Saturday, November 5, 2011

ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம்

அன்புள்ள அக்கா, **** அக்காவை அறிஞ்சிருப்பியள். அவாவும் ஒரு எழுத்தாளர். மகளீர் அமைப்பு வெளியிட்ட வெளியீடுகள் ஈழநாதம் புலிகளின் குரலில எல்லாம் அவாடை எழுத்துகள் வந்திருக்கு. தடுப்பிலயிருந்து இப்ப விடுதலையாகி வந்திருக்கிறா. குடும்பம் சரியான கஸ்ரம். பாவம் மேலும் 2தங்கச்சியவை இருக்குதுகள். இவாக்கு 37வயதாகீட்டுது. வெளிநாட்டு மாப்பிளைமார் ஆருக்கேன் கலியாணம் பேசி அவவுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்க வேணும். ஏதாவது ஒரு வழி செய்யுங்கோக்கா.
அன்புடன்
****

இதென்னடா அநியாயம் விழுந்தது….? நானென்ன கலியாணப் புறோக்கரெண்டு நினைச்சிட்டாங்களோ ? மனிசில சின்னக் கோவமும் வந்தது.
இந்த நாலுவரிக்கடிதத்தை எழுதினவனும் ஒரு காலத்தில ஒரு போராளி. பிறகு எழுத்தாளன். இப்பவும் எழுத்தாளன் தான். ஆனால் எழுதிற எழுத்துக்கெல்லாம் வேண்டுறது திட்டுத்தான். எல்லாரும் திட்டத்திட்ட எழுதிக் கொண்டு தன்னோடை வாழ்ந்த தனக்குத் தெரிஞ்ச முன்னாள் போராளியளுக்கு தன்னாலை முடிஞ்ச உதவியளைச் செய்து கொண்டுதானிருக்கிறான்.

வெளிநாடுகளில தனக்குத் தெரிஞ்சவையளிட்டை கேட்டு உதவிகளை ஒழுங்கு செய்து குடுக்கிறான். இடைக்கிடை இப்படியான கலியாணத்தரகர் வேலையும் (இலவசதரகர்) செய்யிறான்.

அவன் தந்த அந்த நாலுவரி விளக்கத்திற்கு பிறகு மேலும் பெரிய பந்திக்கடிதப் பரிமாற்றம் ஈமெயிலில் நடத்தி அந்தப் பெண்போராளியின்ரை படம் சாதகம் எல்லாம் வந்து சேர்ந்தது ஈமெயில. அந்தப்படம் வந்தாப்பிறகு சரியான கவலையாயிருந்திச்சு.

ஒருகாலம் அவள் தனது சொந்தமென்ற எல்லாத்தையும் நாட்டுக்கெண்டு குடுத்து கிட்டத்தட்ட 20வருசம் போராளியா இருந்தவள். அப்பவே எங்கினையும் ஒரு கலியாணத்தை கட்டி தானும் வெளிநாடு குடும்பம் குழந்தையள் நோகாத அரசியலெண்டு கதைச்சு எழுதிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அதையெல்லாத்தையும் விட்டிட்டு இலட்சியமும் கொள்கையும் சுமந்து மே 17 , 2009 வரையும் கொள்கைக்காகவே வாழ்ந்து கடைசியில குப்பி கடிக்கவும் மனமில்லாமல் சரணடைஞ்சாள்.

சரணடைஞ்சு அனுபவிச்ச நரகங்களையும் துயரங்களையும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கூட கோடிமுறை அழுதிருப்பாள். ஆனால் அதையும் தாண்டி விடுதலையாகி வெளியல வந்தாப்பிறகுதான் அவளுக்கு தான் தனிச்சுப்போனாளெண்டு உணர்வு உறைச்சது.

பெண்போராளிகள் பற்றி உலகத் தமிழினம் கட்டி வைச்சிருந்த கோட்டையில இசைபாடிக்கொண்டிருந்த பெண்போராளிகளின் வாழ்க்கை ஒரு நேரச்சோற்றுக்கே இறைஞ்சுகிற நிலமையில இருக்கிற துயரத்தை அவளும் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறாள். இப்ப அவளுக்கு அம்மா அப்பா தங்கைச்சிமாரின் கண்ணீரும் வலியும் வலிக்கத் தொடங்கியிருக்கிறது.

போற்றிப்பாடப்பட்ட பெண்போராளிகள் ஒவ்வொருவரும் படுகிற அவலங்களையெல்லாம் சோற்றோடும் சுதந்திரத்தோடு முடிச்சுப் போட்டு கவுரவச்சாவு சாக நிர்ப்பந்திக்கிற அனைவர் மீதும் அவளுக்கு கோபமாய் வந்தது.

அவளைச் சமாதான காலத்தில் சந்தித்த எத்தனையோ புலம்பெயர் கவுரவர்கள் எவரும் தன்னையோ தன்போன்றவர்களை ஏனெண்டும் திரும்பிப்பாக்காமல் விட்டிருப்பது பற்றிச் சரியான கடுப்பு. அதுக்குப்பிறகுதான் முடிவெடுத்தாள் தானும் திருமணம் செய்து கொள்ளுவமெண்டு. இனவிடுதலைக்காக தன்னையே 20வருடங்கள் இரைகொடுத்தவள் இனிமேல் தனக்கும் ஒருதுணை வேணுமெண்டு முடிவெடுத்திருக்கிறாள். தனது விருப்பத்தை அவளுக்கு மாப்பிளை தேடுகிற தனது போராளி நண்பனிடம் தெரிவித்திருக்கிறாள். அவனும் இப்போ அவளுக்காக புறோக்கராகி……..! என்னையும் புறோக்கராக்கி……!

அவன் தந்த அவளது விபரங்களை பரிசிலிருக்கிற ஒரு இலவச புறோக்கரிடம் ஈமெயிலில அனுப்பி 3வாரத்தில் அந்த புறோக்கர் தொடர்பு கொண்டார்.
தங்கைச்சி நீங்கள் தந்த பிள்ளையின்ரை குறிப்புக்கு நல்லதொரு பொருத்தமான பொடியன் கிடைச்சிருக்கிறான். பொடியனுக்கு படமும் பிடிச்சிருக்கு. மேற்கொண்டு விசயங்களை கதைக்க வேணும் என்றார்.

அவளுக்கு வெள்ளி திசையடிச்சுவிட்டது போலத்தானிருந்தது. இலவச புறோக்கர் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் அணுகுண்டைப் போட்டார்.
பொடியன் ஏற்கனவே கலியாணம் முடிச்சு 4பிள்ளையள். ஆனா டிவோஸ். வயது 48. ஆனால் வயது தெரியாத தோற்றம். கொஞ்சம் தண்ணிச்சாமி. மற்றது தெரியும்தான இயக்கத்தில இருந்த பெட்டையளெண்டா கனக்க கேள்வியள் கேப்பினம். ஆனால் இவன் அப்பிடியெல்லாம் கேக்கேல்ல. மற்றது பொடியன் வேதம். அதுமட்டும் தான் குறை. ஆனால் பிள்ளை மதம்மாறாமல் கலியாணம் கட்ட அவை தடையில்லையாம்.

அண்ணை அவளைவிட 11வயது ஆளுக்குகூடிப்போச்சு உது சரிவராது நீங்கள் வேறையாரும் சரிவந்தா சொல்லுங்கோ….இந்தப்பதிலை அவர் எதிர்பார்க்கேல்ல போல…..திருப்பிச் சொன்னார்…..தங்கைச்சி வயதென்ன பெரிய பிரச்சனை மனம்தானே முக்கியம்.

வயது போகட்டும் ஏற்கனவே மணமுறிவு மாப்பிளை தண்ணிச்சாமிதான் இடியெண்டதை அம்மாளறிய நான் சொல்லேல்ல. அவர் அந்த மாப்பிளை பற்றி அதிகமாக பில்டப் போட்டுக் கொண்டு போனார். உது சரிவராதண்ணை விடுங்கோ. அவை வேதக்காறரெண்டா சம்மதிக்காயினம்…..கடைசிக் கடத்தலாக மதத்தை காரணம் சொல்லி அவரைத் துண்டித்துக் கொள்கிறேன்.

4கிழமை முடிஞ்ச பிறகு அவளது போராளி நண்பன் முகப்புத்தகத்தில் வந்திருந்தான்.
அக்கா **** விசயம் ஏதும் சரிவந்ததோ ?
தம்பி ஒண்டும் சரிவரேல்ல. ஆனா ஒண்டு வந்தது. ஏற்கனவே கலியாணம் கட்டி பிரிஞ்சிருக்கிறார். வயது11 கூட.

ரெண்டாந்தாரமெண்டாலும் பறவாயில்லையக்கா பாருங்கோ. அவள் எதெண்டாலும் வாழ ஒரு வழி கிடைச்சாப் போதுமெண்ட நிலமையில இருக்கிறாள். வயது வித்தியாசம் , ரண்டாந்தாரம் பெரிய பிரச்சனையில்லையெண்டு நினைக்கிறேன்…..என்றான் அவன்.

அவனுக்கு பதில் எழுதாமல் முகப்புத்தகத்தை விட்டு வெளியேறினேன். எனக்கு உச்சந்தலையில உளியாலை குத்தினமாதிரியிருந்திச்சு. பெண்விடுதலை பெண்களின் மாற்றம் புரட்சியென்று எழுதியவள். களங்களில் கனவுகளோடும் இலட்சியத்தோடும் கனரகத்துப்பாக்கியோடும் திரிந்தவள். இன்று ரண்டாந்தாரமும் பறவாயில்லையென்ற நிலமைக்கு எப்படி வந்தாள்……..?

இதைவிடவும் இவையள் தங்களை முன்னாள் போராளியளெண்டு சொல்லாமலிருக்கலாம்….யாருக்கோ விலபோட்டா….அத்தியடிக் குத்தியரின்ரை ஆளாயிருக்கலாம்…..அல்லது அரச புலனாய்வா இருக்கலாம்…..உவையெல்லாம் பெண்போராளியள்…சீ….தூ….

அவள் பற்றிய கதையைச் சொல்ல நினைக்கிற என்னை நோக்கி….,

புலம்பெயர் தாயக விரும்பிகள் விடுலையுணர்வாளர்கள் புலத்திலிருந்து களம்காணும் புலப்போராளிகள் யாவரும் என் மூஞ்சியில் துப்பிக் கொண்டிருப்பது போல கனவு காணத்தொடங்குகிறேன்.

01.11.2011