Saturday, April 20, 2013

3மாவீரர்களை நாட்டுக்குத் தந்த அப்பாவின் இன்றைய வறுமை.

ஐயாவின் வாழ்க்கை இன்று ஒற்றைக் கட்டிலுக்குள் அடங்கிவிட்டது. 3ஆண்பிள்ளைகளும் 3பெண் பிள்ளைகளுமாக ஆறுபிள்ளைகளைப் பெற்று வாழ்ந்த வாழ்க்கையின் கடந்த காலத்தை எண்ணினால் அது பெரும் துயர் சூழ்ந்த காலம் தான். இப்போது தானொரு சுமையாகிப் போனேன் என்ற இயலாமைதான் மனசை உறுத்திக் கொண்டிருக்கிறது.

ஐயா ஒரு கடற்தொழிலாளி. ஊரில் ஐயாவும் கடற்தொழிலால் முன்னேறி மற்றவர்களுக்கு ஒரு காலம் அள்ளிக் கொடுக்கும் கையாகத்தான் இருந்தார். மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வாழ்வு ஐயாவின் குடும்பம் அனுபவித்ததும் ஒரு காலம்.

ஐயாவின் மூத்த ஆண்மகனை கடலில் வைத்து இலங்கை இராணுவ கடற்படை என்று சுட்டுக் கொன்றதோ அன்று விழுந்த இடி ஐயாவின் குடும்பத்தின் பாதையை திசைமாற்றி திசைக்கொன்றாய் அள்ளியெறிந்தது. ஐயாவும் விபத்தொன்றில் கையொன்று இயங்காமல் போக உடைந்து போனார்.

அண்ணனை கடற்படை கொன்றுவிட தம்பிகள் போராளிகள் ஆனார்கள். ஒருவன் புலனாய்வுப்போராளியாகவும் மற்றையவன் கடற்புலியானான். கடைசித் தங்கையும் புலியாகினாள். மிஞ்சிய இரு பெண் பிள்ளைகளும் திருமணம் முடித்து குடும்பமாகினர்.

பிள்ளைகளின் பிரிவு அம்மாவை நிரந்தர நோயாளியாக்கி 2005இல் மரணித்துப் போனதோடு ஐயாவின் நம்பிக்கையும் பறிபோனது. கடைசிமகள் சமரொன்றில் காயமுற்று ஊனமாகினாள். தொடர்ந்தும் தனது தேசத்துக்கான பணியைச் செய்து கொண்டிருந்தாள்.

2006இல் கடற்புலிப் போராளியொருவனைக் காதலித்துத் திருமணம் செய்தாள். ஐயாவுக்கும் ஆறுதலாயிருந்தவள் அவள். திருமணம் முடிந்த கையோடு  ஐயாவையும் அந்த மகள் தன்னோடு கொண்டு போனாள். போராளியான மகளும் போராளியான மருமகனும் தங்கள் கடமைகளில் உறைந்துவிட்டாலும் அவர்களுடன் வாழ்வது ஐயாவுக்குப் பிடித்திருந்தது. தனது ஊனமுற்ற கையோடு வீட்டுக்கான எல்லா வேலைகளையும் தானே செய்துவிட்டு மகளுக்காகவும் மருமகனுக்காகவும் காத்திருப்பார்.

2008இல் அந்த மகள் ஒரு ஆண் குழுந்தைக்குத் தாயானாள். பேரக்குழந்தை ஐயாவின் உலகத்தை மகிழ்ச்சியால் நிரப்பியது. குழந்தை பிறந்து ஒரு மாதத்தில் கடமைக்காக வீட்டைவிட்டு மருமகன் போய்விட மகளுக்கும் பேரப்பிள்ளைக்கும் ஐயாதான் உறுதுணை. காலையில் வீட்டிலிருந்து தனது பணிக்காக போகிற மகள் இரவு திரும்பும் வரை ஐயாவே அந்தக் குழந்தையின் ஆதாரம்.

யுத்தம் தொடர் இடப்பெயர்வு  ஐயாவைச் சோர வைத்துவிட்டது. ஆனால் மகளோடு ஒவ்வொரு ஊராக இடம் பெயர்ந்து 2009மேமாதம் 9ம் திகதிவரை ஐயாவின் அலைச்சலும் துயரமும் ஆயிரம் காலத்துக்கும் மாறாத துயரங்கள். ஏற்கனவே ஊனமுற்றிருந்தும் திரும்பவும் தனது தேசக்கடமை முடிக்கச் சென்ற மருமகன் காயமுற்றதாக செய்தி வந்தது.

இயலாத காயத்தோடு அவனைக் களத்தில் வைத்திருக்காமல் சக போராளிகள் அவனது குடும்பத்தோடு போயிருக்க அனுப்பினர். முள்ளிவாய்க்காலில் அவர்கள் இருப்பதை அறிந்து தகவல் கொடுத்த போராளி சொன்ன அடையாளத்தை வைத்துத் தேடி அவனைக் குடும்பத்தோடு இணைத்தான் சக போராளி.

ஐயாவின் மூத்த மகள் குடும்பமும் ஒரேயிடத்தில் இருந்தார்கள். காயத்தோடு திரும்பிய மருமகனுக்கு ஐயாவே வைத்தியனாய் கவனம் பார்த்தார். அவன் ஐயாவின் மருமகனான நாள் முதல் அவனை ஐயா ஒரு போதும் மருமகனாய் நினைத்ததுமில்லை அழைத்ததுமில்லை. எப்போதும் ஐயாவுக்கு அவன் மகனாகவே வாழ்ந்தான். ஐயா மூச்சுக்கு முன்னூறுமுறை மகன் மகன் என்றுதான் அவனில் அன்பைச் சொரிந்தார்.

எல்லாரும் போயினம் மகன் நாங்களும் போவம்....! பெரிய மருமகன் நல்லா சிங்களம் கதைப்பார் நாங்களும் அவையோடை வெளிக்கிட்டா அவர் கதைச்சு எங்களையும் காப்பாற்றிடுவர்....!

ஐயாவின் சொல்லை முதல் முறையாக மறுத்த மருமகன் வேண்டுமானால் தங்கள் குழந்தையை அவர்களைக் காப்பாற்ற முடியுமென்றால் கொண்டு போகச் சொன்னான்.

நாங்கள் கடைசி மட்டும் நிக்கப்போறம் நடக்கிறத இஞ்சையே காணுவம்...! என பிடிவாதமாய் நின்றான். ஐயாவும் அவர்களோடு நிற்பதாக மூத்த மகள் குடும்பத்துக்குச் சொல்லிவிட்டு அவர்களோடு தங்கினார்.

17.05.2009 கடைசி முடிவெடுக்க வேண்டிய நிலமையில் ஐயா மருமகன் மகளின் முடிவையே தானும் ஏற்றுக்கொண்டு காலகாலமாய் வாழ்ந்த நேசித்த மண்ணைவிட்டு எதிரியிடம் சரண் புகுந்தார்கள். அந்தக் கொடிய நாட்களை வதைகளைத் தாங்கிய லட்சக்கணக்கானவர்களுடன் ஐயாவும் மகள் மருமகன் பேரக்குழந்தையும்....

2010இல் ஊனமுற்றவர்கள் விடுதலை செய்யப்பட்ட போது ஐயாவின் மருமகனும் விடுதலையாகி மீளவும் ஒன்றிணைந்த போது ஐயா இன்றைப் போலொரு துயரம் தனக்கு வருமென்று நினைக்கவேயில்லை.
விடுதலை செய்யப்பட்ட மருமகனும் மகளும் தொடர் விசாரணைகள் என்ற பெயரால் மீளவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். வெளிவராத குரல்களின் மௌனங்கள் உலகின் செவிகளுக்கு கேட்காது நடந்த அந்தக் கொடுமைகளால் இனி ஊரில் வாழ முடியாத நிலமை உருவாகியது.

கருவுற்றிருந்த மகள் கடத்தப்பட்டு வதைக்கப்பட்டாள். தொழில் தேடி யாழ் சென்ற மருமகன் வரும்வரை அவளை விடுதலை செய்யாமல் வைத்துத் துன்புறுத்தினார்கள். ஊர் மீண்டு மனைவியைக் காத்து தினம் தினம் அச்சம் நிறைந்த இரவுகள். எவரது கண்ணையும் நம்ப முடியாத அந்தரத்தின் கொடிய பொழுதுகளைத் தாங்க முடியாது ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

000          000              000

வாழ்வு அல்லது மரணம் என்ற முடிவோடு 2011இல் நாட்டைவிட்டு வெளியேறி அயல்நாடு போனார்கள். ஐயாவையும் அழைத்துப் போக முடியாத அந்தரம். ஐயா நாங்கள் கொஞ்சநாளில நிலமை சரிவந்தா திரும்பி வந்திடுவம் அதுமட்டும் அக்காவோடை இருங்கோ....! மருமகன் சொன்னபோது ஐயாவும் ஓமென்றுதான் சொன்னார். ஐயா மகனாய் நேசித்த மருமகனும் மகளும் ஐயாவின் ஆறுதலாயிருந்த பேரனும் நாட்டைவிட்டு வெளியேற அவசர அவரசமாய் இருந்த காணிகளை விற்றுக் கொடுத்தார் ஐயா.

காலம் எப்போதும் நம்பிக்கைக்கு எதிரியாய் மாறிவிடுவதுபோல ஐயாவின் நம்பிக்கையும் பொய்யாகியது. பிரிந்து போன மகளும் மருமகனும் பேரனும் ஐயாவிலிருந்து பிரிக்க முடியாத அங்கமாகி அவர்கள் நினைவில் ஐயா தன் இயல்பை இழந்து போனார்.

ஐயா நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். உயிர் இதோ அதோ என இருந்த நேரம் மருமகனின் நண்பர் மூலம் மருத்துவத்திற்கு சேர்க்கப்பட்டு சத்திரசிகிச்சை வரை போய் உயிர் மீண்டார். ஐயாவிற்கு அப்போதைய ஆறுதலாக இருந்த இரண்டாவது மகள் 4பிள்ளைகளோடும் வீட்டு வறுமையை சமாளிப்பதா ஐயாவை கவனிப்பதா என்ற நிலமையில் வறுமையே அந்த வீட்டில் நிரந்தரமாகத் தங்கியது.

பரம்பரையாகச் செய்து வந்த கடற்தொழிலைச் செய்ய வசதியில்லாது போனதால் இரண்டாவது மகளின் கணவன் ஐயாவின் இரண்டாவது மருமகன் ஏதாவதொரு தொழில் செய்ய வேண்டுமென்றதே இறுதித் தேர்வாகியது. கையில் முதலின்றி சுயதொழிலைத் தொடங்க முடியாது போக மேசன் வேலைக்குப் போய் வந்த மருமகனின் உழைப்பு மட்டுமே குடும்பத்தின் ஆதாரம்.

இக்காலப் பொருளாதார இறுக்கம் பிள்ளைகளின் கல்வி செலவுகள் உணவுத் தேவைகள் வருமானத்துக்கு மேலாகியது. ஐயாவுக்கான மருந்து தேவைகளையும் மருமகனின் உழைப்பே நிவர்த்தி செய்ய வேண்டியிருந்தது. ஐயாவால் சதாரணமாக உணவை உட்கொள்ள முடியாது போனது. தண்ணீர் வகைகளும் , பால்மா , தேனீர் , பழம் மட்டுமே அவரால் உண்ண முடிந்தது. பால்மாக்கள் விற்கிற விலையில் அதனை வாங்கிக் கொடுக்க அந்தக் குடும்பத்திடம் வசதியில்லை. கிடைக்கிற உழைப்பில் ஐயாவுக்கும் எதையாவது கொடுத்து 6மாதங்கள் கடந்த போது அந்தக் குடும்பத்தின் துயரில் மேலுமொரு இடி.

மேசன் வேலைக்குப் போன மருமகன் கட்டடமொன்றிலிருந்து தவறி வீழ்ந்து கோமாநிலமைக்குப் போயிருந்தார். 'பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும்' என்ற பழமொழி ஐயாவின் குடும்பத்திற்கு நிகழ்ந்தது. உழைக்கவிருந்த ஒரு மருமகனும் சிலமாதங்கள் கோமாநிலமையிலிருந்து நினைவுகள் மறந்து ஒரு குழந்தையின் வடிவாமாக வீடு வந்து சேர்ந்தார்.

இரு நோயாளிகளைப் பராமரிப்பு , 16,14,12,9 வயதுகளிலிருக்கும் பிள்ளைகளை கவனிப்பது எல்லாவற்றுக்கும் மேலாக வருமானமேயின்றிய வாழ்வு ஐயாவின் மகளுக்கு. ஒரு நேரமேனும் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பாடு கொடுக்கவேனும் உழைக்க வேண்டிய பொறுப்பும் 36வயதான ஐயாவின் மகளின் தலையில்.

அழுதாலும் தீராத துயரம் அந்தக் குடும்பத்தின் விதியாகி 75வயதான ஐயா தன்னை மரணம் கொண்டு போகமலிருக்கும் விதியை எண்ணி கட்டிலிலேயே கண்ணீரோடு கழிக்கிறார். 3ஆண்பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் நாட்டுக்குக் கொடுத்துவிட்டு அனாதையான தனது வாழ்வு மீது ஐயாவுக்கு வெறுப்பாயே இருக்கிறது. ஐயாவிடம் விரைவில் வருவார்கள் என ஐயா நம்பியிருந்த இளைய போராளி மகளும் மருமகனும் பேரப்பிள்ளைகளும் ஆசிய நாடொன்றில் பயண முகவரால் ஏமாற்றப்பட்டுச் சிறையொன்றில்....!

நேற்று 19.04.2013 ஐயாவுடன் தொடர்பு கொண்டேன்.

அம்மா....! எப்பிடியம்மா இருக்கிறியள் ? இருக்கிறமய்யா...!  எப்பிடி ஐயா சுகமா இருக்கிறியளே ? கேட்ட எனக்கு ஐயாவின் அழுகை மட்டுமே பதிலாய் வெளி வந்தது. என்னை ஏனம்மா கடவுள் இப்பிடி சோதிக்கிறான் ? 3ஆம்பிளைப் பிள்ளையளைப் பெத்திட்டு இண்டைக்கு என்ரை பொம்பிளைப் பிள்ளைக்கு பாரமா இருக்கிறனம்மா....! எல்லாம் போச்சம்மா....!

அப்பாவிற்கு நிகரான ஐயாவின் கண்ணீர் கதைகள் இதயத்தில் சுமையாகிறது. ஐயா உயிர் வாழும் வரையில் ஐயாவிற்கு உணவு வேண்டும். அதற்கான ஒரு வழி வேண்டும்....!

ஈழவிடுதலைப் போராட்டம் நடைபெற்ற சமகாலத்தில் ஆதரவற்ற மாவீரர்களின் பெற்றோர்கள் வாழ அவர்களுக்கான இல்லம் ஒருகாலம் இருந்தது....! ஆளில்லையென்று சொல்ல ஆளில்லாமல் அவர்களுக்கான நல் வாழ்விருந்தது....இன்று....! எத்தனையோ மாவீரர்களின் பெற்றோர்கள் ஒருநேர உணவுக்கு ஒரு தலையிடி மருந்துக்காகவும் ஏங்குகிற இந்த ஏழைப் மாவீரர்களின் பெற்றோர்களுக்காக எங்கிருந்தாவது ஒரு நேசக்கரம் நீளுமென்ற நம்பிக்கையில்.....!


20.04.2013 (இந்த ஐயாவிற்கு யாராவது ஒரு கருணையுள்ளம் உதவ முன் வர வேண்டும். ஐயாவின் ஆதரவற்றுப் போன மகளின் 4 பிள்ளைகளின் படிப்புக்கும் ஒரு சிறு தொழிலுக்கும் ஆதரவு தேவை. அவர்கள் மீள எழ ஒரு சந்தர்ப்பத்தை புலம்பெயர் வாழ் உறவுகள் வழங்குங்கள்)

ஐயாவிற்கு மாதம் 5ஆயிரம் ரூபா (அண்ணளவாக 30€) வாழும் நாட்கள் கொஞ்சம் அதுவரை உணவு வேண்டும்.
ஐயாவின் மகள் சிறு பெட்டிக்கடையொன்றை நடாத்த விரும்புகிறார் - 50000,00ரூபா (அண்ணளவாக 315€)


4பிள்ளைகளுக்கும் ஒரு மாதம் ஒரு பிள்ளைக்கு ஆயிரம் ரூபா கல்வியுதவி. (தாய் தனது பெட்டிக்கழைட வியாபாரத்தில் மீள எழ இந்த ஒருவருட கல்வியுதவி பேராதாரமாக இருக்கும்) எங்கள் வாழ்க்கை
க்கு தங்கள் குடும்ப உறவை உயிரைத் தந்த இந்தக் குடும்பத்திற்கு உதவுங்கள்.

1 comment:

Anonymous said...

How do i contact