லாம் திரட்டிச் சொன்ன பதிலோடு பலர் அவனைத் தொடர்பிலிருந்து அறுத்துவிட்டார்கள். பொய் சொல்ல மனம் வரவில்லை ஆகையால் பல உண்மைகளை அவன் தனது பழைய நண்பர்களுக்கு மறைக்காமல் சொன்னான். அவனது அரிச்சந்திர நேர்மை அவனைப் பல நண்பர்கள் கேணைப்பயலெண்டும் சொன்னார்கள்.

இவனுக்கென்ன தெரியும் லூசுப்பயல்…..உண்மை சொல்றாராம்……சமாதான காலத்தில் அவர்கள் அழைத்த போது கூட போக மறுத்து 2தசாப்தங்களைக் கழித்தவர்களே அவன் சொன்ன யாவும் பொய்யென்றார்கள். பலநேரங்களில் அதையெல்லாம் நினைத்து அழுததும் உண்டு சிலநேரம் தனது நண்பர்களை நினைத்துச் சிரித்ததுமுண்டு.

மெல்ல மெல்ல நண்பர்களின் தொடர்புகள் விடுபட்டு ஒருவரும் அவனை இப்போது நினைப்பதேயில்லையென்ற அளவுக்கு விட்டுவிட்டார்கள். வறுமை அவனையும் அன்னியத் தெருவில் கோவில்களிலும் யாராவது ஏதாவது கொடுத்தால் தான் அன்றாட உணவென்ற நிலமைக்கு நிலமை அடித்துக் கொண்டு போய் ஒதுக்கியிருக்கிறது.

இளமை சுருங்கி 47வயதில் தனித்துப் போயிருக்கிறான். அவனுக்கென்று குடும்பம் இல்லை குழந்தைகள் இல்லை நோய் வந்து சுருண்டாலும் தானே தனக்காக உடல் நொந்து வலித்தாலும் எல்லாமும் தானாக விரக்தியின் விளிம்பில் வாழ்கிற ஒரு 25வருட அனுபவம் மிக்க சொத்து அவன்.

இன்னும் அறுபடாத தொடர்போடு ஒரு தோழி அவனோடு தொடர்பில் இருக்கிறாள். அவனுக்கான இப்போதைய சின்ன ஆறுதலாக அவள் அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து அவனது சுகநலன்களை விசாரிப்பாள். அள்ளிக் கொடுத்து அவனை மாளிகையில் வாழ வைக்க வசதியற்ற அவளால் சில தடவைகள் சிறிய சிறிய உதவிகளை மட்டுமே செய்ய முடிந்தது.

ஏன் கலியாணம் கட்டாமல் இருந்தீங்கள்…..?

கட்டியிருந்தா இப்ப என்ரை பிள்ளையளும் உங்களிட்டை கையேந்தியிருக்கும்….நீங்கள் மாவீரர் குடும்ப லிஸ்டிலை என்னை வைச்சு விளக்குக் கொழுத்தியிருப்பியள்…..அது நடக்கேல்லயெண்டது கவலைபோல….

அப்ப நீங்க ஒருதரையும் காதலிக்கேல்லயா….? கனபேரைக்காதலிச்சிருக்கிறேன்…..கனபேரா…? அப்ப ஒருத்தியும் சரிவரேல்லயா….? சொல்லி முடிக்க விடுபிள்ளை…..முதல் நான் காதலிச்சது எனக்குப்படிப்பிச்ச ரீச்சரை…..பிறகு காற்சட்டை போட்ட காலத்தில நடிகை சிறீதேவியை…..சிறீதேவி போனிகபூரை கட்டாமலிருந்திருந்தா முயற்சி செய்து பாத்திருப்பன்…..

அவன் தனது அந்த நாள் ஞாபகங்களையெல்லாம் சுவையோடு சொல்லிச் சிரிப்பான்.
அப்படித்தான் கதை வாக்கில் ஒருநாள் அவன் தோழி கேட்டாள்…,

இங்கினை ஒரு சிறீதேவியைப் பாப்பமோ….? பாருங்க இனியென்னேயிறது…..பகிடி பகிடியாகக் கதைச்சது உண்மையாக அவனுக்கொரு சிறீதேவியை அவன் வாழும் ஏழைநாட்டில் சந்தித்தான்.

தமிழ் முகத்தைப் பார்த்த சிறீதேவி அவனோடு பேசினாள். சுவிற்சலாந்திலிருந்து அங்கே வந்திருப்பதாகவும் யாரோ சாத்திரக்காரனை அங்கே சந்தித்து பரிகாரம் செய்ய வந்ததாகவும் சொன்னாள். 47வயதில் காதலென்ன கவிதையென்ன என்றிருந்தவனின் தலைக்குப் பின்னால் பிரகாஸ்ராஜ்ஜிற்கு லைற் எரிஞ்சமாதிரி லைற் எரிஞ்சுது…..சிறீதேவியும் தனிக்கட்டை காதலிச்ச மச்சான் கைவிட்டதாலை சிறீதேவி பிரமச்சாரியம் காப்பதாகவும் சொன்னாள்.

அவனைப்பற்றி அறிஞ்சதும் சிறீதேவிக்கு அவன்மீது காதலாம். பொருத்தம் பாக்க வேணுமெண்டு அவனது பிறந்த திகதி நட்சத்திரம் கேட்டாள் சிறீதேவி. 3ம் 4ம் 5ம் 6ம் வீடுகளில் ராகு , கேது , வியாழன் , புதன் என கனக்க சிறீதேவி சொன்னாள்.

அவன் இருக்கிறதுக்கு முன்னால் வீட்டில் தெலுங்கன் , பின்னால் வீட்டில் கன்னடன் ,அயல் வீட்டில் இலங்கையன் தான் இருந்தார்கள். ஆனால் சிறீதேவி கன வீடுகள் அவன் சாதகத்தில் இருப்பதாகச் சொன்னாள். அவனைவிட ஒருவன் தனக்கு கிடைக்கமாட்டானென்று 5சாத்திரிகள் சொன்னதாகச் சொன்னாள். ஆனாலும் அவனுக்கு சில தோசங்கள் நீங்கள் பரிகாரங்கள் செய்ய வேண்டுமென்றாள்.

வந்த சனியன் நிண்ட சனியனையும் சேத்துக்கட்டினது இதுதானோ…..? காலைப்பாம்பு சுற்றினமாதிரியிருந்தது சிறீதேவியின் கடவுள்களும் சாத்திரமும். தப்ப வழிவிடாமல் சிறீதேவி அவனைச் சுற்றிக் கொண்டது. சிறீதேவிக்குத் தான் ஒரு நாத்திகன் கடவுளை நம்பாதவன் சாத்திரங்களை நம்பாதவன் என்றெல்லாம் தனது அருமை பெருமைகளைச் சொன்னான். சிறீதேவி விடுவதாயில்லை.

வாழ அந்த நரகத்திலிருந்து தப்ப வேறு வழியில்லை…..நம்பிய நண்பர்களும் அவனைத் தெருவில் விட்டுவிட்டார்கள்….அன்றாடச் சீவியத்துக்கு அல்லாட்டமான நேரம் கொள்கையும் இலட்சியமும் என்னத்தைக் கொண்டு வந்து தரும்…..? கடைசியில் சிறீதேவியிடம் சரணடைந்தான்.

தனது தலைக்குப் பின்னால் எரிந்த சிறீதேவி லைற்றைப் பற்றித் தோழிக்குச் சொன்னான். அவளுக்கு அவனது மாற்றத்தில் நம்பிக்கையில்லை….உண்மையாவா…? ஓம்…..! இப்பிடியே போனா ஒருநாளைக்கு என்ரை பிணமும் அனாதையாய் போயிடும்….! எங்கினையும் போயிடலாமெண்டுதான் அவாவுக்கு ஓமெண்டு சொன்னனான்…..அதுவும் ஒரு அப்பாவியா இருக்குது…..84ம் ஆண்டு சுவிஸ் வந்தவவாம்…..நாடு பிரச்சனை சாவு அதுகளைப்பற்றி ஒண்டும் ஆளுக்கு விளக்கமில்லை…கடவுள் சாத்திரம்…அதோடை இருக்கிறா…..அதான்….

தனக்குள்ளிருந்த தனது வாழ்வு மீதான கனவுகள் கற்பனைகள் எதிர்பார்ப்புகள்…..தனக்கு வர வேண்டிய துணை பற்றிய ஒருகாலத்து எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் தனது இயலாமைக்குள் புதைத்துக் கொண்டு சிறீதேவிக்குச் சம்மதம் தெரிவித்தான். சிறீதேவி சுவிஸ் போய் அவனை சுவிஸ் எடுப்பதாகச் சொல்லிவிட்டுப் போனாள். காதல் கலியாணம் உன்னோடு தான் என்ற சிறீதேவி அவனுக்காக ஒரு சதத்தையும் கொடுக்கவுமில்லை உதவவுமில்லை. நாளுக்கு 10முறை காதலோடு கதைபேச சுவிசிலிருந்து தொடர்பு கொள்வாள்.

பசியோடு அவனிருக்க சிறீதேவி தான் செய்த உணவுகள் பற்றி வணங்கும் சாமிகளுக்காக செலவளிக்கும் பணம் பற்றியெல்லாம் சொல்லுவாள். சிறீதேவி தொலைபேச அவன் கண்ணீரோடு தனது வறுமை பற்றி நினைத்து வருந்துவான்.

அன்றைக்கொரு வெள்ளிக்கிழமை. இரவு 2.45மணி. சிறீதேவி தொலைபேச அழைத்தாள். என்னைக் குறைநினைக்கப்படாது…..ஆர் கே.பி , ஆர் கருணா…? அவன் கே.பி. யார் , கருணா யாரென்றெல்லாம் விளங்கப்படுத்தினான்.

நான் இண்டைக்கொரு நெல்லியடிச் சாத்திரியிட்டைப் போனனான்….. என்ரை அண்ணியும் நானும் தான் அங்கை நிண்டனாங்கள்…..அவர் என்ரை கடந்த காலம் உங்களைச் சந்திச்சதெல்லாம் அண்ணீட்டைக் கேட்டிட்டு பூதக்கண்ணாடியாலையெல்லாம் பாத்திட்டு நல்லாத் தான் சொன்னவர்…திடீரெண்டு சோபாவில இருந்த மனிசன் எழும்பி ஆட வெளிக்கிட்டுட்டார்…… அவருக்கு வளமையா கலை வாறதில்லை…..இண்டைக்கு என்ரை குறிப்பைப் பாத்தவுடனும் கலைவந்திட்டுது…அப்பதான் சொன்னார் நீங்கள் துரோகியாம் கருணா கே.பியின்ரை ஆளாம் உங்களைக் கலியாணம் கட்ட வேண்டாமாம்…உங்களைக் கட்டினா நான் கெதியில விதவையாகீடுவனாம்…..அண்ணாவும் அண்ணியும் சொல்லீட்டினம் கருணான்ரை கே.பீன்ரை ஆளெண்டா சரிவராதாம்……

சிறீதேவி அவனது தலைக்குப் பின்னால் பிரகாசித்த லைற்றை ஒரேயடியாய் அடிச்சு நூத்துப்போட்டு தொலைபேசியை அடித்து வைத்துவிட்டாள்.

அவனுக்கு ஒரே குழப்பம். நெல்லிடியச்சாத்திரிக்கு என்னெண்டு உருவந்தது….? எப்பிடி அவனை கே.பி,கருணா துரோகக்குழு என்று சாத்திரம் சொல்ல முடிஞ்சது…? அதுவும் அவன் ஓடியொழிச்சு வந்து இருக்கிற அன்னியநாட்டில ஒரு அரசியலும் செய்யவுமில்லை அறிக்கைகள் எழுதவுமில்லை….அன்றாடச் சோற்றுக்கு சிங்கியடிக்கிற நிலமையில் இருந்தவனைத் தேடி வந்த சிறீதேவியை தட்டிப்பறிச்சுக் கொண்டு போன நெல்லியடிச் சாத்திரிக்குத் தன்மேல் என்ன கோபம் என்பது விளங்கவேயில்லை….!!! நினைக்கச் சிரிப்பும் வந்தது.

தோழிக்கு மிஸ்கோல் விட்டான். நித்திரை வரவேயில்லை. கையிலிருந்த சில்லறையும் காலியாகிவிட்டிருந்தது. இடம் கொடுத்தவர்களுக்கு 2மாத வாடகையும் கொடுக்கவில்லை. சிறீதேவி மூலம் தனக்கொரு வாழ்வு வருமென்று நம்பியது போய்……கண்முன்னால் ஒரு வனாந்தரம் அவனைச் சூழ்ந்து கொண்டது.

என்ன பிள்ளை மறந்திட்டீயளா ? எங்கை ஒரே வேலை….அதானண்ணை…...சிறீதேவி என்னவாம்….எப்ப சுவிஸ் வாறியள்….? தோழி கேள்விகளை அடுக்கினாள்….
லைற் நூந்து போச்சுது பிள்ளை…. சிறீதேவி சந்திச்ச நெல்லியடிச் சாத்திரக்காரனைப்பற்றிச் சொன்னான். அவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை…..

இதென்ன கறுமாந்திரம் பிடிச்சது…! சாத்திரிமாரும் இப்ப கே.பின்ரை ஆள் கருணான்ரை ஆளெல்லாம் சாத்திரத்திலயும் சொல்லத் துவங்கீட்டினமோண்ணை….???

சுவிஸ் சிறீதேவி கட் ஆராவது ஒரு சிறீதேவியைப் பாருங்கோ பிள்ளை….இப்பிடியே இருக்கேலாது….. தலையிடிக்குது….போற போக்கு தெருவில பிச்சையெடுக்கிற நிலமையா இருக்கு…..சினேதன்மாரும் எல்லாரும் கைவிட்டிட்டாங்கள்….உண்மையாத்தான் சொல்றன் என்னாலை சமாளிக்கேலாதாம்…..அங்கையெ அப்ப செத்திருக்கலாம்…..வா வாவெண்டு கூப்பிட்டவங்களும் உண்மையைச் சொன்னதுக்காக கைவிட்டிட்டாங்கள்…..

என்ரை கடைசிக்கனவொண்டிருக்குப் பிள்ளை….நான் சாக முதல் 25வருச அனுபவமெல்லாத்தையும் ஒரு புத்தகமா எழுத வேணும்….இஞ்சித் தேத்தண்ணி ஒராள் இடைக்கிடை போட்டுத்தர குடிச்சுக்குடிச்சு நான் எழுத வேணும்……

எனக்கு விளங்குது இஞ்சித் தேத்தண்ணிக்கேன் இன்னொராள் தேத்தண்ணிக் கடையில போயிருந்து எழுதெண்டு நினைக்கிறீங்கள் பிள்ளை….சீரியசாகச் சொல்லீட்டு இடையில ஒரு வடிவேல் பகிடியும் விடடான். உள்ளுக்குள் ஊசிமுனை கொண்டு குற்றிய வலியையும் தனது வறுமையையும் நினைக்கப் பயமாயிருந்தது…..

சிலவேளை நான் செத்துக்கித்துப்போனாலும் நான் சொல்றதுகளை ஒரு குறிப்பெழுதி வையுங்கோ பிள்ளை…..விவேக்கின் ஸ்ரைலில் அதையும் சொல்லி வைத்தான்…….

விரைவில் தெருவிற்கு வரவிருக்கும் தனது வாழ்வுக்கு சிறீதேவி கைகொடுப்பாளென்ற நம்பிக்கையும் போய் 47வயதை ஞாபகப்படுத்தியது நரைமுடிகள்…….தனது அனுபவங்களை தனது போராட்ட காலங்களையெல்லாம் ஒரு நூலாக எழுதும் கனவோடு ஆற்றங்கரைகளிலும் அடைக்கலம் புகுந்த ஆள்நெரிசல் கூடிய இடங்களிலும் இருந்து தனக்குள்ளான 25வருட வாழ்வை மீளமீள ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

கிடைத்த எத்தனையோ வசதிகள் கோடிக்கணக்கில் இயக்கம் கொடுத்த பணம் யாவையும் நாட்டுக்கானதாகவே வழங்கி இன்று ஒற்றையாய் தனியனாய் எல்லாம் இழந்து போன நிலமையை எண்ணிப்பார்க்க அழுகையோடு கூடிய வெறுப்புத்தான் வந்தது.

தொடர்பில் வந்த தோழி சொன்னாள்….அவன் வாழும் நாட்டில் வந்திருந்த அவன்போன்ற ஒரு முன்னாள் போராளி தூக்கில் தொங்கி இறந்ததாக….தூக்கில் தொங்கியவன் தனது மரணத்திற்கு தானே பொறுப்பென்று எழுதி வைத்தானாம்…..சாகும் போதும் தனது சாவு மற்றவரை அலைக்கக்கூடாதென்று தனது மரணசாசனத்தை எழுதியிருக்கிறான் போல…..

தனக்கும் ஒரு தூக்குக்கயிறு அல்லது ஏதாவதொரு மாற்று தன்னையும் நெருங்குவதை உள் மனம் உணர்த்துவதாக உணர்ந்தான்…..வீரர்களாய் களத்தில் வீழுவோம் விடுதலையின் வேர்களாய் முளைவிடுவோம் என்று தோழர்களை வழியனுப்பிய துணிச்சல் தற்போது அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் போவதாக உணர்ந்தான். தனது இப்போதைய மாற்றங்களைத் தோழிக்குச் சொல்லத் தொடங்கினான்…..

10.07.2011

Sunday, July 31, 2011

போரால் பாதிக்கப்பட்ட படுவான்கரையின் இன்றைய கல்வி நிலமை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவும் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே படுவான்கரை என அழைக்கப்படும் பிரதேசத்தில் ஒரு பகுதியாகும்.

இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு பல தடவைகள் மக்கள் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற பகுதியாகும். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பிரதேசங்களை 2007 ஆம் ஆண்டு இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர். இதனால் இந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்து பல மாதங்களுக்குப் பின் மீண்டும் குடியேறினர்.

இப்பிரதேசத்தில் உள்ள மக்களில் அனேகமானோர் யுத்தப் பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களாகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் கல்வியிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. இதற்கான முக்கிய காரணம் கற்றலுக்கான வளங்கள் இங்கு குறைவாகக் காணப்படுவதும் மக்களின் வறுமை நிலையுமேயாகும்.

மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு

மொத்தக் குடும்பங்கள் (அண்ணளவாக) – 15500
மொத்தச் சனத்தொகை – 23988 (2007 ஆம் ஆண்டு)
கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் – 24

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு

மொத்தக் குடும்பங்கள் (அண்ணளவாக) – 18000
மொத்தச் சனத்தொகை – 38282 (2007 ஆம் ஆண்டு)
கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் – 43

இவர்களுக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள:-
முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723

Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com
இணையத்தளம் : www.nesakkaram.org

Friday, June 24, 2011

என்ர நிலமையை முதலாவதா எழுது…

XXXXஅக்காவும் XXXXXXஅண்ணையும் இங்காலை வாங்கோ….
உங்களைத்தான் இங்காலை வாங்கோ….

அத்தனைபேருக்குள்ளும் அவளையும் அவனையும் இனம்காட்டி அழைத்தவன் எதிரியின் இனத்தைச் சேர்ந்தவனில்லை. இவர்கள் பணியாற்றி அரசியல் பிரிவில் அவனும் பணியாற்றியவன். தூXXன் என்ற பெயரைக் கொண்டவன். அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மெய்ப்பாதுகாவலராக இருந்தவன்.

யுத்தம் முடிந்து நிராயுதபாணிகளாய் நிரையில் நின்றவர்களில் பலரை புலிகள் என்பதை இனங்காட்டி மக்களிடமிருந்து பிரித்தெடுத்துக் கொண்டிருந்தான் அவன். எதிரியின் இதயக்கூட்டையே தொட்டுத்திரும்பிய விடுதலையமைப்பின் பலம் நம்பிக்கை யாவும் இன்று தவிடுபொடியாய்…..புலியே புலியைக்காட்டிக் கொடுக்கும் நிலமைக்கு வரக்காரணமானது எது….? அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவன் பெயர்களைச் சொல்லிக்கூப்பிடக்கூப்பிட அவன் சொல்லுமிடத்தை நோக்கிப் பலர் போய்க் கொண்டிருந்தார்கள்.
XXXXஅக்கா XXXXXXஅண்ணை உங்களைத்தான் கூப்பிட்டனான்…. அவன் திருப்பியும் அழைத்தான்.

தொண்டைக்குழியில் மிதிச்சமாதிரியிருந்தது அவனது அழைப்பு. அந்த இடத்தில் நின்ற அனைவரும் அவனையும் அவளையும் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். இருவரும் சுருக்குக்கயிறு கழுத்தில் சுற்றுவதை உணர்ந்தார்கள்.

கணவனின் கையிலிருந்த குழந்தையைத் தான் வாங்கிக் கொண்டாள். தூறிக்கொண்டிருந்த மழைத்தூறலில் குழந்தையை நனையாது கையில் கொண்டு வந்த துவாயினால் போர்த்தினாள்.

நடவுங்கோ……

என சற்று அழுத்தமான தொனியில் சொன்னான் அவன். மாற்று வழியின்றி அவன் பின்னே சென்று கொண்டிருந்தார்கள். சற்றுத் தூரத்தில் அமைந்திருந்த மறைப்பிற்குள் செல்லுமாறு கையைக் காட்டினான்.

உள்ளே போனவர்களை விசாரணை செய்ய 4பேர் இருந்தனர். அதிகம் கடவுளர்களை நம்பாதவள் அந்த நிமிடத்தில் எல்லாக்கடவுளர்களின் பெயர்களையும் உச்சரித்தாள். உள்ளுக்குள் ஆயிரம் வேண்டுதல்கள் செய்தாள். இந்தக் கைகளிடமிருந்து தப்பினால் தான் அழைத்த கடவுளர்க்கெல்லாம் நேர்த்திகள் செய்வேனென்று நினைத்துக் கொண்டாள்.
அங்கே அவர்களை விசாரிக்கவெனத் தமிழ் தெரிந்த அதிகாரியும் ஒருவன் இருந்தான். அவன் முஸ்லீம் இனத்தவனாக இருக்க வேண்டும். அவனது தமிழ் வித்தியாசமாக இருந்தது.
வட்டுவாகல் தாண்டி வரும்போது அந்த அதிகாரியைச் சிவிலுடையில் இவர்கள் கண்டார்கள். அவன் சரணடைய வந்தவர்களைத் திட்டிய திட்டுகளை இவளும் கேட்டுக்கொண்டுதான் நடந்தாள். அவன் முகத்தைப் பார்க்கவே பயமாயிருந்தது. அங்கே பேசிய தூசணத்தால் இங்கே பேசாமல் இவர்களது விபரங்களைப் பதிவு செய்து கொண்டான்.

தூXXன் உள்ளே வந்தான் அவர்களைத் தன்னோடு வரச்சொல்லி அழைத்தான்…..அவளது அவனைத் தூXXனைக் கூட்டிப்போகச் சொன்னான்….அவளைத் தான் விசாரிக்கப் போவதாகச் சொன்னான்.

வட்டுவாகலில் சயனைட்டை அடிப்போம் அல்லது குண்டைக்கட்டி வெடிப்போமென்று கேட்டவளுக்கு….எல்லாரும் தான் போயினம் நாங்கள் ஏன் சாவான்….வா போவம்….எல்லாருக்கும் ஒத்ததுதான……என்றவன் மீது எரிந்து விழுந்தாள்.

அப்ப எங்கடை கொள்கையெண்டு நாங்க கத்தினதெல்லாம் ஆருக்காக…..?

எடியம்மா நீ அரசியல் செய்தனியடி….உன்னோடை கதைக்கேலாது……இந்தக் குழந்தையை என்ன செய்யிறது….? உன்ரை கையாலை உன்னாலை கொல்லேலுமே….? அதைச் செய் நான் நீ சொல்ற குப்பியை அடிக்கிறன் அல்லது குண்டைக்கட்டிறன்…..

அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. குழந்தை பிறந்து 7வது மாதமே காவலரணில் கடமையில் இருந்தவள். தான் இறந்து போனால் இயக்கம் தனது குழந்தையை வாழ வைக்குமென்ற தைரியத்தில் சென்ற மாதம் வரை ஒரு அணியை வழிநடத்திக் கொண்டிருந்தவள்.

கட்டாய ஆட்பிடியை எதிர்த்துக் குரல் கொடுத்து அரசியல்பிரிவினரிடம் எதிர்ப்புகளை வாங்கிய பின்னும்…, கடைசி முயற்சியாக ஸ்பீக்கரைச் சுமந்து பதுங்குகுளிகளிலும் குடும்பங்களுடனும் போய் ஒளிந்து கொண்ட தளபதிகள் போராளிகளையெல்லாம் இறுதி யுத்தம் செய்ய வாருங்கள் என அழைத்தாள்.

ஆனால் எதுவித அசுமாத்தமுமின்றிச் சுயநலமாய் பதுங்கியவர்கள் கட்டாயப்பிடியில் அகப்பட்ட பிள்ளைகளைப் பலிக்கு அனுப்பிவிட்டு ஒளிந்திருக்கும் உண்மையை அறிந்த போதுதான் கணவனையும் அழைத்துக் கொண்டு தானும் ஒதுங்கினாள்.

எல்லோரும் நம்புவது போல வெளிநாடுகள் வரும் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு குழந்தையையும் கணவனையுமே காப்பாற்றத் துணிந்தவளால் அந்தக் குழந்தையைத் தன்கையால் அழிக்கத் தைரியம் வரவில்லை. அழுதாள் ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுதாள்.
000 000 000

வீட்டில் அவளோடு கூடப்பிறந்த 3அண்ணன்களும் அடுத்தடுத்து மாவீரர்கள் ஆனார்கள். அம்மா அப்பாவுக்கு மிஞ்சிய அவளும் கரும்புலியாக கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்த காலங்களில்…..,விதையாய் வீழ்ந்து போன 3 அண்ணன்களையும் விதைத்த துயிலும் இல்லங்களில் போயிருந்து அவர்களது கனவுகளை நனவாக்குவேனெனச் சத்தியம் செய்வாள். தானில்லாது போனால் அன்புச்சோலை மூதாளர் பேணலகம் தனது தாயாரையும் தந்தையையும் காப்பாற்றுமென்று நம்பினாள்.

கரும்புலியாகும் நாளுக்காக் காத்திருந்தாள். ஆனால் கரும்புலியாய் அவள் போகும் விருப்பை மாற்றிக் கொள்ளுமாறு தலைவவரிடமிருந்து பதில் வந்தது. வீட்டிலிருந்து 3வீரர்களைத் தந்த குடும்பத்திற்காக அவள் களப்பணிகளிலிருந்து விலகி காலம் முழுவதும் அரசியல்பணி செய்ய வேண்டுமென்ற அறவித்தலும் அவளுக்கான விசேட அன்பளிப்பு ஒன்றும் தலைவரால் வழங்கப்பட்டிருந்தது.

தலைவனின் சொல்லைத் தட்ட முடியாது அரசியல் களத்தில் ஊருராய் இறங்கிப் பணி செய்யத் தொடங்கினாள். பெண்கள் மட்டத்தில் பல வேலைகளை முன்னெடுத்துச் செய்து கொண்டிருந்தாள். தனது செயல்கள் தன்னைப்போலவே தூய்மையானதாயிருக்க வேண்டுமென்பதில் எப்போதுமே கவனத்துடன் இயங்கினாள். அவளது நேர்மையும் தைரியமும் பல தடவைகள் சோதனையாகவும் மாறிய அனுபவங்கள் நிறையவே நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அவள் நேசிக்கும் தூயதலைவன் உள்ளவரை யாவையும் வென்றுவிடுவேன் என்ற தைரியத்தோடு கடமையில் கவனமாக இருந்தாள்.

திருமணப்பேச்சு எழுந்த போது அதிகம் அக்கறைகாட்டவில்லை. ஊனமுற்றவர்களோடும் சமூகத்து ஊனங்களைச் சுமந்து வாழும் பெண்களுடனும் தனது வாழ்வை முடித்துவிடவே விரும்பினாள். ஆனால் அவளை ஒருவன் அவள் பணியாற்றிய பிரிவிலிருந்து காதலித்தான். அவனும் களத்தில் காயமடைந்து ஊனமுற்றிருந்தான். அவனோடு பேசும் வாய்ப்புகள் கிடைத்து அவளும் அவனை நேசித்தாள். ஒருநாள் பெரியவர்கள் முன்னிலையில் அவளுக்கும் அவனுக்கும் திருமணம் நிகழ்ந்தது.

ஒருமாதம் கிடைத்த விடுமுறையை இருவரும் மறுத்துத் தங்கள் வேலைகளில் கவனமாயிருந்தார்கள். காலையில் இருவரும் வீட்டை விட்டு வெளிக்கிட்டால் இரவுதான் திரும்பியும் வருவார்கள். சிலவேளைகளில் யாராவது ஒருவர் வீட்டுக்கு வருவதுகூட இல்லை. கடமைக்குப் போன இடத்திலிருந்து தகவலை அனுப்பிவிட்டு வாரக்கணக்ககாகக்கூட நின்று விடுவார்கள்.

எங்கே போனாலும் அவள் அந்த ஊர்களின் மகளாகிவிடுவாள். ஊரில் மிஞ்சியிருக்கும் ஆச்சிமாருடன் அடுப்படியில் போயிருந்து அவர்களது கடந்த காலங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பாள். பல கிராமங்களில் அவள் செல்லப்பிள்ளை. அவளுக்காக கோவிலில் அரிச்சனை விபூதியென்று அவளுக்காக அனுப்புவார்கள். ஒரு அரசியல் போராளி எப்படி இயங்க வேண்டுமென்பதற்கு அவள்தாள் சிறந்த உதாரணம். சமாதான காலத்தில் ஊர்பார்க்கப் போன பலர் அவளிடமே சொல்லியிருக்கிறார்கள்.

சமாதானகாலத்தில் கிடைத்த வசதிகள் வாய்ப்புகளைப் பலர் பலவாறாகப் பயன்படுத்தினார்கள். காணிகள் வாங்கினார்கள் , வீடுகள் கட்டினார்கள் , வசதியான வாழ்க்கையை வாழ்ந்தர்கள் , வீடுகளில் வேலைக்கு ஆட்களைக்கூட வைத்திருந்தார்கள். ஆனால் அவளும் அவனும் திருமணமான போது போட்டுக் கொண்ட மண்வீட்டைத்தவிர எதையும் தங்களுக்காகச் சேர்க்கவில்லை. அவர்களுக்காகக் கிடைக்கவிருந்த வசதிகளையெல்லாம் தங்கள் இலட்சியத்திற்காகவே அர்ப்பணித்து அவர்கள் காணும் தாயகக்கனவுக்காகவே வாழ்ந்தார்கள்.

இயக்கக்காசிலிருந்து ஒரு சதம்கூட வீணாகக்கூடாதென்று கவனமாயிருப்பாள் அவள். மாதாந்தம் கைச்செலவுக்காகக் கிடைக்கும் 500ரூபாவைக்கூட அவள் சேமித்து ஆதரவற்ற குழந்தைகள் பெண்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறாள்.

கைச்செலவுக்காசு தவிர மேலதிக கணக்கெழுதி வரும் கணக்குகளை உரிய சான்றுகளைத் தேடி கடைகளெல்லாம் ஏறியிறங்குவாள். இயக்கம் இத்தனை வளர்ச்சிகாண தாம் உழைத்த உழைப்பு அர்ப்பணிப்புகளைப் பற்றி மூத்த போராளிகள் சொல்லக் கேட்டிருக்கிறாள். ஒரு துப்பாக்கிக்காக ஒரு தோட்டாவுக்காக ஒரு நேர உணவுக்காக என எத்தனையோ கட்டுப்பாடுகள் சேமிப்புகள் செய்து இன்று இலகுவாய் வசதிகளைப் பெறும் நிலைக்கு இயக்கத்தை வளர்த்து விட்டவர்களைப் பற்றிப் பிள்ளைகளுக்கு வகுப்பெடுக்கும் நேரங்களில் சொல்லுவாள். ஒரு சதம்கூட வீணாகாக்கூடாது என்பதனை அடிக்கடி நினைவுபடுத்துவாள்.

ஒருத்தி அடிக்கடி மேலதிகமாகக் கணக்கு அனுப்புவாள். அவள் ஒரு பெண்கள் இல்லத்திற்காக செலவு செய்ததாகக் கணக்குக் கொடுப்பாள். அந்தத் தோழி தனது பிறந்தநாளுக்கு கேக்செய்வித்து மற்றையவர்களுக்குக் கொடுத்ததாக அறிந்தாள். அவ்விடயத்தை ஆராய்ந்தபோது குறித்த இல்லத்தின் பிள்ளைகளுக்காக வழங்கப்பட்ட முட்டைகள் பிள்ளைகளுக்கு வழங்கப்படாமல் தனது பிறந்தநாளுக்கு கேக்குக்கு பயன்படுத்தியிருக்கிறாள் என்ற உண்மையை அறிந்த போது தோழியை எச்சரித்து விட்டாள்.

ஆனால் அந்தத்தோழி தனக்குள்ள அதிகாரத்தை வைத்துத் தொடர்ந்தும் பணவிடயத்தில் தவறுகள் செய்து வந்ததைப் பொறுக்காமல் ஒருநாள் உரியவளை அலுவலகத்தில் வைத்து அடித்துத் துரத்திவிட்டாள். அதற்கான தண்டனையைப் பொறுப்பாளர் கொடுத்தபோது சத்தமின்றிப் பெற்றுக் கொண்டாள். ஆனால் தவறுகள் நடப்பதனை மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினிக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் தெரிவித்துக் கொண்டிருந்தாள்.

ஒருமுறை ஒருபெரியவரின் தவறுகளை ஒருவர் மூலம் ஒளிப்பதிவு செய்து தலைவருக்குக் கொடுக்குமாறு அனுப்பினாள். ஆனால் அவள் அனுப்பிய விடயத்தை கொண்டு சென்றவன் தலைவருக்கு அனுப்பாமல் தமிழ்ச்செல்வன் அவர்களிடம் கொடுத்துவிட்டான். தமிழ்ச்செல்வனின் அன்புக்குரிய அந்த நபரே இவளிடம் வந்து சொன்னார்.
நல்ல பேட்டிதான் குடுத்திருக்கிறீர்…..! ஆர் பிழை செய்தாலும் பிழைதான்…. எனச் சொன்னவர் தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளவுமில்லை…..அதனைத் தலைவருக்குச் செல்லவும் விடவில்லை. அவள் சொல்லவிரும்பிய விடயங்கள் எதுவும் தலைமைக்குப் போகாது இடையில் தங்கிவிட்டதோடு சற்றுச் சோர்ந்து தான் போனாள். ஆனாலும் கடைசிவரையும் தனது கடமைகளைச் சரியாகவே செய்தாள்.

2009ம் ஆண்டு தொடக்கத்தோடு ஓய்ந்து போனாள். கட்டாயப்பிடியை எதிர்த்தவர்களுள் அவளும் முக்கியமானவளாக இருந்தாள். மக்களுக்கான போராட்டம் மக்களிடமிருந்து தனித்துவிடக்கூடாதென்று விரும்பிய பலரைப்போல அவளும் அவ்விடயத்தில் அவதானமாக இருந்தாள். ஆனால் எது நடக்கக்கூடாதென்று கடைசிவரையும் கவனமாயிருந்தாளோ அது நடந்து கொண்டிருந்தது. மனசால் அவள் நொந்து போனாள். தனது காதல் கணவனுடன் அதுபற்றியெல்லாம் வாதிடத்தொடங்கினாள். ஒவ்வொரு விடயங்களையும் காணுகின்ற நேரங்களில் எல்லாம் அவளுக்குள் பொங்குகிற எரிமலையைக் கட்டுப்படுத்தி மெளனமாகினாள். அவர்கள் இருவராலும் மாற்றிவிட முடியாத மாற்றங்கள் அங்கு நடைபெறத் தொடங்கியது.

அண்ணை பாவம்….அவனுக்குச் சொல்லியழுவாள்……அவளுடன் சேர்ந்து அவனும் தான் அழுவான். அதைவிட எதுவும் அவர்களால் செய்ய முடியவில்லை. ஏப்றல்மாதம் எல்லாக் கனவுகளையும் தனக்குள் புதைத்துக் கொண்டாள். தனது குழந்தையை மட்டும் காப்பாற்ற விரும்பியவள் தாயாருடன் அனுப்பிய குழந்தையைத் தன்னுடன் கூட்டிவந்தாள். மனவுளைச்சல் ஏமாற்றம் பதுங்குகுளி வாழ்க்கை இருக்கும் வரை இருந்துவிட்டுப் போவோமென்ற விரக்தி எல்லாம் சேர்ந்து அவளது அந்தநாள் துணிச்சல் வீரம் எல்லாம் தொலைந்து போய்விட்டது.
000 000 000

பிணங்களாலும் இரத்தத்தாலும் நிறைந்த மண்ணலிருந்து அவரவர் தங்கள் உயிர்களை மட்டும் காத்துக் கொண்டு அந்தக் கடைசி நிமிடம் வரை எதிர்த்தவர்கள் முன்னால் சரணாகதியாக வேண்டிய நிலமைக்கு ஆளானார்கள். வசதியிருந்தவர்கள் கடலால் புறப்பட்டார்கள்…..வசதியற்றவர்கள் வேறு வழியின்றி தரையால் சரணடையும் செய்தி இவர்கள் காதிலும் எட்டியது. அவளோடு வாழ்ந்தவர்கள் பலர் தங்களைத் தாங்கள் அழித்துக் கொண்டதையறிந்தாள். எதிரியிடம் சரணடைந்து சாவதிலும் பார்க்க தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வது மேலெனக்கருதியவள் தனது முடிவைக் கணவனிடம் சொன்னாள்.

எல்லோரும் உயிருடன் போக நாங்கள் மட்டும் சாக வேண்டுமா என்றவனுடன் 2நாள் போராடினாள். கடைசியில் தான் பெற்ற குழந்தையைக் கொன்றுவிடு சாகிறேன் என்றவனின் வார்த்தைகளோடு அதையும் கைவிட்டாள்.

அன்றுவரை எதிரியாயிருந்தவர்களிடம் அவளும் அவனும் சரணடையும் முடிவோடு பதுங்குகுளியைவிட்டு வெளியேறினார்கள். எங்கும் சனக்கூட்டம் காணவில்லையென்றவர்கள் கூட வரிசைகட்டிப் போய்க்கொண்டிருந்தார்கள்.

எங்கையிருந்தடா வாறியள் பே….பூ…..மக்களே… உவ்வளவு பேரும் சேந்து கல்லாலை எறிஞ்சிருந்தாக்கூட நாங்க ஓடியிருப்பம்…. என்ன பூ…..போராட்டம் நடத்தினியள்…….உள்ளை போய் சாகப்போறியள் போங்கோ…..

அந்த அதிகாரி தூசணத்தால் பேசிக்கொண்டிருந்தான். அவன் அக்கறையுடன் சொன்னானா இல்லையா என்பது தெரியாது. ஆனால் ஏதோவொரு ஆதங்கம் அவனுக்குள்ளும் இருப்பது போலிருந்தது. அவன் சொன்னது போல இவ்வளவு பேரும் களத்தில் இறங்கியிருந்தால் கதை மாறியிருக்கும்…..அவளும் நினைத்தாள்……
000 000 000

அவர்கள் இறக்கிவிட்ட இடத்தில் சனங்களுடன் அவளும் அவனும் காவலிருந்தார்கள். போராளிகள் தரம்பிரிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரும் குழந்தையோடு பொதுவானவர்கள் வரிசையில் போயிருந்தார்கள்…..மக்களுடன் அதிகம் பணிசெய்தவளை மக்களே தங்களுடன் வைத்திருக்க கொள்கையோடு போராளியாக இருந்தவன் அவளையும் அவனையும் இனங்காட்டி பெயர் சொல்லியழைத்து இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறான்.

அவளை அந்த அதிகாரியுடன் விட்டுவிட்டு தூXXன் அவளது அவனைத் தன்னோடு அழைத்துக் கொண்டு போனான்.

பிள்ளை கவனம்…..நான் விசாரணை முடியாத் திரும்பி வருவேன்……சொல்லிவிட்டு அவன் போனான்.

அந்த அதிகாரி அவளையும் குழந்தையையும் போராளிகளின் பதிவில் பதியாமல் சாதாரணமானவளாப் பதிவு செய்தான். என்னாலை உங்களுக்காக இதத்தான் தங்கைச்சி செய்ய முடியும்….மன்னிச்சுக் கொள்ளுங்கோ….சொல்லிவிட்டு அவளையும் அவளது குழந்தையையும் அனுப்பினான். அவன் செய்த அந்த உதவிக்குத் தனது கண்ணீரால் நன்றி சொல்லிவிட்டுப் போனாள்.

வேற்று இனத்தவன் ஒருவன் அவளைக்காப்பாற்றச் செய்த உதவியையும்……., அவளோடு ஒரே இலட்சியத்தைச் சுமந்து திரிந்த ஒருவனால் அவளுக்காகச் செய்ய முடியாது காட்டிக் கொடுக்கப்பட்டதையும் நினைத்துப் பார்த்தாள்.

தாயகத்துக்காக உயிர் விட்ட தனது 3அண்ணன்களையும் நினைத்துப் பார்க்க அடக்கமுடியாத அழுகை வந்தது. அவளது அண்ணன்களைப் போல எத்தனையோ அண்ணன்களை , தம்பிகளை , தங்கைகளை , தோழிகளைத் தோழில் சுமந்து போய் விதைத்திருக்கிறாள். அப்போதெல்லாம் ஏற்பட்ட ஓர்மமும் எழுச்சியும் இன்று வீணாய்விட்டதாய் உணர்ந்தாள்……எத்தனைபேரின் தியாகங்கள் கொடைகள் யாவும் அவர்கள் கண்ட கனவுகள் போலவே கனவாய்ப் போய்……அவளிடம் மிஞ்சிய இன்றைய சொத்த அவளது குழந்தை மட்டும் தான்……
000 000 000

முகாமிலிருந்து விடுதலையாகி ஊருக்குப் போனாள். அவளுக்கு ஆறுதலாய் இருப்பார்கள் என நம்பிய அம்மா அப்பா இருவரையும் தேடினாள். கடைசியாய் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் போன வழியில் அம்மா இறந்துவிட்டதாகவும்…...அவர்களே ஓரிடத்தில் புதைத்துவிட்டுப் போனதாகச் சொன்னாள் பெரியம்மாவின் சின்னவள். அப்பா வவுனியாவில் முதியோர் இல்லமொன்றில் இருப்பதாகவும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெரியம்மா சொன்னா.

எல்லாம் வெறுமை…..வாழ்ந்த வீடு அவள் இலட்சியம் சுமந்து திரிந்த தெருக்கள் யாவும் மாறிப்போயிருந்தது…..இலட்சியங்களுடன் அவளுடன் வாழ்ந்த பலரை வீதிகளில் சந்தித்தாள். யாரும் யாருடனும் பேசாது போனார்கள். ஆளையாள் தற்காத்துக் கொள்ளும் அவசரத்தை அவர்களது பார்வைகள் விளக்கியது. அவர்கள் விலகுவது போல அவளும் விலகிப்போனாள்…..எல்லாவற்றையும் மறந்துவிடுவோமென முயற்சிக்கிறாள். எதைத்தான் மறப்பது…? எல்லாம் நேற்றுப்போலவும் இன்று போலவும் கண்ணுக்கு முன்னால் வந்து நிற்கிறது.

அவள் கண் முன்னே கொண்டு செல்லப்பட்ட அவளது கணவனை 2வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறாள். அவனைப்பற்றி மனிதவுரிமை அமைப்புகள் செஞ்சிலுவைச் சங்கம் என எல்லா இடங்களிலும் பதிவுகள் செய்து தேடிக்கொண்டிருக்கிறாள். அவன் இருப்பானென்ற நம்பிக்கை விடுபட்டுப் போகிறது……மனிதவுரிமைக்குழுவின் முன்னால் சாட்சியம் கொடுத்தால் சிலவேளை அவன் இருக்கும் இடத்தை அறியலாம் என்றார்கள்….விசாரணைக்குழுவின் நேர்மை பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படித்ததிலிருந்து அந்த முயற்சியையும் கைவிட்டு விட்டாள்.

இன்றைய அவளது பிரச்சனை வறுமை. வாழ எதுவுமற்ற வெறுமை. அன்றாடம் தனது குழந்தைக்கான உணவைக் கொடுக்கவே முடியாத தனது நிலமையை மாற்ற உதவிகளைத் தேடி நிறுவனங்களை நாடுகிறாள்…..

சுயதொழில் ஒன்றைச் செய்ய வேண்டும் தன்னை மட்டும் சொந்தமாய் நம்பியிருக்கும் தனது பிள்ளைக்கான ஒரு வாழ்வைக் கொடுக்க வேண்டுமென்ற கனவோடு உதவிகள் செய்வோரையெல்லாம் தொடர்பு கொள்கிறாள்.
000 000 000

அண்மையில் ஊனமுற்ற தனது கைமூட்டில் ஏற்படும் வலிக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தாள். அவளோடிருந்த இன்னொருத்தியைச் சந்தித்தாள்.
எப்பிடியக்கா இருக்கிறீங்கள்……? அவள் கேட்டாள். கண்ணீர் தான் முந்திக் கொண்டு வந்தது. அழுதாள். அங்கே சந்தித்தவளும் அழுதாள். விடைபெறும் போது ஒரு தொலைபேசியிலக்கத்தைக் கொடுத்துச் சொன்னாள்.

இந்த நம்பருக்கு எடுத்துக்கதை ஒரு அக்கா கதைப்பா….ஒராள் மூலம் தொடர்பு கிடைச்சுக் கதைச்சனான். அவையள் ஒரு நிறுவனம் நடத்துகினமாம்…..எங்களைமாதிரியாக்களுக்கு உதவுகினம்….வெளியில உள்ள ஆக்கள் ஆரையாவது உனக்கு ஒழுங்குபடுத்தித்தருவா….எனக்கு சுயதொழிலுக்கு உதவி செய்தவை…..உனக்கும் ஏதாவது செய்வினம்….கேட்டுப்பார்….

வீட்டுக்கு வந்ததும் முதல் அலுவலாக அந்தத் தொலைபேசியிலக்கத்துக்கு அழைத்தாள்.

அக்கா ஒருக்கா இந்த நம்பருக்கு எடுங்கோ….

சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தாள். அடுத்த 5நிமிடத்தில் அவளை அழைத்தது தொலைபேசி. எதிர்முனையில் பெண்குரல். அவளை யாரென விசாரித்தது. அவள் தனது சொந்தப்பெயரைச் சொல்லி அறிமுகம் செய்தாள். தனது தற்போதைய நிலமைகளை விபரித்தாள். அரைமணித்தியால உரையாடலின் பின்னர் பலரைப்பற்றி அந்தக் குரல் விசாரித்தது. அந்தப்பெயர்களில் அவளது இயக்கப்பெயரையும் விசாரித்தாள் மறுமுனையில் பேசியவள். அந்தப் பெயருக்கு உரியவள் தான் தான் என்பதனைக் கூறினாள்.
அடியே நீ இருக்கிறியா…உயிரோடை……முறுமுனையிலிருந்து கேட்டவள் அழுதாள்…..நீ செத்திட்டியெண்டு கேள்விப்பட்டனான்….கனபேரிட்டைக் கேட்டனான்…..ஒருதரும் இல்லையெண்டு சொல்லிச்சினம்….. என்றாள் அவள்.

இருமுனையிலிருந்தும் அழுகையொலிதான்….. சில நிமிடங்கள்…..வார்த்தைகள் வரவில்லை……நாங்க நினைச்சது என்னவோ நடந்து முடிஞ்சது என்னவோ…..எல்லாம் போச்சு…..என மறுமுனையிலிருந்து அழுதவளுக்குச் சொன்னாள்…..

வேலுப்பிள்ளையற்றை மகனாலை முடியாதது இனி ஒருத்தராலும் முடியாதடி….அந்தாள் பேசாம தானும் தன்ரை குடும்பமுமெண்டு வாழ்ந்திருக்கலாம்…..சுயநலமில்லாமல் வாழ்ந்தது தான் அந்தாள் செய்த முதல் தப்பு…..முடிஞ்சா மிஞ்சினவையை வாழ வையுங்கோ…..

தெருவில் விடப்பட்ட தங்களது வாழ்வுபற்றிச் சொன்னாள்…..வன்னிக்குள் மலிந்து கிடக்கும் எல்லா அசெளகரியங்கள் சீர்கேடுகள் பற்றிச் சொன்னாள். அண்மையில் வீதியில் சென்ற போது அவளது உள்ளாடை பற்றி கிண்டலடித்து அவளது பின்சட்டையில் இழுத்த இளைஞர்கள் பற்றிச் சொன்னாள். அவளது மோட்டார் சயிக்கிள் வருவதை அறிந்தாலே ஒதுங்கியோடிய பலர் இன்று அவளைப் பாலியல் ரீதியாக இம்சிப்பதையெல்லாம் சொன்னாள்…..எல்லாம் முடிஞ்சுது….இப்ப என்ரை கனவு என்ரை குழந்தைதான்…..என்னைமாதிரியிருக்கிற கனபேரின்ரை கனவு இப்ப இதுதான்…..

நாளைக்கு நாங்கள் இல்லாமல் போனால் எங்கடை கனவுகளைச் சுமந்து எங்கடை இலட்சியத்தைக் நிறைவேற்ற எங்கடை குழந்தைகள் முன்வருங்களெண்டும் கனபேர் 4,5 பிள்ளைகளைப் பெத்தவையும் இருக்கினம்…..இண்டைக்கு அந்தப்பிள்ளையளுக்கு ஒரு நேரச்சோறு குடுக்க வழியில்லாமல் அந்தரிக்கிற கனபோராளியளெல்லாம் இஞ்சை வாழ்ந்து கொண்டிருக்கினம்….. எங்கை திரும்பினாலும் வறுமைதான் இப்போதைய எங்கடை பிரச்சனையாக்கிடக்கு….. ஏன் நான்கூட என்ர பிள்ளைக்காகத் தான் கையேந்தி நிக்கிறேன்…….

21வருசம் போராளியா இருந்தனான் இண்டைக்கு என்ரை நிலமையைப் பார்…..எல்லாம் இருக்கேக்கதான் இழந்தாப்பிறகு ஒருதரும் பாக்காயினம்…..அவள் தனது துயரங்களையெல்லாம் கொட்டிக் கொண்டிருந்தாள்.

உண்மையளை எழுதித்தாவன்…..வெளியில போடுறன்……அவள் சிரித்தாள். இனி உண்மையைச் சொல்லி எங்களுக்கென்ன தங்கப்பதக்கமே கிடைக்குமெண்டு நினைக்கிறாய்…..வெளிநாட்டில இருக்கிற உனக்கு இங்கத்தைய உண்மைகளைச் சொல்லிப் புரியுமோ…? நான் எழுதிற நிலமையில இல்லையடி வேணுமெண்டா நான் சொல்றன் நீ எழுது…..என்ர நிலமையை முதலாவதா எழுது….எனக்காக யாரும் கருணை காட்டினாச் சொல்லு…..என்ரை பிள்ளையை வாழவைக்க ஒரு வழிசெய்து தா…..விம்மலுடன் கேட்டாள்……..

02.06.2011