Tuesday, April 23, 2013

அன்றொரு நாள் கரும்புலி இன்று புற்றுநோயாளி


அவன் ஒரு கரும்புலி. ஒரு காலம் அவனின் தேவையும் சேவையும் தேவையாக இருந்தது. 15வயதில் இயக்கத்திற்குப் போனபோது இப்படியொரு கரும்புலிக் கனவை அவன் கண்டதேயில்லை. ஆனால் காலம் அவனை ஒரு புலனாய்வுப் போராளியாக்கியது புலனாய்வின் தொடர் எதிரியின் கோட்டைக்குள் பணியமைந்து தானாகவே கரும்புலிக்கான பயிற்சியையும் பெற்றுக் கொண்டு பிறந்த கிளிநொச்சியை விட்டு சமாதான காலத்தில் வெளியேறினான். குடும்பத்தில் தம்பியும் அக்காவும் போராளிகளானார்கள்.

எல்லாக் கரும்புலிகள் போல அவனும் குடும்பம் , உறவு என்ற வட்டத்தைத் தாண்டி தாயகக்கனவோடு சாவினைத் தழுவ அவன் தனக்கான சந்தர்ப்பத்தை தேர்ந்து வெளிக்கிட்ட போது இலட்சியக்கனவை நிறைவேற்றி தன்னினம் வாழ வேண்டுமென்றதை மட்டுமே நினைத்திருந்தான்.

போகும்போது அவன் சொத்தென்று கொண்டுபோனது சில உடுப்புக்கள் மட்டுமே. முற்றிலும் மாறுபட்ட கொழும்பைக் கற்று முடிக்கச் சிலமாதங்கள் எடுத்தது. கடையொன்றில் பகல்நேர வேலையாளாகவும் , அதிகாலையில் இராணுவ மையமொன்றிலும் பணியாளனாக மாறினான்.

நாடு லட்சங்களை இந்த லட்சிய வீரர்களுக்காகக் கொடுக்கத் தயாராக இருந்த போதும் தங்கள் உழைப்பிலே தங்கள் செலவையும் தங்கள் தேவையை கவனித்து சரித்திரங்களான பல வேர்கள் போலவே இவனும் பணியில் இணைந்தான்.

இலக்கின் எல்லையைத் தேடியே விழிகள் எப்போதும் புலனாயும். அணியும் சேட்டில் மறைக்கப்பட்ட சயனைட் மட்டுமே அவனுக்கான பாதுகாப்பு. ஆள ஊடுருவி வன்னியை நிலை குலைக்கும் கனவோடு காரியத்தில் இறங்கி வன்னிக்குள் அச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான் எதிரி. 

ஏதிரியின் பகுதிக்குள் ஊடுருவி அவர்களது கோட்டைக்குள்ளிருந்து இழப்பைக் கொடுத்து ஈழ விடியலை நோக்கிய வீச்சுக்கு வெளிச்சமாகும் கனவோடு கரைந்த வெளியில் வராத எரிமலைகள் போலவே அவனும் கனவோடலைந்தான். கொழும்பின் இயல்புக்கு ஏற்ப அவனும் மாறி இலக்கையடையும் நாளொன்றில் விடியலுக்குத் தயாராகினான்.

அன்றோடு அவன் ஒரு பெயரற்ற கல்லறைக்கும் அவனைப் புரிந்தவர்களின் இதயத்தில் மட்டும் அடையாளம் காணப்படுபவனாக மாறிவிடும் வேகத்தில் ஒருநாள் விடியற்காலை தயாராகினான். அவனது தயார்நிலையை முந்திக் கொண்டு விதியாய் வந்தது எதிரியின் புலனாய்வு. அதிகாலை தட்டப்பட்ட கதவு அவனது கட்டுப்பாட்டை மீறி உடைக்கப்பட்டு உள்நுளைந்தவர்களால் கைது செய்யப்பட்டான். உறங்காத அந்த விழிகள் உள்புகுந்தவர்களால் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டான்.

யாருமறியாத இருட்டறைகளில் வதையிடங்களில் சிறையிடப்பட்டு தொடர் சித்திரவதைகள் உறுதியோடு தயாராயிருந்த கரும்புலியின் இறுதி நாட்களையே அறிய விடாது நாட்கணக்கில் நினைவிழந்து போயிருந்தான். ஆள்மாறி ஆள்மாறி விசாரணையென்ற பெயரால் உயிரறும் உச்ச வதைகள் எல்லாவற்றையும் தாங்கினான். விடுதலையின் வெளிச்சம் புலருமொரு நாளில் அவன் வீழ்ந்தானென்ற சொல்லோடு போய்விடவே காத்திருந்தான்.

2வருடங்கள் அடையாளம் சொல்லப்படாத இடங்களில் வைத்து வதைக்கப்பட்டான். அனுப்பியவர்களும் தொடர்பு கொள்ளவோ தேடிப்பார்க்கவோ அவகாசமின்றி களநிலமை நிலையிழந்து கொண்டிருந்தது.

2009 எல்லாம் முடிந்து ஆயிரக்கணக்கில் போராளிகள் சரணடைந்தார்கள் என்ற செய்தியை அவனும் கேள்விப்பட்டான். கிளிநொச்சியில் வாழ்ந்த குடும்பத்தைப் பற்றிய கவலை அவர்கள் யாராவது மிஞ்சியிருப்பார்களாக அல்லது இறந்து போனார்களா என்ற தகவலும் தெரியாது.

அவன் அடைபட்டிருந்த இடத்திற்கு சரணடைந்த பலரும் கொண்டு வரப்பட்டார்கள். ஏன் ? எப்படி ? காவலாளிகளின் கண்காணிப்புகளையும் தாண்டி சங்கேத மொழியால் கேட்டுக் கொள்வான். என்ன வதையானாலும் அவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் சிறைவாசத்தை சாதாரணமாக ஏற்றுக் கொண்ட பலரது நெஞ்சில் வீழ்ந்த இடியாக மாறிய நிலமையால் ஏற்பட்ட ஏமாற்றம் அவனுக்கும்.

000          000             000

2010இல் அவன் நிரந்தரமாக சிறைக்கம்பிகளின் பின்னால் அடைக்கப்பட்டான். இப்போது முன்பு போல அடிக்கடி வந்து வந்து ஆளாளுக்கு அடியுதையில்லை. ஆனால் ஏற்கனவே ஏற்றப்பட்ட ஊசிகள் , போத்தல்கள் உடலில் ஏற்பட்ட தாக்கங்கள் அவனால் இயங்க முடியாத நிலமைக்கு ஆளாக்கியது. சிறைச்சாலையின் உணவு மட்டுமே. அது தவிர சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து தரப்படும் சில மருந்துகள். அதுவும் ஏனோ தானோ என சாட்டுக்கு வழங்கப்படும்.

இறுதியுத்தத்தில் இருந்து வந்தவர்களைப் பார்க்க உறவுகள் வருவார்கள். நெருங்கிய கம்பிக்கட்டுக்கு மறுமுனையில் நின்று சில நிமிடங்கள் தங்கள் உறவுகளைப் பார்த்துவிட்டு கண்ணீரோடு பிரிந்து போய்விடுவார்கள். அப்படி வந்தவர்கள் மூலம் கூடவிருந்தவர்களின் உதவியில் தனது குடும்பத்தைத் தேடினான்.

வலைஞர் மடத்தில் இடம்பெயர்ந்து இருந்த போது விழுந்த எறிகணையில் குடும்பமாக காயமுற்று தங்கை காலிழந்து , மைச்சினனும் காயமுற்று ,மருமக்களும் காயங்களோடு உயிர் தப்பி அப்பா நோயாளியாகி அவன் எங்கோ வெடித்து காவியமாகிவிட்டதாக நம்பிய அம்மா மனநலம் பாதிப்புற்று தம்பி வீரச்சாவடைந்து போனதாகவும்; செய்தி வந்தது.

கடைசிவரை வன்னியில் வாழ்ந்த ஒவ்வொரு குடும்பத்தின் இழப்பு போல அவனும் தனது குடும்பத்திலிருந்து இழந்தது திரும்ப ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவனைப் பார்க்கவோ அல்லது அவன் எப்படியிருக்கிறான் என்பதனை அறியவோ அவனது குடும்பத்திலிருந்து ஒருவரும் சிறைக்குச் செல்வதில்லை.

குடும்பத்தின் மொத்த பொருளாதாரமும் சிதைந்து இன்றைய அவர்களது வாழ்வு அன்றாடமே அவதியாக. அவனைப் பார்க்க ஒருமுறை பயணிக்க தேவைப்படும் பெரும் தொகை பணமற்று மிகவும் அடிநிலைக்குப் போய்விட்டார்கள். அடிப்படைத் தேவைகளைக் கூட அவனுக்கு அனுப்பவோ அல்லது யாரிடமேனும் கொடுத்துவிடவோ அந்தக் குடும்பத்திடம் வசதியில்லை. கூடவிருப்போர் தங்களால் இயன்றதை கொடுத்தாலே தவிர வேறெதுவும் இல்லை.

இறுதியாக 2006 இல் பார்த்த அவன் இப்போது தனது வயதையும் மீறிய தோற்றமும் கண்டறியப்படாத நோயாய் சொல்லப்பட்ட நோய் புற்றுநோயென மருத்துவர்களின் அறிக்கைகள் சொல்கிறது. உடலை வருத்தும் நோயின் வலியும் துயரமும் அவனது குடும்பத்தால் அறிய முடியாத கதைகள்.

தனது ஆடைகளைத் துவைக்கவோ தண்ணீர் அள்ளவோ களைத்துச் சோருகிற உடல் சோர்வும் வலியும் இன்று படுக்கைக்குப் போனால் நாளை எழுவானோ என்றதே தெரியாத வாழ்வு. சுமத்தப்பட்ட வழக்கு எவ்வித முடிவுமின்றி அதுவும் காலம் நீட்டப்பட்டு முடிவற்ற தொடராய்.....!


சிலவேளைகளில் நல்ல உணவைச் சாப்பிட வேணும் போலிருக்கும் சிலநாட்களில் குடும்பத்தினருடன் பேச வேணும் போலிருக்கும் எதற்குமே பணமிருந்தால் மட்டுமே முடியும். அவனிடம் பணமுமில்லை சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற பணம் கொடுக்கவும் யாருமில்லை.

அவனது குடும்பத்து வறுமை அவனையும் கிட்டத்தட்ட மறந்த நிலமையே இப்போது. 8வருடங்கள் முதல் பார்த்த அம்மாவை ,அப்பாவை , தங்கையை , மருமக்களையெல்லாம் பார்க்க வேண்டும் போல சிலவேளைகளில் மனசு துடிக்கும் ஆனால் யாருக்கும் தெரியாமல் தனது ஆசைகளை மறைத்து தனித்து அழுதுவிட்டு மற்றவர்கள் முன்னால் சிரிக்கிற வல்லமையைக் கற்றுக் கொண்டுவிட்டான்.

ஒரு காலத்தின் கரும்புலி , பெரு வெற்றியின் ஏணி , 15வயதில் தேசக்கனவோடு போய் இன்று 37வயது மனிதன். தனது சாவின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். மரணம் எத்தனை விரைவாய் அழைக்குமே அத்தனை விரைவாய் அழைத்துக் கொண்டு போனாலே போதுமென்ற மனநிலையில் நீண்ட சிறைவாழ்க்கை வெறுப்பைத் தருகிறது.

ஆனாலும் நிறைவேறாத சின்னச் சின்ன ஆசைகளை அனுபவிக்க வேண்டும் போலவும் ஆசைப்பட்டவற்றையெல்லூம் சாப்பிட வேண்டும் போலவும் மனசு அலையும் நேரங்களில் தன்னைத் தானே கட்டுப்படுத்தி என்றாவது தனக்கும் விடுதலை வருமென்று நம்புகிறான்.

21.04.2013 அவன் அழைத்தான். கிட்டத்தட்ட ஒருவருடங்களின் பின்னர் வந்த அழைப்பு அது.

அக்கா ! நான்********* ! எப்பிடியிருக்கிறீங்கள் ?
கிடைத்த 2நிமிடத்திலும் அவன் சொல்ல விரும்பிய யாவற்றையும் சொல்லிவிடும் ஆவலில் கதைக்கத் தொடங்கினான்.

வீட்டுக்காறர் வாறவையோ ? கேட்ட போது சொன்னான்.

அவையளை 8வருசமா பாக்கேல்லயக்கா....எல்லாருக்கும் விசிற் வருமக்கா எனக்கு ஒருத்தரும் வாறேல்ல...! முந்தி கொஞ்ச நாள் உங்கடை உதவி கிடைச்சது. பிறகு நீங்களும் விட்டிட்டீங்கள்.

எங்கை தொடர்புகள் விடுபட்டுப் போச்செல்லோ அதுதான் விடுபட்டுப் போச்சு.
தொடர்ந்து ஆளாளுக்கு உதவி உதவியென்று அழைக்கிற அழைப்புக்களில் யாருக்கு முதலிடம் கொடுக்க யாரை தொடர்ந்து கவனிக்க ?

ஒவ்வொருவருக்குமான உதவியை எங்கிருந்து பெற்றுக் கொள்ள ? என்ற பாரத்தை இவனுக்குச் சொல்ல முடியவில்லை.
இப்ப வருத்தமெல்லாம் என்னமாதிரி ?
மாற்றமில்லையக்கா....!

இப்ப துப்புரவா உடம்பு முடியுதில்லை.
சரியான களைப்பும் வலியும் சிறுநீரகத்திலயும் பிரச்சனையாம்....!
எனக்கு மாதம்மாதம் ஏதுமொரு சின்ன உதவி செய்யேலுமெண்டா செய்யுங்கோ அக்கா....!

23.04.2013


(இந்த இளைஞன் எத்தனை காலம் உயிர்வாழ்வானோ தெரியாது. வாழும்வரை அவனுக்கானதொரு சின்ன உதவி மாதம் இலங்கை ரூபா (அண்ணளவாக 20€) என்றாலும் கொடுக்க வேண்டும். 

யாராவது இந்த மனிதனுக்கு உதவ விரும்பின் தொடர்புகளுக்கு :-
Nesakkaram e.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany
Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 (0) 1628037418
nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh
www.nesakkaram.org

No comments: