Wednesday, December 19, 2012

ஈழப்போராளிகளின் காதலும் குழந்தைகளும்

இன மத மொழி பேதங்கள் தாண்டிய எங்கேயெல்லாமோ வாழ்கிற ஆயிரமாயிரமானவர்களின் தமிழ் ஈழக்கனவோடும் தாம் நேசித்தவர்களின் கனவுகளோடும் வாழ்கிற மனிதர்களோடு அவளும் ஒருத்திதான். உலகத்துப் பெண்களின் அம்மாக்களின் பிரதியாய் அவள் தனது குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்தவே இப்போது உழைக்கிறாள். 4வயதில் ஆறுவயதெனப் பதிவுசெய்து ஆங்கிலப்பள்ளியில் அப்பா சேர்த்துவிட்டு அவளை வேகமாக முன்னேற வேண்டுமெனவே சொல்லியனுப்பினார். அன்று 2வயதால் மூப்படைய வைத்து முன்னேறென்று சொன்ன அப்பா இன்று இருந்தால் அவளுக்காக தற்கொலையே செய்து கொண்டிருப்பார். 4வயதில் முன்னே ஓட வெளிக்கிட்டவள் இன்று 36வயதாகியும் ஓட்டம் நிற்கவில்லையென்றே அலுத்துக் கொள்கிறாள்.

அவள் காதலின் பரிசாய் 3 குழந்தைகளும் அவள் கணவனின் ஞாபகமாய் அவனது சில நிழற்படங்களுமே இப்போது அவளுக்கான சொத்துக்கள். ஒரு பெரும் அமைப்பின் முக்கியமான சொத்தாயிருந்த அவனது மரணம் அவளோடும் அவளுடன் கூடிய சில பேருடன் 2வருடங்களின் முன்னர் அன்னிய நாடொன்றில் அவன் வேறொரு மதத்தின் பிள்ளையாய் அன்னிய மதசம்பிரதாய முறைப்படி நிகழ்ந்து முடிந்தது.

அவன் இறப்பதற்குச் சிலமாதங்கள் முன் வரையும் அவனாலேயே வாழ்ந்த உறவுகள் , நட்புகள் எவருமே அவனது மரணத்திலும் கலக்கவில்லை. அப்படியொருவன் இருந்ததையும் மறந்து போனார்கள். எல்லாத் தொடர்புகளும் அற்றுப்போய் மரணத்தின் வாசலில் நின்றபோதும் தன்னைப்பற்றி தனது பூர்வீகம் தனது சொந்தப்பெயரைக்கூட அவளுக்குச் சொல்லாமலே மௌனமாகினான்.

தேவையின் நிமித்தம் அவன் வாயில் ஒருகாலம் பொய்யைத்தவிர எதுவும் வந்ததில்லை. அவளுக்குக்கூட அவனொரு கணணித்துறை நுட்பவியலாளனாய்தான் அறிமுகமானான். கடமையின் கனம் போன இடத்தில் ஒரு காதலை ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டியிருந்தது. எல்லாம் தேசத்திற்காகவென்றே எல்லாவற்றையும் செய்தான்.

எல்லா முடிவுகளின் பின்னால் ஏதோவொரு நம்பிக்கை அவனில் ஒட்டியே இருந்தது. மீண்டும் துளிர்க்கும் ஈழக்கனவென்று நம்பியே இயங்கினான். ஒருநாள் அவனது கையிலிருந்து எல்லாவற்றையும் காலம் பறிக்க கைதியாகி அவனது காதல்துணையும் அவனைப் பிரிந்து சிறுகுழந்தைகளோடு அவள் மொழிதெரியாத ஊரொன்றில் ஒதுங்கினாள்.

சிலகாலங்களில் அவளும் கைதாகினாள். நீண்ட அலைவு துயரங்களின் பின்னர் இருவரும் இணைந்து கொள்ளும் வாய்ப்பை காலம் வழங்கியது. அவன் பற்றிய மர்மங்களை அவன் அப்போதும் சொல்லவேயில்லை. உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருந்தவன் சோர்ந்து போகத்தொடங்கினான்.  இறுதியில் அவன் உயிர்கொல்லும் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருப்பதாய் மருத்துவர்கள் சொன்னார்கள்.

எல்லாம் இழந்த பின்னர் மனங்களை ஆற்றுப்படுத்தும் நிவாரணி இறுதியில் கடவுள் என்றாவது வளமை. அவன் கர்த்தரை துதிக்கத் தொடங்கினான். கர்த்தரின் மீட்பர்களே அவனைக் கடைசியில் கையிலேந்தியவர்கள். நாட்கள் ஒவ்வொன்றும் ஓட ஓட அவன் உயிர் சொட்டுச் சொட்டாய் பிரியத்தொடங்கியது.  அவனது உயிர் மீள்தலுக்காக அவள் அலைந்த அலைச்சலும் பட்ட துயரங்களும் அவனை மிகவும் வருத்தியது. அவனது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகளுக்கான காரணங்களைச் சொல்ல முடியாத நிலமைக்குப் போயிருந்தான்.

அவளுக்காக அவன் அப்போது அழுதிருக்கக்கூடும் அனாதரவாகிவிடப் போகிற தனது குழந்தைகளுக்காக அதிகம் அந்தரித்திருக்கக்கூடும். எங்காவது தன்னோடிருந்த ஒரு நட்பெனினும் கைகொடுக்குமென்ற நம்பிக்கையோடு ஒரேயொரு தொலைபேசியிலக்கத்தை மட்டும் அவளிடம் ஒருநாள் எழுதிக் கொடுத்தான். அதற்குப் பிறகு அவன் கைகள் பேனாவைப் பிடித்ததில்லை. கடைசியில் அவன் பைபிளை படித்தபடியே மனிதர்கள் பிரார்த்திக்க மரணித்துப் போனான்.

000                          000                        000

எல்லாம் முடிந்து போனபின்னரே அவளை வறுமை துரத்தத் தொடங்கியது. சொந்த உறவுகள் பிறந்த ஊர் அவளை ஏதோ தப்பானவளாகவே கருதியது. தந்தையின் பெயர் தெரியாத பிள்ளைகளைப் பெற்றுவிட்ட தாயாகவே அவளைப் பரிகசித்தது. அவளைப் பாவத்தின் மிச்சமாகவே ஒதுக்கியது.

பிள்ளைகளில் ஒன்றுக்கு  உலக விஞ்ஞானி ஒருவரின் பெயரையும் , மற்றைய இரு பிள்ளைகளுக்கும் கரும்புலி வீரர்களின் பெயரையும் வைத்திருந்தான். போகிற இடமெல்லாம் பிள்ளைகளின் பெயரை வைத்தே பெரிய உபத்திரவமாகியது. ஒரு சமயம் போதகர் ஒருவர் தங்கள் சமய முறைப்படியொரு பெயரை மாற்றுமாறு வேண்டினார்கள். அவன் வைத்த பெயர்களை மாற்ற விரும்பாமல் ஊரைவிட்டே விலகினாள். எல்லோரையும் விட்டு துரமாக ஒதுங்கினாள்.

அவனது இரத்த உறவுகளைத் தேடியழைத்தாள். எவரும் கைகொடுக்காமல் அவளை விலத்திக் கொண்டார்கள். ஆடைதுவைக்கும் நிலையமொன்றில் வேலைக்குச் சேர்ந்தாள். மாதாந்தம் கிடைக்கிற சம்பளம் 10நாட்களுக்கு மேல் நகர முடியாத இறுக்கத்தைத் தந்தது. அயலில் கடனும் அதிகமாகியது.

செத்துப்போய்விட வேண்டும் போலிருந்த நேரங்களில் அவன் கண்ணுக்குள் வந்து நின்று காதுக்குள் கேட்கிற அவனது குரல் கண்ணீரோடு எல்லா நினைப்பையும் அழித்துச் செல்லும்.

அப்பாவைப் பற்றிக் கேட்கிற குழந்தைகளுக்கு அப்பா வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாள். வெளிநாட்டில் உள்ள அப்பாக்களின் பிள்ளைகள் போல அவர்களால் எதனையும் அனுபவிக்க முடியவில்லை. போன ஊரில் அறிமுகமான ஒரு அக்காவிடம் குழந்தைகளைக் கொடுத்துவிட்டு நிரந்தரமாக வேலை செய்யத் தொடங்கினாள். சனிக்கிழமை மாலை வீடு வந்து ஞாயிறு மட்டும் குழந்தைகளோடு பொழுதைக் கழித்து மீண்டும் வேலை.

அம்மாவும் அருகிலில்லாமல் அப்பாவும் அருகிலில்லாமல் இன்னொருவரை அம்மாவாக்கிய அம்மா வரும் வார இறுதிநாளுக்காக காத்திருக்கிற 5,4 ,3 வயதுப்பிள்ளைகளின் குழந்தைக் கனவுகளில் வெளிநாட்டிலிருக்கிற அப்பா அத்தைவீட்டில் அவர்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பதாய் நம்புகிறார்கள்.

ஒருவிடுறையில் வீடு வந்த போது மகள் கேட்டாள். அத்தைக்குப் போன் போட்டுக் கேளுங்கம்மா அப்பாவை பேசச்சொல்லி....எங்களையும் வெளிநாட்டுக்கு கூப்பிடச்சொல்லி....!

அன்று ஏதோ அலுவலாக அவன் கையெடுத்துடனான டயறியைத் திறந்த போது ஒரு பக்கத்தில் அவன் எழுதிய சிலவரிகளும் ஒருநாள் அவன் எழுதி வைத்த தொலைபேசியிலக்கமொன்றும் கண்ணில்பட்டது.

தான் இல்லாது போகிற காலத்தில் அந்த இலக்கத்தோடு தொடர்பைப் பேணுமாறு அவன் எழுதியிருந்த அந்த இலக்கத்தை எடுத்தாள். தொடர்பு கொள்ளவா விடவா என்ற குழப்பமாயிருந்தது.

இரத்த உறவுகளே ஒதுக்கியிருக்க எங்கோ முகம் தெரியாத அவனது நட்பொன்று மட்டும் இவளுக்கு கைகொடுக்குமா என்ற சந்தேகத்தோடே ஒருநாள் அந்த இலக்கத்தை அழைத்தாள்.

அவள் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக மறுமுனையில் கேட்ட குரல். புது உறவு துளிர்த்ததாய் நம்பினாள். அவனைத் தேடிய அந்தத் தோழமை அவன் எங்கோ வாழ்வதாயே அன்றுவரை நம்பியிருந்தது. அவள் சொல்லிழயழுத கதைகள் அவனை அந்த நிலமையில் இட்டுச் சென்ற விதியையே நோக வைத்தது.

எனக்கு உதவி செய்யாட்டிலும் பறவாயில்லை....நீங்க கதைச்சாலே போதும்.....அவள்  தனது துயரங்களைச் சொல்லிச் சொல்லியழுதாள்.

உயிருடன் இருந்த போது ஒருநாள் அவன் தொடர்பு கொண்டிருந்தாலும் அவன் உயிரைக் காத்திருக்கும் வாய்ப்புக்கூட வந்திருக்கலாம். குறைந்த பட்சம் அவனை மட்டுமே நம்பிய அவளுக்கும் குழந்தைகளுக்குமான ஒரு வாழ்வையேனும் கொடுத்திருக்கலாம். எல்லாம் முடிந்து அவன் அநாதையாய் முடியும் வரையில் ஏனோ நட்பையும் அழைக்காமல் விட்டிருந்தான் என்பது தெரியாது.

வரவிருக்கிற நத்தார் தினத்தில் அப்பா வருவார் என நம்புகிற குழந்தைகளுக்கு இம்முறையும் அப்பா வரமாட்டார் வேலைகூடவென்று சொன்னாள். அப்பா வெளிநாட்டிலிருந்து அனுப்பியதாக கடந்தமுறை அவள் தானே ஒரு பாசலை தனது முகவரிக்கு அனுப்பி அப்பாவின் நத்தார் பரிசென்று பிள்ளைகளுக்குக் கொடுத்தாள். இம்முறையும் உடுப்புகளும் இனிப்புப்பண்டங்களையும் தயாரித்து வைத்திருக்கிறாள் நத்தார் பரிசு.

அப்பாவின் மரணத்தை இன்றும் அறியாத குழந்தைகளுக்காக அப்பா பற்றிச் சொல்ல ஆயிரமாயிரம் வரலாறுகளை அவன் விட்டுச் சென்றிருக்கிறான் எனினும் எதையும் அவளால் வெளிப்படுத்தவோ வரலாறு ஆக்கவோ முடியாது அவன் மரணமும் அவனது வாழ்வும் மர்மமாகவும் மௌனமாகவுமே புதைந்து போயிருக்கிறது.

நினைவுகள் தருகிற வலிகளை மறக்கவோ அவற்றை அழிக்கவோ இந்தக்கால விஞ்ஞானம் எதையாவது கண்டு பிடித்திருக்கலாம் போல.  பழைய நினைவுகளில் மனசு கனக்கிற போதெல்லாம் இப்படித்தான் நினைப்பாள்.

தமிழ் ஈழம் தமிழர்களின் கனவாய் மட்டுமன்றி ஈழப்போராளிகள் பணிசெய்த நாடுகளில் அவர்களது காதலிகளாய் காதலர்களாய் வாழ்கிற பலரது கனவாகவும் ஆகிவிட்ட தமிழீழம் ஒருநாள் வருமென்று நம்புகிற ஆயிரக்கணக்கானவர்களில் அவளும் ஒருத்தியாக....அவனது குழந்தைகளுக்கு அவனது தாயகத்தைப் பற்றிச் சொல்லும் நாளுக்காகவும் காத்திருக்கிறாள்.

19.12.2012

No comments: