Saturday, May 5, 2012

முன்னாள் போராளிகளின் தற்கொலைகள் காரணம் நாங்களா ?


நேற்று (04.05.2012) பொலிகண்டியைச் சேர்ந்த 38வயதான சுகந்தி சிவலிங்கம் என்ற முன்னாள் பெண்போராளியின் தற்கொலை பற்றிய செய்தி இந்த நிடமிடம் வரை சூடு தணியாமல் நமது செய்திகளில் நிற்கிறது.

இந்தப் போராளியின் தற்கொலைக்கான இரங்கல்கள் , வீரவணக்கங்கள் , இவற்றையும் தாண்டிய அரசியல் சிந்தனைகள் என சுகந்தியின் மரணம் பல்வேறு வகையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இனிவரும் சிலநாட்களில் சுகந்தியின் தற்கொலை பற்றிய தமிழ் ஊடகப்புலனாய்வு பரபரப்புச் செய்திகளும் வரும். இன்னும் சில வாரங்களில் சுகந்தியென்ற ஒருத்தியையும் மறந்துவிடுவோம்.

எத்தனையோ மரணங்கள் மனித வலிகள் தந்த தந்துகொண்டிருக்கிற துயரங்களோடு ஒன்றாய் சுகந்தியின் சாவைத் தாண்டிப்போக முடியாது அவள் கண்ணுக்குள் நிற்கிறாள். சுகந்தியுடன் தொடர்பில் இருந்தவர்களிடமிருந்து இன்று கிடைத்த தகவல்...,

கடந்த சிலநாட்களாக புதிதாக போடப்பட்ட புண்ணால் வேதனைப்பட்டிருக்கிறாள் சுகந்தி. புண்ணால் ஏற்பட்ட வேதனைக்கு மருத்துவத்திற்கு போக கையில் பணமில்லாத கொடுமை. குடும்ப வறுமை உறவுகளால் கூடச் சரியாகக் கவனிக்க இயலாத நிலமையில் ஏற்பட்ட மனவெறுப்பினாலுமே சுகந்தி தன்னைத் தீமூட்டியெரிக்கத் தூண்டியிருக்கிறது.

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கை முழுவதும் மருந்தோடு வாழவேண்டிய துர்ப்பாக்கியம். இவர்களை பராமரிக்க தனியாக ஒருவர் தேவை. இவர்களுக்கு படுக்கைப்புண் இலகுவில் வரும். புண்ணிலிருந்து வருகிற மணத்தை தாங்கி அவர்களை பராமரிப்பதற்கென்றே பொறுமையும் கருணையும் உள்ளவர்கள் வேண்டும். மலசலம் கழிப்பதே இவர்கள் உணரமாட்டார்கள். தொடர்ந்து படுக்கையில் அல்லது கதிரைக்குள்தான் இவர்களது காலம் போகும்.

ஆனால் இவர்கள் உருவத்தில் மாற்றம் ஏதுமின்றி இருப்பார்கள். இவர்களுக்கான மருத்துவ தேவையே மிகப்பெரிய செலவு. சுகந்திபோன்ற பலர் வருடக்கணக்காக 2,3வருடங்களும் மருத்துவமனையில் இருந்த இருக்கிற சம்பவங்களும் நிறைய இருக்கிறது.

சுகந்தி முதல் அறிமுகமானது2010ம் ஆண்டு தொடக்கம்.
பாதுகாப்பமைச்சின் நேரடிக்கண்காணிப்பில் இருந்த வவுனியா பம்பைமடு ஆயுர்வேத மருத்துவமனையில் இருந்த 60இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளையும் ஆளுகு என்ற நெதர்லாந்து நாட்டு நிறுவனம் பராமரித்து வந்தது. காரணமின்றி வெளியார் யாரும் அனுமதிக்கப்படாத இறுக்கம் நிலவிய காலம் அது. குறித்த சில நிறுவனங்கள் மட்டும் உள்ளே சென்றுவரக்கூடிய அனுமதியே இருந்தது. அத்தகைய கட்டுப்பாடுகள் போடப்பட்ட மருத்துவமனையில் மருத்துவம் பெற்ற முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 60ற்கும் மேற்பட்டவர்களோடு சுகந்தியும் ஒருத்தியாக மருத்துவம் பெற்றுக் கொண்டிருந்தாள்.

இடுப்பின் கீழ் உணர்விழந்த ஒரு போராளியைத் தேட அனுப்பிய எமது தொடர்பாளர் ஒருவர் சுகந்தியையும் சந்தித்து வந்து தந்த அறிக்கையே பம்பைமடு என்றொரு மருத்துவமனையில் இடுப்பின் கீழ் நெஞ்சின் கீழ் கழுத்தின் கீழ் உணர்விழந்த முன்னாள் போராளிகள் பலர் வாழ்கிறார்கள் என்பது தெரிய வந்தது. அந்த நேரம் இவ்விடயம் பற்றி த.தே.கூ.பா.உறுப்பினர்களுக்குத் தெரிவித்தோம். அவர்களைச் சென்று பார்வையிடுமாறும் வேண்டினோம். ஆயினும் அறிக்கைகளை அள்ளித்தெளித்த தேசிய உணர்வு செறிந்த எந்த பாராளுமன்ற உறுப்பினரும் அந்த மருத்துவமனைக்குப் போக மறுத்துவிட்டார்கள்.

கவிரித்த அரசியல்வாதிகளை விட்டுவிட்டு இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் முடிந்தளவு செய்ய விரும்பி கருணையாளர்களிடம் உதவி கோரியிருந்தோம்.  தம்மால் முடிந்த சிறுசிறு உதவிகளைச் செய்த கருணையாளர்களின் உதவிகளை நாமும் மேற்கொண்டோம்.

அந்த நாளில் சுகந்தியும் தனக்காகவும் உதவி கோரியிருந்தாள். மாதம் இருமுறை அங்கு சென்றுவர காரணங்களை உருவாக்கிய எமது தொடர்பாளர் சுகந்தியையும் சுகந்திபோன்ற பலரையும் சந்தித்து அவர்களுக்காக நேசக்கரம் அனுப்புகிறவற்றையும் வழங்கி மனசால் உடைந்து வாழ்வே வெறுத்த பலருக்கான உளவலுவையும் கொடுத்துக் கொண்டு திரும்புவார். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் துயரங்களைக் கொட்டியனுப்பும் குரல்களை தொலைபேசி மூலம் வந்து சேரும்.  உதவி கட்டாயம் தேவைப்படுவோரை தரம்பிரித்து குறித்த ஒரு சிறுதொகை போராளிகளுக்கான மாதாந்த உதவிகள் ஒழுங்கு செய்யப்பட்டு அவை அவர்களுக்குப் போய்க்கொண்டிருந்தது.

யாரும் உட்செல்ல முடியாத நிலமை மாறி 2010 நடுப்பகுதியில் யாரும் சென்றுவரக்கூடிய நிலமை வந்தது. அந்நேரம் வவுனியாவுக்குள் வாழ்கிற தமிழ் அரசியல்வாதி ஒருவர் திடீர்பயணமொன்றை மேற்கொண்டார். வாக்குறதிகளை அள்ளி வழங்கினார். இதோ உதவிகள் தருகிறேன் என நம்பிக்கையையும் கொடுத்தார்.  அந்த அரசியல்வாதியின் பயணத்தால் அதுவரை கிடைத்த சிறு உதவிகளையும் பலர் இழந்து போன துயரம் நிகழ்ந்தது. அதுபற்றிய அப்போதைய நிலமையை வாசிக்க கீழ் வரும் இணைப்பில் அழுத்தி பார்வையிடலாம்.
ஆளுகு நிறுவனம் தனது பணிகளை முடித்துக் கொண்டு வெளியேறப்போவதாக அறிவிக்கப்பட்டதோடு பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலையில் மருத்துவம் பெற்ற பல முன்னாள் போராளிகள் வௌ;வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள். வீடுகளுக்குச் செல்லக்கூடியவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். வீடுகளுக்குச் சென்றவர்கள் வரிசையில் சுகந்தியும் வீடு சென்றாள். புலம்பெயர் கருணையாளர்களால் வழங்கப்பட்டு வந்த சிறு கொடுப்பனவினை சுகந்தியும் பெற்றுக் கொண்டு வந்தாள். அத்தோடு அவளுடனான தொடர்புகளும் விடுபட்டுப்போனது.

4மாதங்கள் முன்னால் இடுப்பின் கீழ் உணர்விழந்த முன்னாள் போராளியொருவன் தொடர்பு கொண்டான். அக்கா எங்களுக்குக் கிடைச்ச உதவியள் எல்லாம் நிண்டு போச்சு....ஏதாவது செய்யுங்கோ என வேண்டினான். சிலரது விபரங்களையும் தந்தான். 

அவன் தந்த விபரங்களில் சிலருக்கான உதவிகள் ஒழுங்கு செய்யப்பட்டு அவை போய்க் கொண்டிருக்கிறது. சிலருக்கு உதவிய புலம்பெயர் உறவுகள் அவர்களைக் கைவிட்டுள்ளனர். காரணம் சில அரசியல்வாதிகள் இந்தப்பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு கடித உறைகளில் 5ஆயிரம் 10ஆயிரம் என ஒரு முறை கொடுத்துவிட்டு அவர்களது படங்கள் பெயர் விபரங்களை இணையங்களில் வெளியிட்டு தாம் உதவியுள்ளோம் என்ற செய்திகளைப் போட்டுவிடுகின்றனர்.

இவற்றைப் பார்வையிடும் உறவுகள் தாம் உதவிகள் கிடைக்கிறவர்களுக்கு வீணாக தொடர்ந்து உதவுகிறோம் என நினைத்து விடுகிறார்கள். அரசியல்வாதிகளால் ஒரிருமுறை வழங்கப்படும் 5ஆயிரம் 10ஆயிரம் நிரந்தரமானதில்லை என்பதனை பலர் புரிந்து கொள்ளவதில்லை.
பாதிக்கப்பட்டவர்களை சந்தேகிக்கின்றனர். இதனால் பல போராளிகளை தங்கள் கேள்வி விசாரணைகளால் மனவுளைச்சலுக்கும் ஆளாக்கியிருக்கின்றனர். இந்த விசாரணைகளின் குடைச்சல் தொல்லை தாங்காமல் உதவியே வேண்டாம் ஆளைவிடு சாமியென்று பலர் செத்தாலும் பறவாயில்லையென்ற நிலமையில் இருக்கிறார்கள்.

எப்படியேனும் உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற அவாவில் எவர் கேட்டாலும் உதவுகிறோம் என்றாலும் தங்கள் விபரங்களை கொடுக்கிறார்கள். ஆனால் பலர் உதவிகள் கிடைக்காமல் ஏமாந்து போயிருக்கிறார்கள்.
ஆயினும் தாங்களும் வாழ வேண்டுமென்று கனவுகாண்கிற ஆயிரமாயிரம் போராளிகள் புலம்பெயர் தமிழர்கள் தங்களைக் காக்க கைதூக்கிவிடமாட்டார்களா என எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் நாமோ சிறையில் இருக்கிறவர்களுக்குச் சோறு கொடுப்பது தீர்வாகாது விடுதலைக்கான தீர்வு வேணுமென்று தத்துவம் உரைக்கிறோம். தத்துவங்களையும் ஆலோசனைகளையும் அள்ளிவழங்குகிற நாங்கள் கொலைக்களத்தில் இல்லை. நல்ல பாதுகாப்பு நிம்மதியாய் உறங்க வசதி வாழ்வுரிமை எல்லாவற்றோடும் வாழ்கிறோம். ஆக நாம் விடுமுறைகாலம் தாயகம் காணவே தீர்வைக் கேட்கிறோம்.

நாங்கள் காணும் கனவு நனவாக நமக்காக வாழ்ந்தவர்களும் அவர்களது சந்ததியும் வறுமையிலிருந்து மீள வேண்டும். அவர்களது குழந்தைகள் சிறந்த கல்வியறிவைப்பெற வேண்டும். எங்களுக்காக கடந்த 30வருடம் போராடி நொந்து வாழ்விழந்து போயிருக்கிற சந்ததியே திரும்பவும் எங்கள் விருப்புகளை நிறைவேற்ற கடாக்களாக வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். ஆனால் அவர்களுக்கான வாழ்வைக் கொடுக்க எங்கள் பொருளாதாரத்தை வழங்குவதில் ஆயிரம் சந்தேகங்கள் கேள்விகள் கேட்கிறோம்...?

எத்தனையோ பெண்போராளி அம்மாக்கள் 50ரூபாவுக்கும் 100ரூபாவுக்கும் விலைபோகிற அநியாயம்  சத்தமின்றி நிகழ்கிறது. ஆடைத்தொழிற்சாலைகள் என்றும் அரச உத்தியோகங்கள் என்றும் முன்னாள் போராளிகள் பலரது வாழ்வும் உடலும் விற்பனையாகிறது. இன்னும் 5வருடம் இப்படியே போகுமாயின் தாய்லாந்தாகவும் பம்பாயாகவும் எங்கள் பெண்களின் நிலமை மாறிவிடுகிற அபாயத்தை நோக்கிப்போகிறது நிலம். எவராவது எங்களை விடுதலை செய்தால் போதும் அவர்களுக்கு ஆதரவாயிருப்போமென ஆதரவற்றுப்போன கைதிகள் பலரது எதிர்பார்ப்பு நிறைவேறும் காலம் வராதென்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

வெற்றிகளுக்காக அள்ளி வழங்கியும் வெற்றிச்சமர்களுக்காக விழாவெடுத்தும் பெருமிதம் கொண்ட எங்கள் வெற்றிகளுக்கு வேராக இருந்த முன்னாள் போராளிகளின் வாழ்வை இன்று நாம் மேம்படுத்தாது தவறுவோமாயின் சுகந்திபோன்ற தற்கொலைகள் மட்டுமல்ல தங்களை விற்கின்ற அவலமும் தாராளமாயே நடக்கப்போகிறது.
நாங்கள் இங்கு வாழ்கிற வாழ்க்கை எங்கள் பிள்ளைகளுக்கு கிடைத்திருக்கிற வாழ்வும் வசதியும் அங்கே ஒவ்வொருவரும் சிந்திய இரத்தத்தின் பரிசு. எங்களது உயிர் அந்த உறவுகள் தந்த பிச்சை. அவர்களது வாழ்வை மே;படுத்த ஒவ்வொருவரும் முன்வாருங்கள்.

சுகந்திக்கு இன்று செலுத்துகிற கண்ணீரஞ்சலியும் இரங்கலும் அவளது மனச்சுமையை அவளைத் தற்கொலைக்குத் தூண்டிய வறுமையை ஏதாவது செய்யுமா ? பெறுதற்கரிய உயிரை அவளது வாழும் கனவை அழித்த எங்களது சுயநலத்தை அவளது ஆன்மா மன்னிக்குமா ? எல்லாவற்றுக்குமாய் அவளது மரணத்திற்கு நாமெல்லாம் பொறுப்பாளிகள். இன்னும் பல முன்னாள் போராளிகள் இவள் போன்ற முடிவே சரியென்று செத்து அழிவதற்கிடையில் எங்களுக்காக தங்கள் வசந்தங்களை கரைத்தவர்களுக்காய் உதவ முன்வாருங்கள்.
05.05.2012

No comments: