Thursday, June 25, 2009

கடைசிக்கடிதமும் காயாத கண்ணீரும்.



அவன் இருக்கிறானா ? எங்கே….? வதைமுகாமிலா அல்லது வவுனியா முகாமிலா பத்தாயிரத்துக்கும் மேல் சரண்புகுந்த தோழ தோழியருள் அவனும் தப்பியிருக்கிறானா ? அக்கா அக்கா என அவன் ஸ்கைப் கூப்பிடும் குரலும் மறைந்து…ஸ்கைப்பில் அவன் பெயர் இப்போது சிவப்பாகிக் கிடக்கிறது….

ஏதோ எனது வீட்டில் என்கூடப்பிறந்த ஓர் இரத்த உறவு போல அவன் என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தவன். தனக்குள்ளான துயரங்களை வெற்றிகளையென எல்லாவற்றையும் கடிதமெழுதி இளைப்பாறிக்கொள்ள “அன்பின் அக்கா” என்று ஆரம்பித்து அனைத்தையும் எழுதியனுப்புவான். எத்தனையோ தோழதோழியரின் எழுத்துக்கள் ஞாபகங்கள் போல இவனும் எனக்கு எழுதிய கடிதங்கள் பேசிய வார்த்தைகளென இவன் ஞாபகமாய் ஏராளம் நினைவுகள்……

யாரையும் கேட்கவோ அறியவோ முடியாமல் அவன் எனக்குள் தேடப்பட்டுக் கொண்டேயிருக்கிறான். அவன் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதாக எனக்குள் நம்பப்படுகிறான். வவுனியாவில் அமைந்துள்ள போராளிகள் முகாமில் அவனும் அழவோ ஆறுதல் தேடவோ இயலாமல் எப்போதும் போல தனிமையைத் தேடுவானா…..? இருக்கிறானா என்பதைத் தேடமுடியாமலும் இல்லையென்று ஆற முடியாமலும் அந்தரிக்கிறேன்.

எல்லோரையும் போல இவனும் அம்மாவும் அக்காவும் அண்ணாவுமென இனிமையான வாழ்வுக்குச் சொந்தக்காரனாய்த்தான் இருந்தான். காலஓட்டம் காதலுக்காய் தன்னுயிரை அண்ணன் மாய்த்துக்கொள்ள அதுவரையிருந்த இனிமைகள் போய் குடும்பம் முதல் முதலாகத் துயரைச் சுமக்கத் தொடங்கியது.

அப்பா குடும்பத்தைப் பிரிந்த போது வராத அழுகை அண்ணனை இழந்த போது அவனுக்குள் ஆகாயம் பிழந்து அவன் மேல் இறங்கியது போல அழுத்தியது. கேள்விகளால் தன்னையே துளைத்தெடுத்து அந்த இழப்பிலிருந்து வெளியேற அவனுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் சிலவருடங்கள் சென்று முடிந்தது. ஆயினும் நினைவுகளோடு அண்ணனை தூக்கியெறிய முடியாதபடி அவன் அவர்களோடு வாழ்ந்து கொண்டிருந்தான்.

அக்கா உயிரியல் படித்துக்கொண்டிருந்த நேரம் அவன் சாதாரணதர பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்திபெற்றான். உயர்தரத்தில் கணிதத்தைத் தெரிவு செய்து படிக்க ஆரம்பித்தவனை சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை கல்வியிலிருந்த கவனத்தையெல்லாம் காவு கொண்டது. அம்மாவோடும் அக்காவோடுமாக சுற்றித் திரிந்த அவனது உலகம் போரையும் அகதி வாழ்வையும் நினைத்து நினைத்து நித்திரையை இழந்து போனான். சாதாரணமான இரவுகளெல்லாம் அவனுக்கு நீண்ட யுகங்களாகின…..என்னால் என்ன செய்ய முடியும் ?

அம்மா அக்கா இவருவரையும் விட அவன் நேசிப்பில் தாயக விடுதலை நெருப்பு மூண்டு எரியத் தொடங்கியது. ஊரெங்கும் நிரம்பிய துயரமும் அவனையும் நாளடைவில் போராளியாக்கியது.

யாழ்மாவட்டமே அகதியாகி வன்னி நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரம் இவன் வன்னிக்காடுகளில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தான். ஒரு பெரும் இலட்சியக்கனவு இவனுக்கும் இதயம் முட்ட……ஆயிரமாயிரமாய் அணிவகுத்து நின்ற போராளிகளில் ஒருவனாய் களங்களில் காவியம் எழுதிக் கொண்டிருந்தவனுக்கு அரசியல் பிரிவில் சு.ப.தமிழ்ச்செல்வனின் அருகாமையில் பணி அமைந்து விடுகிறது.

அமைதியும் கடமையும் அவனை ஓர் சிறந்த வீரனாக்கியது. அரசியல் பிரிவுக்குள்ளிருந்து தடைப்பட்ட கல்வியைக் கற்றான். கணணிவரை அவனது கற்றல் விரிந்து உலகைக் கைகளுக்குள் அடக்கும் வலுவையெல்லாம் பெற்றுக் கொண்டான்.

போரால் சிதிலமான வன்னிமண்ணை உலகம் வியந்து பார்க்கும் அளவுக்கு வியக்க வைத்தது வன்னியின் வளர்ச்சியும் எழுச்சியும். ‘அக்கினிகீல’ சமர் சமாதானக்கதவுகளைத் திறக்க வழிகொலியது. வந்த சமாதான காலம் அவனை எனக்கு அடையாளம் காட்டியது.

விரிந்த இணையம் அவனை என்னோடு தொடர் உறவாக்கியது. ஈழநாதத்தில் நான் எழுதிய பகிர்வுகளில் அவன் வாசகனாகி என்னோடு அவன் உறவாகினான். கருத்தாடல் கவிதைகள் கதைகள் என எல்லாவற்றையும் பகிரத் தொடங்கியவன். மெல்ல மெல்லத் தனக்குள்ளிருந்த எல்லாவற்றையும் என்னோடு பகிரத் தொடங்கினான்.

“ஏதோ கனகாலம் பழகினமாதிரியிருக்கு… உங்களிட்டை எல்லாத்தையும கதைக்கலாம் பகிரலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறீர்கள் அக்கா” என்றொருதரம் மடலிட்டிருந்தான். அன்றிலிருந்து அவனது மடல்கள் ஈமெயில்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என அவன் என் பிள்ளைகள் வரையும் நெருங்கியிருந்தான். குறைந்தது வாரம் ஒரு தரம் ஏதாவதொரு வகையில் அவன் தொடர்போடிருந்தான்.

2005 ஒரு மடலிட்டிருந்தான். அக்கா நிலமை இறுகப்போகிறது. வர முடியுமாயின் வாருங்கள். உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் போலுள்ளது. பிள்ளைகளையும் கூட்டிவாருங்கள். எப்போது சந்திக்க இனிக் கிடைக்குமோ தெரியாதென எழுதியிருந்தான்.

ஊர் போகும் ஏற்பாடுகள் முடியும் தறுவாயில் பயணம் தடைப்பட்டு அவனைச் சந்திக்க முடியாதென்றதை அறிவித்த போது அவன் மிகவும் ஏமாந்து போனான் என்பதை அவன் எழுதிய கடிதங்கள் மெய்ப்பித்திருந்தன.

தான் தலைவரிடமிருந்து பெற்ற கணணி , கமரா என எல்லாவற்றுக்குமான தனது சந்தோசங்களென அவன் மகிழ்வோடு எழுதிய மின்னஞ்சல் நிறைய…..!

அப்படியொரு நாளில் 2006 சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட பலர் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் பரவிய நேரம் இணையத்தில் நான் ஓடிப்போய் தேடியது அவன் முகத்தைத்தான். ஆயினும் அவன் முகம் அங்கில்லை.

அக்கா அக்காவென மடலிட்டுக்கொண்டிருந்த மிகுதன் போய்விட்டதாக மிகுதனின் முகம் கண்ணீரை மறைத்த கண்ணகளின் ஊடாகத் தெரிந்தது. அன்று வீரச்சாவடைந்த அத்தனை பேரின் நினைவுகளிலிருந்து எழ முடியாத படி அடுத்தடுத்த இழப்புக்கள்…..என்ன செய்ய..ஏது செய்ய…எதுவுமே புரியாமல்….என்றோ ஒருநாள் வெல்வோம் என்ற நம்பிக்கையில் காலம் ஓடிக் கொண்டிருந்தது…..

2008 நடுப்பகுதிக்குப் பின்னாலான இழப்புகளின் பின்னான சோர்வுகளை அவன் நிமிர்வுகளாக்குங்கள் அக்கா என எழுதிக் கொண்டிருந்தான். அப்படியே தொடர்பிலிருந்தவனின் தொடர்புகள் அற்றுப்போக அவனுக்காய் எழுதிய வரிகள் இவை…..

நலமறிய ஆவலுடன்.....,
"அன்புள்ள அக்கா,
நலம் நலமறிய ஆவல்"
அம்மாவுடன் கதைத்தேன்
அக்காவுடன் சண்டை பிடித்தேன்
பேச்சுவார்தைகள் நடக்கிறது
புலிகளின் நிலவரம்
போர்ப்பிள்ளைகளின் துணிகரம் என
இணையஞ்சல் ஊடாய்
நேசமொடு - என்
நெஞ்சில் இடம் கொண்டான்.

"ஊருக்கு வா அக்கா
உனைக்காண வேண்டும்
போருக்குள் நின்று வன்னி
பாருக்கு அறிமுகமாய்
ஆனகதை சொல்ல
ஊருக்கு வா அக்கா"
அடிக்கடி அஞ்சல் எழுதிய புலி.

பூவுக்கும் அவனுக்கும்
பொருத்தம் நிறைய.
அத்தனை மென்மையவன்.
போராளிப் பிள்ளையவன்
போர்க்களம் புடமிட்ட புலியவன்.
புலம்பெயரா உறுதியுடன்
பலம்பெற்ற தம்பியவன்
ஞாபகத்தில் நிற்கின்றான் - என்
நினைவகத்தில் பத்திரமாய்.

அம்மாவின் கதை
அண்ணாவின் கதை
அக்காவின் கதையென
உள்ளிருந்த துயர் யாவும்
இணைமடலில் கொட்டி
இளைப்பாறிய வேங்கையே !

வன்னியில் குண்டு விழ
இங்கென் இதயத்தில் இடிக்கிறது.
என் போராளித் தம்பியுன்
நினைவுகள் கனக்கிறது.

நலமா நீயென்று கேட்கேனடா - உன்
நலமறிய ஆவலுடன்.....,
எங்காவது இணைவலைத் தொடர்பிருந்தால்
ஒருவார்த்தை எழுதிவிடு
நலமாயிருக்கிறேனென்று.

அன்புடன்
**************
அவன் இருப்பான் என்று நம்பவோ அவன் இல்லையென்று சொல்லவோ தொடர்புகள் அற்றுப்போயின….ஆனால் அவனது கடிதங்களாக கருத்துக்களாக….நிழற்படங்களா.….அவன் என்னோடு வாழ்ந்து கொண்டிருந்தான்…...
 *********************************

அவன் தொடர்புகள் அறுந்து போன பொழுதில் இணையத்தில் இக்கவிதையை வாசித்துவிட்டு அவன் எழுதிய கடிதம் இது :-

அடுத்தடுத்து அவன் போல் பழகிய தோழர்களும் தோழியரும் பலர் களங்களில் தங்கள் உயிர்களை விதைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருந்த அழைப்புகளில் மரணநாட்களே தினம் பிறந்து கொண்டிருக்க….2009இன் பங்குனி மாதம் மீளவும் உயிர் தந்து அவன் இட்டிருந்த மடல் இது…..என்னை மீளவும் உயிர்ப்பித்தது…..

அன்பின் அக்கா அண்ணா மற்றும் பிள்ளைகள்,
நான் நலமாக இருக்கின்றேன் இதுவரை. நீங்களும் நலமேயிருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இம்மடலினை எழுதுகின்றேன்.
எப்பொழுது கடைசியாக உங்களுடன் தொடர்பு கொண்டேனோ தெரியவில்லை. மிக நீண்ட நாட்களாகிவிட்டன என்று நினைக்கின்றேன். எனக்கு தொடர்ச்சியாக இணையத் தொடர்பு இருந்த போதிலும் அண்மைக் காலமாக நிறைய வேலைகள் இருந்தமையால் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. எனினும் உங்கள் அனைவரையும் இடைக்கிடை நினைத்துக் கொள்வேன். அடிக்கடி என்று பொய் சொல்ல முடியவில்லை.

அம்மா அக்காவுடனும் போனவருடம் 10ம் மாதம் கதைத்தபின்னர் சென்ற மாதம்தான் கதைத்தேன். அவர்களுக்கு கூட நான் இதுவரை கடிதம் எல்லாம் எழுதியது கிடையாது. உங்களுக்குத் தான் கடிதம் எழுதுகின்றேன். சிலவேளைகளில் - அநேகமாக இறுதிக் கடிதமாகக்கூட இருக்கலாம்.

போன மாதம் இணையத்தில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக உங்களுடைய வலைப்பதிவிற்கு வரநேர்ந்தது. அதிலும் எனக்காக நீங்கள் எழுதிப் பதிந்திருந்த “நலமா நீயென்று கேட்கேனடா” என்ற பதிவை கண்களில் நீருடன் படித்தேன். எனக்காக யாருமே அருகிலில்லை என்ற உணர்வு சிலவேளைகளில் தலைதூக்கும். களைத்தபொழுது தலைசாய்த்து ஆறுதல் காண அன்னை மடி இல்லையே என்று ஏங்குவேன். அப்பொழுதெல்லாம் யாருடனும் எதுவும் கதைக்கப் பிடிக்காது எங்காவது தனியே போய் இருப்பேன். ஆனால் உங்களுடைய அந்தப் பதிவைப் பார்த்தபோது என்னையே அறியாமல் கண்களில் நீர்வந்துவிட்டது. அதிலும் நான் அந்தப் பதிவைப் படிக்கும்போது யாருமே அருகிலில்லை. மனம்விட்டு கொஞ்ச நேரம் அழுதேன்.

நீங்கள் இவ்விட நிலைமைகளையும் அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். உலகமே திரண்டுவந்து எம்மீது போர்தொடுத்துக் கொண்டிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் என்னோடு தோளோடு தோள் நின்று ஒன்றாக படுத்துறங்கி ஒருதட்டில் உணவுண்டு வாழ்ந்த உறவுகள் பலர் களத்தில் வீழ்ந்துவிட்டார்கள்.

பல தடவைகள் மரணம் மிக அருகில் வந்துவிட்டுப் போயிருக்கிறது. ஆனால் இன்னும் வந்து கட்டித்தழுவி அழைத்துச் செல்லவில்லை. அதிஸ்டமோ துரதிஸ்டமோ தெரியவில்லை இந்தக்கணம்வரை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

இன்று அம்மா அக்காவுடன் கதைத்தேன். அம்மா நிறைய யோசிக்கின்றா போலத் தெரிகிறது. குரல் உடைந்து போயிருந்தது. நான் எதுவுமே காட்டிக்கொள்ளாது சாதாரணமாகக் கதைத்துவிட்டு வைத்துவிட்டேன். நீங்கள் உங்களுடைய தொலைபேசி எண்ணை அனுப்பினால் சிலவேளைகளில் கதைக்க முடியும். சில படங்களும் அனுப்பிவிடுகின்றேன். அம்மாவின் அக்காவின் தொலைபேசியிலக்கம் அனுப்புகிறேன். அம்மாவுடன் இடைக்கிடை கதையுங்கள். நேரம் கிடைக்கின்ற போது அம்மாவோடு கதையுங்கள். அம்மா என்னை நினைத்துக் கவலைப்படாமல் இருக்க ஆறுதலாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

என்றாவது சந்திப்போம் என்ற நம்பிக்கை போய்விட்டது ஆனாலும் ஒருமுறை கதைக்கலாம் என்ற நம்பிக்கையுடன்
தம்பி
****************
இக்கடிதத்தின் பின்னர் ஒரு சனிக்கிழமை மாலை நேரம் தொலைபேசியில் அழைத்தான். அக்கா என்றழைத்தவன் அரைமணித்தியாலங்கள் வரையில் அத்தனை நாள் கதைகளையும் சொல்லி முடித்தான். ஸ்கைபில் தினமும் வரும் நேரங்களைச் சொன்னான். அத்தோடு ஒரு மடலிட்டான்.

நான் கடவுள் படத்தில் “அம்மா உன் பிள்ளை நான்…” என்ற பாடலை கேட்டுப்பாருங்கள். பழைய “மாதா உன் கோயிலில் மணிதீபம் ஏற்றினேன்..” என்ற பாடலின் மெட்டில் இளையராஜா மீண்டுமொருமுறை தான் ராஜாதான் என்பதை நிரூபித்திருக்கிறார். நல்ல அர்த்தமான பாடல் வரிகளும் கூட.
அமைதியான ஒரு இடத்தில் மெல்லிய சத்தத்தில் பாடலை கேட்டுப்பாருங்கள். கேட்டுவிட்டு கருத்து எழுதி எனக்கு அனுப்புங்கள்.
தம்பி
****************

அவனுக்குள்ளிருந்த நல்ல ரசனைகளில் ஒன்று தனக்குப் பிடித்த பாடல்கள் கவிதைகளை எனக்கும் அனுப்பி வைப்பான். அவைபற்றிய கருத்துக்களையும் என்னிடமிருந்து கேட்பான். அவன் விரும்பிக் கேட்கும் பாடல்கள் யாவும் எனக்கும் வந்து சேரும். அவை எனக்கும் பிடித்த பாடல்களாக……

அதன்பின்ஸ் கைப்  மூலம் அடிக்கடி கதைத்துக் கொள்வான். அவனுக்காக ஸ்கைப் அவன் வரும் நேரங்களிலெல்லாம் பச்சையில் நிற்கும். சிரித்தபடி கதையும் தனக்குப் பிடித்த பாடல்களுமென தொடர்போடு இருந்தவன். 06.05.09 அன்றுசொன்னான். அக்கா இயன்றவரை உறவுகளைப் பேணுவோம். நாளைக்கு வேறையிடம் போறேன். இனிமேல் கதைக்க முடியுமோ தெரியேல்ல. அதிஸ்டம் இருந்தால் கதைக்கலாம்.

நம்பிக்கை தரும்படி எதையாவது தருவான் என்ற எனது நம்பிக்கையில் அவன் கதைகள் ஏதோவொரு புதிர்போல இருந்தது. அதன் பின்னால் அவனை எதிர்பார்த்து ஸ்கைப்பில் தவமிருந்தது. அவன் வரவேயில்லை……ஒன்லைன் போகும் நேரமெல்லாம் ஸ்கைப்பில் காத்திருந்தேன். அவன் வரவேயில்லை---

நம்பிக்கைகள் அறுபட்டு நீ
இருப்பாயின்னும் என்ற நினைப்பும்
விடுபட்டுப் போன ஒரு
அந்திப் பொழுதில் அழைத்தாய்....

"அக்கோய் சுகமோ" ?
நினைக்காத பொழுதொன்றின்
நினைவுகளில் வந்து நிரம்பினாய்....

"எப்படியிருக்கிறாய்" ?
எப்போதும் போலான கேள்வியில்
அப்போதும் சிரித்தாய்....
"அக்கா இருக்கிறேன்"
அதிஸ்டமோ இல்லை ஆயுள் நீளமோ ?
அறியேன் என்றாய்....

ஐந்து நிமிடமோ
அதற்கும் சில நொடியோ
" அக்கா போகிறேன்"
தொடர்பறுத்து விடைபெற்றாய்....
கடைசிச் சிரிப்பும் கலகலத்த பேச்சும்
கனவிலும் மாறாமல் நீ....

வீரச்செய்திகளுக்குள் நீயும்
வித்தாய்ப் போனாயோ ?
காலம் அள்ளி வரும்
களச் செய்திகளில்
காவியமாய் ஆனாயோ ?
இல்லைக் கல்லறையும் இல்லாமல்
காற்றோடு கலந்தாயோ....?

"எப்போதாவது சந்திப்போமென்ற
நம்பிக்கை போய்விட்டது
ஒருதரம் கதைக்க வேணும்"
இலக்கம் தாவென்றவனே...!
ஏனடா எங்கள் விதி
இப்படியாய்....?

விடுபட்டுப்போன நம்பிக்கைகள்
உனக்காய் துளிர்விடுகிறது.
சுயநலத்தோடு பிரார்த்திக்கிறேன்.
சாகாமல் நீ என்னைச்
சந்திக்க வேண்டும்.

06.05.09

அவனுக்காய் சிலவரிகள் எழுதி அவனை எதிர்பார்த்தபடி காத்திருக்க…..கள நிலவரம் கைகளை விட்டுப்போனது போல…..நம்பிக்கைகள் இழந்து நம்ப முடியாத எல்லாம் நடந்து முடிந்து நந்திக்கடலோரம் நாங்கள் நேசித்த நிமிர்வுகளெல்லாம் சரிந்து வீழ்ந்து எங்கள் சந்ததியின் கனவெல்லாம் சாய்ந்து கிடந்தது…..

12ஆயிரத்துக்கும் மேலாக போராளிகள் சரணடைந்ததாக செய்திகள் வந்த போதும் எதையும் நம்பும் நிலையில் மனசு இல்லை. 3லட்சத்துக்கும் மேலாக மக்கள் முகாம்களில் முடங்கியுள்ளதாக முகாம்களுக்குள்ளிருந்து வந்த உறவுக் குரல்கள் கேட்ட பின்னும் நம்பிக்கையோடிருந்தது எல்லாம் பொய்த்து எல்லாம் முடிந்து போய்……

எங்கள் இனிய உறவுகளின் உயிர்களையெல்லாம் கொடுத்துவிட்டு எம் இயலாமைகளை நொந்தபடியிருக்க…..அவன் இருக்கிறான் இருக்கிறான் என உள் மனம் சொல்கிறது. யாரையாவது விசாரித்து அவன் இருப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி அதையும் விட்டாயிற்று. நாங்கள் அவனைத் தேடப்போய் நரிகளிடம் அவனை இழந்து விடுவோமா என்ற பயத்தில் எல்லாவற்றையும் கைவிட்டு விட்டோம்.

அவனது அம்மா அக்காவுடன் இடையிடை அவன் பற்றி விசாரிப்போடு போகிறது நாட்கள். என்போல அவர்களும் அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு……அவன் தொடர்பில்லாத வெற்றிடத்தை நிரப்ப அவனது அக்காவும் அம்மாவும் அவன் பற்றி என்னுள் அவனை ஞாபகப்படுத்தியபடியிருக்கிறார்கள்.

அவனைத் தேடவா விடவா அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் இப்படியே இருக்கவா…..? அவன் இல்லையென்று உறுதியாகினால் உடைந்து போகும் அவன் அம்மாவும் , அக்காவும் கூட நானும் அவனில்லையென்று நம்பும் நிலையிலும் மனசின்றி…..அவன் நினைவுகளைத் தினமும் அவனுக்குப் பிடித்த பாடல்கள் ஊடாக….அவனது கடிதங்கள் ஊடாக….அவனது நிழற்படங்கள் ஊடாகவென அவன் நிறைந்து கிடக்கிறான்……எத்தனையோ பேர் அங்கிருக்கினம் இங்கிருக்கினம் என தொடர்புகள் வந்து சேர்ந்துள்ள நிலையில் இவன் இன்னும் எந்தவித தொடர்புமின்றி மெளனமாயிருக்கிறானா….? அல்லது…..?????

22.06.09

Saturday, June 20, 2009

உருத்திரகுமாரைப் புறக்கணியுங்கோ இல்லாட்டி நீங்க துரோகியள்



இதென்ன இழவு வில்லங்கமெண்டு யோசிக்கிறியளெல்லோ. ஏற்கனவே புலத்து ஏகபிரதிநிதிகளையும் வணங்காமண்ணைக் கல்கத்தாவில உடைக்கிறதையும் உடைச்சுச் சொன்னதில கடுப்பேறிக் கன அவதாரங்களில வெருட்டு மிரட்டு விடுகிற சாமிகளே ! நீங்கள் துரோகியேண்டாலும் சரி றோவெண்டாலும் சரி உண்மைகள் வெளிவருவதை நீங்கள் நேத்தி வைச்சுக் கும்பிடுற கடவுளுகளாலையும் இனிக்காப்பாற்றேலாது.

உங்களுக்கு இன்னும் ஒரு விசயம் விளங்குதேயில்ல. உளவாளி எப்பவும் நல்லவனாகவே நடிப்பான். எங்களைமாதிரி உங்களைப்போல உருவேறி உண்மையளைச் சொல்றவையளாக இருக்காயீனம். உங்களை எங்களையெல்லாம் உளவாளியா வைச்சிருந்தா எந்த உளவு அமைப்பும் உளவு பாக்கேலாது மாடுகட்டி உழவுசெய்யத்தான் முடியும்.

சரி இனி வியசத்துக்கு வாறன். புறநிலை அரசை உருவாக்கும் முயற்சியில் திரு.பத்மநாதன் அவர்களினால் தேர்வு செய்யப்பட்ட உருத்திரகுமாரைப் புறக்கணிக்கட்டாம். இதை நான் சொல்லேல்ல. இது புலத்தில இப்ப குறுநிலமன்னர்களாக விளங்கும் தலைகளிடமிருந்தே வருகிறது.இன்னும் ஆயுதப்போராட்டம் செய்து தமிழீழ அரசை நிறுவுவோம் என்று இங்கிருந்து குரல் விடுவோரே ! இந்தக் கனவுகளையும் உங்கள் கற்பனைகளையும் போரால் பாதிக்கப்பட்டவர்களாலோ மற்றும் அந்த மக்களில் கரிசனையுள்ளோராலோ நினைத்தும்பார்க்க முடியாத ஒன்று என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

‘வணங்காமண் பேரீச்சம்பளத்துக்குப் போகுது‘ என்று சொன்னதுக்கு அடுத்து யேர்மனியிலயிருந்து வன்னிக்கப்பல் விடவுள்ள வன்னிரெக்கிலிருந்து சில நாட்களுக்கு முதல் ஒரு தொ(ல்)லைபேசி. அழைச்ச அண்ணாச்சி வன்னிரெக்கின் உசிர். (கேக்கப்படாது மற்றவை தாங்கிறதெல்லாம் என்னெண்டு) பென்சன் எடுத்திட்டு ஊருக்கு சமாதான காலத்தில் உலாத்துப்போட்டு வந்து தாயகம் , தேசியம் , சுயநிர்ணயம் என்றெல்லாம் ஊதின சங்கு இவர்.

சமாதானகாலம் வந்ததும் இவர்கள் கனவு கண்டது என்னெண்டா…., கெதியில தமிழீழம் வந்திடும் பென்சன் எடுத்திட்டு வன்னியில போய் புலிகளுக்கு ஆலோசகர்களாகவும் , அமைச்சர்களாகவும் , புனர்நிர்மாண நிறுவனர்களாகவும் ஆகலாம் என்றதுதான். அந்தக்கனவிலை அந்த மண்ணின் நிமிர்வு தியாகம் உழைப்பு எல்லாத்தையும் மண்மூடிப்புதைக்கும் வரை இந்த ஆலோசகர்கள் ஆங்கிலம் படித்த அதிமேதாவிகள் ஒருவரும் விஸ்கியில மூழ்கியிருந்த தலையை நிமித்தவேயில்லை. முள்ளிவாய்க்காலில் எங்கள் முதிசங்கள் உயிர்களை இழக்கும் வரை இவர்களுக்கு ஒண்டுமே தெரியேல்ல.

3தாசாப்தங்கள் தான் நேசித்த தலைவனைப் போராளிகளை இழந்த உண்மையை வெளியில் சொன்னார், விடுதலைப்புலிகளால் உலகத்துக்குத் தெரிவிக்கப்பட்ட பத்மநாதன் அவர்கள். எந்த மக்களுக்காகத் தங்களைக் கருக்கினார்களோ , தியாகங்களைச் செய்தார்களோ அந்த 30ஆயிரத்துக்கும் மேலான மாவீரர்களின் கனவெல்லாம் பொடியான உண்மையைச் சொன்னதற்காக இந்த ஆங்கிலம் படித்த மேதாவிகளாலேயும் இந்த மேதாவிகளின் குரல்களை நம்பிய அப்பாவிகளாலும் பத்மநாதன் துரோகியாக்கப்பட்டார். அத்துடன் முடியவில்லை துரோகப்பட்டம். அவரது செய்தியை வெளியிட்ட ஊடகர்களை , ஊடகங்களையெல்லாம் (குறிப்பாக ஜீ.ரீ.வி) ஒதுக்கும் முயற்சியிலும் இறங்கிவிட்டது இந்த இயலாத இயங்கிகள்.

இதுவரையான தவறுகள் தீமைகள் யாவையும் சீர்தூக்கிப்பார்த்து பத்மநாதன் அவர்களால் உருவாக்கப்பட்ட புறநிலை அரசில் இடம்பெற்றுள்ளவர்கள் வெறும் பொழுது போக்கிகள் போலத்தெரியவில்லை. எல்லோருமே பேராசிரியர்கள் கல்விமான்கள். ஆனால் இத்தகையதொரு கூட்டணியை இதுவரைகாலமும் வைக்கல்பட்டடையைக் கிழறிய சிங்கங்கள் சீறிக்கொண்டு எதிர்க்கின்றனர். இக்குழுவின் பொறுப்பை வகிக்கும் சட்டநிபுணர் உருத்திரகுமார் அவர்களை வேண்டியபடிக்கு விமர்சிக்கின்றனர். தொ(ல்)லைபேசியில் உருத்திரகுமார் பற்றி ஊதித்தள்ளியவர் சொன்னதிலிரந்து சிலவற்றைக் கீழே தருகிறேன்.

வணங்காமண்ணை பேரிச்சம்பளத்துக்குப் போகுதெண்டு நக்கலடிச்சிட்டியள். அதுகூடப்பறவாயில்ல அதை ஏற்பாடு செய்த முக்கியமான ஆக்களுக்கெல்லாம் எப்பிடி அனுப்புவீங்கள் ?(சிவனறிய அந்த முக்கியங்களை அந்த அண்ணாச்சி சொன்னாப்பிறகும் ஆரேண்டே அவையளை எனக்குத் தெரியாது) எங்களுக்குத் தெரியும் கப்பல் போகாதெண்டு ஆனால் நாங்கள் அனுப்பினனாங்கள். ஏனெண்டா எங்கடை பலத்தை உலகத்துக்கும் மகிந்தவுக்கும் காட்ட. கப்பல் போகுமெண்டு நீங்கள் நம்பினதுக்கு நாங்கள் பொறுப்பில்ல…. அங்கை வணங்கா மண்ணில வாற அரிசியைச் சாப்பிடச் சனம் இருக்கேல்ல. போராட்டமெண்டா இதெல்லாம் வரும்.

சரி எங்களைக் கிழிச்சியள். இப்ப உருத்திரகுமாரை என்ன செய்யப்போறியள் ? உருத்திரகுமார் தலைமை தாங்கினா தமிழன் இன்னும் முப்பது வருசம் உய்யமாட்டான். உருத்திரகுமார் இதுவரை சட்டநிபுணத்தால என்ன புண்ணாக்குப் புடுங்கினவர் ? அகதியளுக்கு கேஸ் செய்யிறவர். அவராலை எப்பிடித் தமிழீழப்புறநிலையரசை நிறுவ ஏலும் ? பத்மநாதன் துரோகி. ரண்டு துரோகியளின்ரை கையிலயும் தமிழன்ரை விதி நாறப்போகுது. அவரைவிடப்படிச்சவையள் எவ்வளவு பேர் இருக்கினம் எங்களுக்குள்ள (அவர்தன்னையும் படிச்ச லிஸ்டிலை சொல்றார்) அவையை ஏனுந்தப் பத்மநாதன் தெரிவு செய்யேல்ல ? (வெற்றிடங்கள் இன்னும் உள்ளதாக பத்தநாதன் உருத்திரகுமார் கூட்டமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களால் இயன்றவர்கள் இணையலாம்) நாங்கள் விடமாட்டோம். உவங்களை நாறடிப்போம். நான் எங்கடை பாதிரியாருக்குச் சொல்லீட்டன் உடனடியா அறிக்கைவிடச்சொல்லி. எங்களிட்டை ஆக்கள் இருக்கினம். எங்களுக்குச் சனத்திட்டைச் செல்வாக்கிருக்கு. உருத்திரகுமார் பேச்சுவார்த்தையளுக்குப் போய் பிரபாகரனோடை படமெடுத்தவுடனும் தலைவனாகலாமோ ? (இன்னும் தலைவர் என்ற வார்த்தையை விட்டு இறங்க முடியவில்லை. அந்தளவுக்கு எங்களுக்குள் நேசிக்கப்படும் தலைவன் மீதே பாயும் இந்தப் படித்தவர்கள் நிலமை இப்பிடியிருக்கு)
இந்தா யேர்மனிலயிருந்தும் கப்பல் விடப்போறொம். அதுகும் போகாதெண்டு தெரியும். ஆனா அனுப்பப்போறோம்.

இனி நான்,
ஆரந்த முக்கியமானவை ? முக்கியமெண்டா கொம்போ எனக்கவையள் ? உங்கடை குறுநிலமன்னர்களுக்குச் சொல்லி வையுங்கோ. உண்மைகள் கசக்கும் உறைப்பாச் சாப்பிடச் சொல்லி…நீங்கள் சாதாரணைமாய் உடைக்கவோ நாங்கள் காசு தந்தனாங்கள் ? நாங்கள் நம்பினோம். எங்கடை சனத்தைக் காக்குமெண்டு நம்பினோம்.

சரி உருத்திரகுமார் தகுதியில்லாத ஆள். பத்மநாதன் துரோகி. நீங்கள் தியாகியள் நடத்துங்கோவனண்ணை. அதுக்கு எங்களுக்கு அனுமதி வரேல்ல ? அது எங்கையிருந்தண்ணை வரும்? நாட்டிலையிருந்து வரும். எந்த நாட்டிலையிருந்தண்ணை வரும் ? உது குதர்க்கம். அண்ணாச்சிக்கு குருதியழுத்தம் கூடீட்டுது இந்த லூசோடை கதைச்சு., தொ(ல்)லைபேசி கட். இவர்களையெல்லாம் இன்னும் தலைவர்களாக வைத்துக் காரியம் செய்யாட்டி எல்லாரும் துரோகிகள் இவர்கள் பட்டியலில்.

இத்துடன் நிற்காமல் லண்டனில் ‘தமிழீழ மக்களவை ` என்ற ஒன்றையும் உருவாக்குவதாக அறிக்கைவிட்டு பற்றிமாகரன் (பெயருக்குப் பின்னால் தமிழிலும் ஆங்கிலத்திலும் கன பட்டங்களை வைச்ச நிமிரமுடியாமல் நிக்கிற மனிதனைப் பிடிச்சு ஆய்வும் செய்விச்சாச்சு) அவர்களை வைத்து அடுத்த குழப்பக்கூட்டணியை நிறுவுதற்கான பின்கதவு அலுவல்கள் அவசர அவசரமாக ஆரம்பித்து விட்டார்கள் இந்தப் படித்தவர்கள். பாவம் பற்றிமாகரன் அவர்கள் இந்த உசுப்பிகளின் உசுப்பலைக் கேட்டு “தமிழீழ மக்களவை” குறித்து ஒரு பார்வை. சூ.யோ.பற்றிமாகரன். என்று பார்வையும் பார்த்திட்டார்.இதை்தான் சொல்றது போல வைக்கல்பட்டடைநாய்க்குணமெண்டு…??????

ஊரேயில்லாமல் எங்கடை சனம் அகதி முகாமில அரியண்டங்களோடை வாழுதுகளெண்ட பெயரில சாக…., இன்னும் படிச்சவை பட்டதாரி அறிவாளியெண்டு மிஞ்சினதுகளுக்குப் பாற்சோறு குடுக்காட்டிலும் பறவாயில்லை. பாடைகட்டாமல் இருக்கமாட்டியளோ ? பால்குடுக்க இயலாமல் முகாம்களில் தாய்மார் தங்கள் குழந்தைகளை யாருக்கோவெல்லாம் கொடுக்கின்ற துயரம் தெரியுமா உங்களுக்கு ? இலையானுக்குள் அம்மையும் செங்கமாரியும் தோல்வியாதிகளும் வந்து சாகும் சனத்துக்கு பத்துச்சதம் செய்ய முடியாத உங்களால் “தமிழீழ மக்களவை“ உருவாக்கி என்ன மண்ணைப் புடுங்க முடியுமமெண்டு நினைக்கிறியள்?
போதும் விடுங்கோ. மிஞ்சின சனமாவது வாழட்டும். பத்மநாதன் உருத்திரகுமார் கூட்டணியின் செயற்பாடுகள் வெல்ல ஏதாவது சேந்து செய்ய முடிஞ்சா செய்யுங்கோ. கீரைக்கடைக்கு எதிர்க்கடை போட்டு நாறவைக்காதையுங்கோ தமிழரின் வாழ்வை. ஒரு கூட்டணிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து உயர்த்திவிடுங்கோ.

நீங்களெல்லாம் இதுவரையும் தமிழீழம் என்ற ஒரு தேச உருவாக்கத்துக்குத் தான் உழைச்சியளோ ? நடிச்சியளோ ? தெரியாது. உங்களால் முடியாததை யாரோ ஒருவர் செய்ய நினைக்கிறார். அதை முளையில் கிள்ளிவிடாமல் வளரவிடுங்கோ. உள்வீட்டுக் குழறுபடிகளால் ஒரு இனத்தின் வாழ்வை அழிக்காதையுங்கோ.

இதுவரைகாலம் புலிகள் மீது உலகம் தடைபோட்டதற்கான காரணங்கள் பல. ஆனாலும் புலிகள் என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டு ஒரு அரசியல் பாதையை தேர்ந்தெடுக்க முடியாது. காரணம் 30ஆயிரத்துக்கும் மேலான மாவீரர்களின் தியாகத்தையும் தமிழருக்கான ஓர் தேச உருவாக்கத்துக்கான பாதைகளையும் திறந்தவர்கள் விடுதலைப்புலிகள். உலகம் வெறுத்த அனைத்தையும் கைவிட்டு புலிகள் இப்போது அரசியல் வழியில் அடுத்த கட்டத்தை நகர்த்த இறுதிக்கள முனையில் இருந்து தலைமையினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பத்மநாதன் அவர்கள். விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை அதன் கட்டுமானத்தை நம்பிய அனைத்து மாவீார்களுக்காகவும் அந்தப்பெயரிலேயே அடுத்த அரசியல் விடிவு தமிழினத்துக்குக் கிடைக்க வேண்டும்.

இதுவரை காலமும் இருந்தது போலன்றி இப்போது இவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘புறநிலையரசு‘ ஏதோவொரு நம்பிக்கையைத் தருகிறது. அதை எப்படியும் குழப்பியே தீருவேன் என்று கங்கணம் கட்டி நிற்கும் அத்தனைபேரும் சிந்தியுங்கள். இந்தப் புறநிலையரசு எந்தளவு சாத்தியம் எதைச்செய்யும் என்பதை இப்போதைக்கு எதிர்வு கூறமுடியாவிட்டாலும் இவர்களது முயற்சியில் இதுவரையும் இல்லாத ஓர் பரந்துபட்ட செயலாக்கத்துக்கான வெளிச்சம் தெரிகிறது.

துரோகியென்ற சொல் அதிகபட்சம் ஒருவருக்கான தண்டனையான சொல். ஆனால் அதனை நீங்கள் உங்களைக் கேள்விகேட்போருக்கு , உண்மையைச் சொல்வோருக்கெல்லாம் கொடுத்து ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் நடுக்கடலில் தள்ளும் நிலைக்குள் தள்ளிவிடுகிறீர்கள். இதுவரைகாலம் சரியோ தவறோ தமிழீழவிடுதலையென்ற குரலுக்குப்பின்னால் நின்ற ஊடகங்கள் முதல் உள்ளவர்கள் எல்லோரையும் துரோகியாக்குவதில் எதைக் காணப்போகிறீர்கள் ? எல்லோரையும் இந்தியாட்டை விலைபோட்டினம் இலங்கையிட்டை விலைபோட்டினமெண்டு சொல்லிச் சொல்லியே மக்களைக் குழப்பாதீர்கள். நீங்கள் துரோகியாக்கிய யாரையும் எவரும் விலைக்கில்லை இலவசமாகவும் வாங்கமாட்டார்கள். இதையேன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் ? உங்கள் யார் மீதும் எனக்குக் காழ்ப்புமில்லை கசப்புமில்லை. திரும்பத் திரும்ப நீங்களும் ஏமாந்து உங்கள் பின் நிற்பவர்களையும் ஏமாற்றுகிறீர்கள். இதைத்தான் விட்டுவிட வேண்டும் இனியாவது ஒற்றுமைப்பட்டு அவலத்தில் சாகும் 3லட்டசம் பேரும் மீட்கப்பட வேண்டுமென்பதற்காகவே திரும்பத்திரும்ப உங்களைப் பற்றி எழுதப்படுகிறது.

இறுதியாக ,
உளவாளிகள் எப்போதும் நல்லவர்கள் வடிவத்தில் தான் உலவுவார்கள். அவர்கள் உங்களைப்போல எங்களைப்போல உளறித்திரியார்கள். புரிந்து கொள்ளுங்கள். உள்ள ஒரு அமைப்பைப்பலப்படுத்துவோம். ஆளுக்கொரு அவை நாளுக்கொரு அறிக்கைவிட்டு இனியும் எங்கள் இனத்தை ஏமாற்றாது இருப்போம்.
19.06.09

Wednesday, June 17, 2009

சயனைட்டைச் சாப்பிட்டிட்டான்.


இரவு விழுங்கிய அமைதியில் எல்லா ஜீவனும் உறங்கிக் கிடக்க எங்கோ தொலைவாய் நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. இடக்கையைப் பிடரிக்கும் , வலக்கையை நெற்றியுலுமாய் வைத்துக் கொண்டு படுத்திருந்தான்.

இரவின் கருமைக்குள் உறங்கிப் போகாது அந்த அறையின் இருளைத்தன் ஒளிக்கைகளால் துடைத்தபடியிருந்த சிமினி விளக்கினைப் பூச்சிக் கூட்டமொன்று சுற்றிக் கொண்டிருந்தது. அவற்றில் சில பூச்சிகள் சிமினியின் கண்ணாடியில் மோதி எரிந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த ஒளி விளக்கின் மீதான தன்பார்வையைத் திருப்பி நேரெதிரே பார்த்தான். அகிலன் எந்த அரவமுமின்றிக் கிடந்தான். அவனுக்குப் பக்கத்தில் அவனது அம்மா முளித்தபடிதானிருந்தாள்.

என்ன தம்பி நித்திரை வரேல்லயா ? கேட்டாள். இல்லையம்மா…அவங்கள் வருவாங்கள் போல கிடக்கம்மா….பின்கதவுப்பக்கத்தால் அவர்கள் வந்து போக அம்மா வைத்திருந்த பாதையைப் பார்த்தபடி சொன்னா….இல்லமோன நானிருக்குமட்டும் விமாட்டன்…..அம்மாவின் நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்குப் பிறகும்….. கைகளால் கழுத்திலிருந்த சைனைட் குப்பியை ஒற்றைக்கையால் தடவிப்பார்த்தான்.

அப்பா செத்துப்போட்டாராமடா…..செல்விழுந்து சிதறிப்போனாராம்….சின்னண்ணையைக் காணேல்லயாமடா….அம்மா தனிச்சுப்போனா…வலைஞர் மடத்தில பெரியம்மாவோடை இருக்கிறாவாம்…..எல்லாம் உங்கடை ஆக்களாலைதான்……நீயும் ஒருநாளைக்கு அனாதையாப் போப்போறாயடா....அப்பா நெடுகலும் கதைக்கேக்க பிள்ளை நீங்கள் நல்லாயிருங்கோண்டுதானடா சொல்லீற்றுப் போறவர்….கடைசியாக் கதைக்கேக்கயும் சொன்னவர் ஒரு முடிவு வரும் பிள்ளை எங்களைப் பற்றி யோசிக்கதையுங்கோண்டு சொல்லீற்றுப் போன மனிசன் இப்படிப் போட்டுதடா…. வெளிநாட்டிலிருக்கும் சின்னக்காவின் ஞாபகமும் அவள் அழுத அழுகையும் தான் அலைச்சுக் கொண்டிருந்தது.

கடைசியாய் வன்னியிலிருந்து அனுப்பப்பட்ட 75பேரில் இவன்தான் ஒரு வன்னிப்பொடியன். மற்றவவையள் எல்லாரும் கிழக்குமாகாணம். அந்தப்பயணத்தை விரும்பாமல் ஏற்றுக்கொண்டான். இடைக்கிடை போய்ப்பார்க்க கதைக்கவென அம்மாவும் அப்பாவும் அவனைத்தான் தேடுவார்கள் என்பது தெரிந்தும் சொல்லாமல் கொள்ளாமல் கட்டளையை ஏற்றுக்கொண்டு போய்ச் சேர்ந்தான்.

பழக்கப்படாத கிழக்குமாகாணம். இவனுக்கு அகிலனைத் தவிர இப்போது யாருமில்லை. கிழக்கின் காடுகளில் அந்த மரநிழல்களில் சுற்றித் திரிந்து 75பேரில் ஒவ்வொருத்தராய் திரும்பாமல் ஆமியிட்டைப்பிடிபட்டவனும் , சயனைட் சாப்பிட்டவனுமென எல்லாரும் ஏதோ வகையில் செத்துப் போனதும் சிறப்பு முகாம்களிலுமென இருக்க இவர்கள் இருவருமே தனித்துப் போனார்கள். அகிலன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தபடியால் இலகுவாய் அந்தக்காடுகளை அவன் துணையோடு சமாளிக்க முடிந்தது. அதுவும் இப்போ மாறி அவனது அம்மா யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுக்குள் இருவரையும் வைத்துக் கொண்டிருக்கிறாள். வன்னிக்காடுகள் போல இலகுவாய் ஒளித்துத் திரிந்து ஓட முடியாதபடி 6மாதம் கடந்த நிலையிலும் இடம் வலம் அறியவே சிரமப்பட்டான்.


தொலைவாய்க் கேட்ட வாகனஒலி முன்வீட்டு வாசலோடு அடங்கிவிட ஆட்கள் பரபரப்பாய் கதைப்பது கேட்கிறது. விளக்கை அணைத்துவிட்டு யன்னலை மெல்ல விலக்கி எட்டிப்பார்த்தாள் அகிலனின் அம்மா. யாரோ இறங்கி அவசரமாய் ஓடுவது தெரிந்தது. முற்றத்தில் படுத்திருந்த வீட்டுநாய் குரைக்கத் தொடங்கியது.

பேய்கள் வந்துவிட்டது போல் புலன்கள் உணர அவனைப் பார்த்தாள். அகிலன்….என வாயெடுத்து எழுப்புவதற்காக அவன் தோழருகே போன கைகளை ஒதுக்கிக் கொண்டாள். உறக்கம் மறந்து பலநாட்களின் பின்னர் இன்றுதான் அமைதியாக உறங்குகிறான். அது அவனையே மறந்த தூக்கமாய்த் தெரிந்தது அவளுக்கு. நாய்களின் குரைப்பு ஒயாமல் முன்வாசற்கதவை நோக்கி நெருங்க எரிந்து கொண்டிருந்த சிமினி விளக்கினை அணைத்து விட்டாள்.

நாய் குரைப்பில் தூக்கம் அறுபட....அம்மா என்றான் அகிலன். நானிஞ்சைதான் இருக்கிறன். சத்தம் போடாதை தம்பி…. இவனது இதய ம் இரட்டிப்பு வேகத்தில் அடித்துக் கொண்டிருந்தது. அம்மா பயத்தில் பதறுவதை உணர்ந்தவன்….அம்மா நான் குப்பி கடிக்கப்போறேன்….என்றான். தம்பி பொறுங்கோ… அவசரப்படாதையுங்கோ…..கைகளால் கவனமாய் பிடித்து வைத்திருந்தான் சயனைட் குப்பியை. கடைசியில் இதுதான் தன்னைக் காப்பாற்றும் என்ற முழுமையான நம்பிக்கையை இன்னும் கைவிடாமல் நம்பினான்.
நாயின் குரைப்பு ஓயாது தொடர நாயை நோக்கி யாரோ கற்களால் எறிந்தார்கள். எறியப்பட்ட கற்கள் கதவு சுவர்களில் விழுந்தன. நாய் பின்பக்கமாகக் குலைத்துக் கொண்டு ஓடியது.

டொக்.....டொக்......டொக்......முன்வாசற்கதவு தட்டப்படுகிறது. . காலன் வாசலில் வந்து அழைத்தாற் போல அவனுக்கும் அச்சத்தில் ஆவிபதறியது. டொக்.....டொக்......டொக்.......டொக்......மீண்டும் மீண்டும் வாசற்கதவு தட்டப்பட்டுக் கொண்டேயிருந்தது. அவங்கள்தான் வந்திட்டானுகள்.....நான் நினைச்சிட்டிருந்தது சரியாத்தானிருக்கு..... அம்மா முணுமுணுத்தாள். உள்ளிருந்து எந்து அசுமாத்தமுமில்லை.

கடந்த அரை மணிநேரமாக அந்த வாசலில் இருந்த பதட்டமும் , நாயின் குரைப்பும் மெல்ல மெல்ல அடங்குகிறது. இனி வரானுகள். சத்தமெல்லாம் குறைஞ்சிட்டுது. பயப்பிடாதையும் நாளைக்கு நாம எங்கையாவது போயிடுவம். நம்பிக்கையோடு சொன்னாள் அம்மா.


நிலம் வெளிக்க முதல் இவனும் அகிலனும் வெளியேறுவதெனத் தீர்மானமாகியது. அம்மா அவர்களுக்கு முன்னம் எழும்பி வெளிக்கிட்டு வந்தா. அம்மாவுக்குப் பின்னால் அவனும் அகிலனும் போனார்கள். ஊர் எல்லைக்குப் போனதும் அகிலன் சொன்னான். இனி நாங்க போவமம்மா நீங்க போங்கோ…..பின்னேரம் அந்தா அவடத்துக்கு வாங்கோம்மா என்றான். கவனம் சொன்னபடி அம்மா திரும்பிப் போனாள். அகிலனுக்குப் பின் அவன் போனான்.
இரவு பாதியில் அறுத்த தூக்கம் எங்காவது நிம்தியாய் விழுந்துபடுக்க வேணும் போலிருந்தது இருவருக்கும். அம்மா கொடுத்துவிட்ட மஞ்சி பிஸ்கெற்றை உடைத்தான் அகிலன். இருவரும் அதைப்பங்கிட்டுக் கொண்டார்கள். கொஞ்சத்துக்கு படுத்திட்டு உன்னை விடுறன்ரா என்று சொல்லியபடி… அகிலன் நிலத்தில் கொட்டியிருந்த இலைகள் நடுவில் படுத்தான். அதிகம் காடடென்று சொல்ல முடியாத அந்த நிழல்களின் இடுக்குகளால் வெளிச்சம் ஊறிக்கொண்டிருந்தது. ஏதோ சரசரத்தபடி வந்து நிலத்தில் வீழ்ந்தது. ஏதோவொரு சிறுவிலங்கு அது. இவனைத்தாண்டி ஓடியது.

நிப்பாட்டி வைத்திருந்த கைபேசியை எடுத்து இயங்கப் பண்ணினான். சின்னக்காவோடு கதைக்க வேணும்போலையிருந்தது. சின்னக்காவை அழைத்தான். சின்னத்தான் தான் ரெலிபோனை எடுத்தார். இவனென்றதும் அவளைக் கூப்பிட்டு விட்டார் சின்னத்தான்.
என்னடா எப்பிடியிருக்கிறா ? சின்னக்கா ஆரம்பித்தாள். என்னக்கா செய்தி ?. என்னத்தைச் சொல்ல ஆமீட்டைக் கனபேர் சரணடைஞ்சிட்டினமாமெண்டு இஞ்சை ரீவியளில காட்டிறாங்கள். சனம் முழுதும் வவுனியாவுக்கு போட்டுதுகளாம். வன்னியுக்கை எல்லாம் எரியுதாம். எங்கடை வீடுவாசல் சொந்த பந்தம் எல்லாம் அழிஞ்சிட்டுதுகளடா….ரீவியளைப் பாக்க சோறும் தின்னேலாமக் கிடக்கு….சின்னக்கா விக்கிவிக்கியழுதாள். அப்ப அம்மாவும் வவுனியாவுக்கை வந்திருப்பா என்ன ? என்றான். ஆருக்கும் தெரியும் என்றாள் அவள்.
நீயென்னடா செய்யப்போறா....? அதானக்கா தெரியேல்ல. நான் சொன்னனெல்லோ அகிலனெண்டு அவனும் நானுந்தான் இப்ப மிஞ்சியிருக்கிறம். அவன்ரை அம்மாதான் இப்ப உதவி. அவதான் முந்தநாள் ரவுணுக்குப் போய் ஒரு காட் வாங்கியந்து தந்தவ. செலவுக்கு வந்த காசுத் தொடர்புகளுமில்லாமப் போட்டுது. போன கிழமை பிடிபட்ட பொடியனிட்டை இந்த நம்பரை ஆமியெடுத்திட்டுத் தொல்லை பண்ணாங்கள். தங்களிட்டை வரச்சொல்றாங்கள். அகிலன் இருக்கிற வரைக்கும் இருப்பன் இல்லாட்டி பாப்பம். என்ரை ரெலிபோன் வராட்டி நானில்லையெண்டு நினையக்கா. ஏன்ரா அப்பிடிச் சொல்றா ? சின்னக்கா அழுது கொண்டு கேட்டாள். அதற்கான பதில் இப்போதைக்குத் தெரியவில்லை. தொடர்பைத் துண்டித்துக் கொண்டான்.

இவன் 18வயதில் வீட்டை சொல்லாமல் காணாமல் போய்விட இவனைத்தேடித் தேடி ஒவ்வொரு இடமாய் அலைந்தவள் சின்னக்கா. ஊரிலுள்ள கோவில்களுக்கெல்லாம் நேத்தி வைச்சு இவனை எதிர்பார்த்தவள். ஒரு இரவு தோழர்களுடன் அம்மாவையும் சின்னக்காவையும் ஆச்சரியப்படுத்தினான்.

ஏன்ரா எங்களை ஏமாத்தீட்டுப்போனனீ…எனக் கேட்டு அழுதாள் சின்னக்கா. அவனது தோழர்களும் அவனுமாக 5நாள் நின்று கதைச்சுச் சிரிச்சு சாப்பிட்டு மகிழ்ந்து போய்…..பூனகரியில் சென்றியிலிருந்த போது இவனும் சென்றியில் நின்றவர்களும் அறியாமல் ஆமி இவர்களைச் சுற்றி வளைத்த போது சயனைட்டை நம்பியே 7சென்றிப் பொடியளும் இருந்தார்கள்.

தம்பியவை அவசரப்படைதையுங்கோ…..நாங்கள் அடிச்சுக் கொண்டிருக்கிறோம்….என்று தளபதியொருவரின் குரலும் அந்தப் படையணியின் மீதான நம்பிக்கையும் 3நாட்களை அந்தப் பதுங்குகுழிக்குள் கழித்து மீளவும் உயிர் பிழைத்துத் திரும்பிய போது 1மாத லீவு கொடுத்துப் பொறுப்பாளர் வீட்டையனுப்பினார்.

சின்னக்கா ஒரே இவனைத்தான் சுற்றிக் கொண்டிருந்தாள். அப்பிடியே அவன் விலகுவதற்கான கடிதம் எழுதும் வரையும் சின்னக்கா அவனைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். லீவு முடிந்து போனவன் தான் விலகப்போகும் விருப்பத்தைப் பொறுப்பாளருக்கத் தெரிவித்தான்.

என்னடாப்பா பூனகரியோடை பயந்திட்டியோ…..என்றார் பொறுப்பாளர். இல்லையண்ணை அவசரமெண்டாக் கூப்பிடுங்கோ வாறன் என்றான். தண்டனையின்றி வீட்டுக்குப் போக அனுமதியும் கிடைத்து வீட்டுக்கு அவன் போக சின்னக்காவுக்கு வெளிநாட்டு மாப்பிளை சரிவந்ததது சின்னக்காவுக்கு. அவனுக்கு விருப்பமான சின்னக்கா ஊரையும் அவனையும் விட்டு வெளிநாடு போனாள். நான் போய் உன்னைக் கூப்பிடுவன் என்று சொல்லிப் போனாள். அவளது பிரிவு தாங்க முடியாமல் அம்மாவிடம் கூடப்பலதரம் திட்டுவாங்கியிருக்கிறான். நீயெங்களை விட்டிட்டுப்போகேக்க நாங்கள் எவ்வளவடா துடிச்சனாங்கள்…..என அவனது அலட்டலை அடக்கிவிடுவாள் அம்மா.

நிலமை இறுகி அவன் திரும்பவும் அழைக்கப்பட்ட போது அம்மாவும் அப்பாவும் தடுத்ததையும் கேக்காமல் வீட்டுக்கு ஒராளெண்டாலும் போக வேணுமம்மா. சொல்லித்தான் போனான். போய்ச் சிலமாதங்களில் கிழக்கிற்கு அனுப்பப்பட்டான். அதன் பின்னான மாற்றங்கள் அவனால் அவனது தோழர்களால் நினைத்தும் பார்க்க முடியாதவையாக எல்லாம் ஏதோ கனவுபோல மாறியது.

அம்மாவை வரச்சொன்ன நேரம் நெருங்கிவதை அகிலனுக்குச் சொன்னான். அகிலன் தனியே போயிட்டு வாறனெண்டு சொல்லிக் கொண்டு வெளிக்கிட்டான். சேகுவராவின் புத்தகத்தை வெளியில் எடுத்து வாசிக்கத் தொடங்கினான். இயக்கத்துக்குப் போன புதிதில் வாசித்த புத்தகம் நேற்று அகிலனின் அம்மாவிடமிருந்து வாங்கிக் கொண்டான். மனசை அரிக்கும் விடயங்களை மறக்க புத்தகத்தில் மூழ்கினான். சேகுவராவின் வாழ்க்கையை வாசிக்க வாசிக்க மீண்டும் மனம் ஏதோவெல்லாம் உணர்வுகளால் நிறைந்தது.

போன அகிலன் வந்து சேர்ந்தான். அம்மா குடுத்த சோற்றை அவனுக்கு முன் வைத்துவிட்டுச் சொன்னான். நீயில்லாட்டி நான் செத்துப் போயிடுவன்ரா. அம்மா கனக்க யோசிக்கிறா. நாங்களினித் தனிச்சு என்னத்தைச் செய்யப்போறம்….பேசாமல் குப்பிடியைக் கடிக்கலாம் போலையிருக்கு என்றான் அகிலன்….இவன் பதில் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தான்.

இருளத் துவங்கியது. அம்மா ஊரின் எல்லையில் இவர்களுக்காகக் காத்திருந்தாள். மாற்றங்களை அவதானித்தபடி இருவரும் அம்மாவைத் தேடினார்கள். அம்மா தலையில் ஏதோ பாரத்தோடு நின்றிருந்தாள். அம்மாவுக்குப் பக்கத்தில் 3பேர். இவர்களுடன் ஒன்றாய் வன்னியிலிருந்து கிழக்கிற்கு வந்தவர்கள். கிட்டடியில் பிடிபட்டு மகசீன் சிறையில் என்று ஊரில் யாரோ சொன்னதான அம்மா தான் சொன்னது ஞாபகம் வந்தது.

இவன் யோசிப்பதற்கிடையில் அகிலன் சொன்னான். அவங்கள் பிடிபடேல்லயாம். எங்கெயோ மாட்டுப்பட்டு நிண்டவங்களாம். உன்னையும் என்னையும் தேடித்தான் அம்மாட்டை வந்தவங்களெண்டு அப்போதை அம்மா சொன்னவா.

இன்று இரவு அகிலனின் பெரியப்பா வீட்டில்தான் தங்குவதாகச் சொன்னான் அகிலன். அகிலனின் பெரியப்பா வீட்டிலிருந்து 3பிள்ளைகளை நாட்டுக்காகக் குடுத்தவர். அவருக்கெண்டிருந்த 3பேரும் இப்ப இல்லை. பெரியப்பாவும் பெரியம்மாவும் தான் இருக்கினம். ஆனா பெரியம்மாக்கு மூளை பிசகீட்டுது பிள்ளையளை இழந்தாப்பிறகு…அகிலன் பெரியப்பா குடும்பம் பற்றிச் சொல்லிக் கொண்டு போனான்.

வானொலியில் செய்தி போய்க் கொண்டிருந்தது. 9ஆயிரம் வரையில் போராளிகள் சரணடைந்துள்ளதாகவும் பலநூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அவன் கனவு கண்ட எல்லாம் உடைந்து சிதிலமாகிக் கொண்டிருந்தது. அவர்களுடன் எதையும் கதைக்கப் பிடிக்கவில்லை. எப்பிடி நடந்தது ? என்ன நடந்தது ? எல்லாம் மர்மமாக….பாய் விரிக்காமல் தரையிலே படுக்கப்போவதாகச் சொல்லிக் கொண்டு தரையில் சரிந்தான்.

சின்னக்கா ஞாபகத்துக்குள் நின்றாள். அவள் வாழும் நாட்டில் இப்போ நேரம் இரவு 3மணியாகியிருக்கும். அவளுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினான். சின்னக்கா அந்தத் தகவல் பார்த்து உடைந்து போவாள். ஓவென்று உரக்கக் கத்துவாள். தனது பிறக்கப்போகும் குழுந்தையைக் கூட நினைக்காமல் இவனுக்காக அழுவாள் என்பதுவரை எல்லாம் புரிந்தவன் தான். ஆனால் அவனால் எதையும் யோசிக்க முடியவில்லை.

எப்போதுமே தன்னைக் காக்குமென்று நம்பிய குப்பியை வாயினுள் மென்று கொண்டான். படுமுட்டாளென ஒரு சுயநலம் மிக்கவனென நாளை அகிலனும் அல்லது அவனது நண்பர்களும் திட்டலாம்….இவனுக்காக அழலாம்…..நாளை இவர்களும் சரணடைதல் என்ற நிலை வந்து சின்னக்கா ஒரு நாள் சொன்னது போல் சித்திரவதைபடுவதில் பிரியமில்லை இவனுக்கு.

அவனது கடைசித்துளிகள் அவனை விட்டுப் போய்க் கொண்டிருந்தது. அம்மா அப்பா சின்னக்கா சின்னண்ணா பெரியக்கா ஆசையைக்கா மாமா மாமி மருமக்கள் என உறவுகள் எல்லாம் அந்தக்கணங்களில் அவன் முன்னால் நிற்பது போலவும்…அவனுக்காக அழுவது போலவுமிருந்தது…அவனது கடைசித்துளி கரைந்து அவன் நிரந்தரமாக உறங்கிவிட்டான்.
17.06.09