Thursday, July 5, 2012

ஓளி காணாத சூரியனே வீரவணக்கம்.


எங்களுக்குள்ளும்
சூரியன்கள் உதித்தார்கள்
பல்லாயிரம் ஒளிக்கதிர்களைத் தங்கள்
அமைதியான முகங்களினுள் புதைத்தபடி
ஆயிரமாயிரம் சாதனைகளைச்
செய்து முடித்து
அமைதியாய் முடிந்தார்கள்
அக்கினியாய் எரிந்தார்கள்.

காலம் எத்தனையோ
சூரியவேர்களை எங்களுக்குள்ளிருந்து
பாதை நெடுகிலும் இப்படித்தான்
ஒளித்துச் சென்றிருக்கிறது.
இப்படித்தான் நீயும்
வெளியில் ஒளி தராது
ஒளிர்ந்து கொண்டிருந்த
கற்றைச் சூரியன்.

உனது பெயரைக் காலம்
புதிர்களாலேயே
புனிதப்படுத்திக் கொள்கிறது.
இரவிலும் பகலின்
ஒளி சிந்திக் கொண்டிருந்த
இருளில் வாழ்ந்த சூரியன் நீ.

இரகசியத்தின் வேராய்
இனங்காணப்படாத விருட்சமாய்
ஈழம் தந்த தலைவனின்
எண்ணத்தின் வடிவாய்
உன்னை உலகம்
அறிந்தததில்லை.
காலமும் உன்னையொரு போதும்
காட்டிக் கொள்ள நினைத்ததில்லை.

காலத்தின் கைபற்றித்
தேசத்தின் கனவோடு
நீயலைந்த காலங்கள்
நீ உருவாக்கிய படையணிகள்
நீ வழி நடத்திய சண்டைகள்
உனது சாதனைகளின் எண்ணிக்கை
சாதித்த காலத்தில் மட்டுமல்ல – நீ
வீரச்சாவடைந்த பின்னாலும்
ஒரு சிலரைத் தவிர
ஒருவரும் அறியாத
இமயத்தை வென்ற வீரம்
எவருமே அறியாது மௌனமாக.....!

பிறைநிலவை ரசிக்கவும்
நட்சத்திரப் புள்ளிகளில்
நனைந்து மகிழவும்
தென்றலைத் தொட்டள்ளி
தொலைந்து போகவும்
தெருப்புழுதியில்
வெற்றுப்பாதம் பதித்து
விளையாடிக் களிக்கவும்
இளவயதுக் காலத்தின் கனவுகள்
உனக்குள்ளும் ஒளிந்திருந்த இரகசியங்கள்
எவருமறியாத அதிசயங்கள்.

வசதிகள் வாழ்க்கையை
அணுவணுவாய் அனுபவிக்கத் தக்க
அத்தனையும் பெற்றிருந்தும்
அண்ணனுக்காய் பிறந்தவனாய்
புலியாகிப் போர்க்களத்து விதியாகி
புலியே நீ படைத்தவைகள்
வெளியில் வராத
உலகில் வெளிச்சமிடப்படாத
சாதனையின் முழுமையே
வெளியில் ஒளிதராமல்
வேருக்கு மட்டுமே தெரிந்த
வெளித் தெரியாச் சூரியனே
உனக்கு வீரவணக்கம்.

05.07.2012

No comments: