Thursday, June 21, 2012

புன்னகையின் காரணமாயிருந்தவளுக்குப் புற்றுநோய்

பதின்மக்கனவுகள்
பிணங்களும் அழுகையும்
பிணியகலாப் பொழுதின்
விடியலைத் தேடிய வீரரின் தடங்களில்
13வயது அவளுக்குக் காட்டிய வாசல்
களமுனை கைத்துப்பாக்கி
கனரக ஆயுதக் கையாள்கை.....

வெற்றியே அவளது வெறிக்கனவு
விடுதலையே அவளது விழிக்கனவு
விளக்கி முடியுமுன் கொடுத்திடும் காரியம்
முடித்திடும் தைரியம்
அவளைப் பிடித்தது எல்லோர்க்கும்....

அசாத்தியத் துணிவும் ஆழுமையும்
பகையின் வீட்டுக் குகைக்குள் பணி....
சிறைகளும் , சித்திரவதைக் கூடங்களும்
அவளுக்கு வலித்ததில்லை
வலிமையை விதைத்து வீரமாய் உரமாக்கி
கறுப்பாய் வெடிக்கும் களம் தேடிக்
கனவுகள் விரிந்தது....
கனவுகள் பலித்திடக் கைத்துப்பாக்கியும்
கணத்திலே வெடித்திடும் அங்கியும்
கழுத்தில் குப்பியும்.....

அவள் தலைமையேற்றுக்
கடமை முடித்த வெற்றிகள்
வெளியில் வராத கதைகளின் வேர் அவள்.
ஏத்தனையோ சாதனை சில சறுக்கல்கள்
சறுக்கலின் காரணம் தண்டனைகள்
பச்சைமட்டையடிகள் பற்கள் உடைவு
ஆயினும் தின்ற சோற்றுக்கு நன்றியாய்
அனுபவம் யாவும் கனவு வெளியில்
காத்திருத்தல் வெற்றிக்காய்
அவள் ஒரு கரும்புலியாய்.....

000

அழகென்றால் அப்போதைய அசின் அவள்
காதல் அவளையும் கவர்ந்து
காதலுக்காய் 10பச்சைமட்டையடி
கரும்புலிக்குக் காதல் கூடாது
கடும் எச்சரிப்பு கொடும் தண்டனை
ஆயினும் தின்ற சோற்றின் நன்றியையும்
தானே கரியாக்கிய காவியங்களையும்
ஏப்போதும் மறந்ததில்லை....

000

இரட்டை வாழ்வை முடித்து
மீளவும் பணிகள் முள்ளிவாய்க்கால் வரையிலும்...
காதலித்தவன் அவளுக்காய் காத்திருப்பதை
நினைவுபடுத்திய காதல் திருமணத்தில் முடிந்த போது
அங்கியணிவித்து அவளேயனுப்பிக் காற்றாய் கரைந்த
ஒரு காவியத்தின் குழந்தைக்கும் அவளே தாயானாள்.

களமொன்றில் உயிர் நீத்த அவள் நேசித்த தோழியின்
குழந்தைக்கும் தாயாகி
தை2009 குழந்தைகள் இரண்டின் அம்மாவாகி
3ம் குழந்தையை 2011 காதலுக்காய் பெற்றெடுத்து
அவள் வாழ்வது அன்றுமுதல் இன்றுவரை
அவளுக்காயில்லை.....

யாருக்கும் சொல்லாத
யாராலும் புரிந்து கொள்ள முடியாதவளாய்
அக்காவென்று ஆறுதல் தேடிவந்து
யாரையும் நம்பாத இயல்பை மாற்றி
எல்லாத்துயர்களையும்; இறக்கிவிட்டு
ஓய்ந்து போன போது
இரு சிறுநீரகமும் செயலிழந்து
வாழ்வின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்க
அண்மையில் இடியாய் அடுத்த மருத்துவ அறிக்கை
ஒற்றைச் சிறுநீரகத்தில் அவளுக்குப் புற்றுநோயாம்....

என்றுமே கலங்காத இரும்பாயிருந்த இதயம்
இடையில் போகப்போகிற உயிரைப் பிடித்து நிறுத்த
இறைஞ்சி நிற்க எல்லாம் பணமே உயிரும் பணமாய்
உயிரை எடுக்க சொல்லாமல் கொள்ளாமல்
தன் சோகங்களை மறைக்கவா இல்லை
தன் சாவை மறைக்கவா தொடர்பறுத்துப் போய்விட்டாள்....

கண்ணுக்குள் இப்போதும் அவளது புன்னகை
காதுக்குள் எப்போதும் 'அக்கா' என்ற அன்பின் இளை
கடைசியாய் அவள் காட்டிய குழந்தைகள் மூன்றின் முகம்
இதயத்தில் ஈரமாய் இமைக்குள் பாரமாய்.....

000

05.06.2012 அக்கா இருக்கிறேன்
ஏனக்காய் நீங்களும் எனது நேசிப்புக்குரியோரும்
பட்டதுயர் போதும் குறுஞ்செய்தியனுப்பிவிட்டுத்
மீண்டும் மறைந்து போனவளே....!
ஒருமுறை சொல்லிவிடு ஏன் தொடர்பறுத்துப் போனாய்....?

மற்றவர்களுக்காய் வாழ்ந்து மனிதநேயம் மாறாதவளாய்
மற்றோரைச் சிரிக்க வைத்து நீ மெழுகாகிக்
கரைகிற கண்ணீரை மறைத்தெங்கள்
புன்னகையின் காரணங்களாயிருந்தவளே.....!

உன்னை நம்பிய குழந்தைகளைப்
பிரியப்போகிற துயரோடும்
யுத்தம் தின்ற குழந்தைக்கனவுகளை குழந்தைகளை
உன் உழைப்பால் உயிர் வாழ்விக்க
கூலித்தொழிலாளியாய் குறைந்த சம்பளத்தோடும்
நிறைந்த மகிழ்வோடு பணியாற்றியவளே....!

உனக்காய் ஒரு சிறுநீரகம் என்னிடம் இருக்கிறது
அதைப்பெற்றுக் கொள்.....
அக்காவென்று உறவான உனக்காய்
என் ஒரு சிறுநீரகத்தைத் தந்துவிடுகிறேன்
தங்கையே தொடர்பு கொள்.....
16.06.2012

(13வயதில் விடுதலைப்போராளியாகி 30வயதிற்குள் பட்டறிவின் ஞானியாய் களம் முதல் மனிதநேயம் வரை கற்றுத்தேறி 3குழந்தைகளின் உயிர்தரும் அம்மாவாய் மனைவியாய் ஆனவள். கைகளில் லட்சங்கள் புரண்ட காலங்களில் கடமை முடிந்ததும் ஒரு சதமும் தனக்காய் கரைக்காமல் நாட்டின் சொத்தை நாட்டிற்கே திருப்பிக் கொடுத்தவள். இரு சிறுநீரகமும் இழந்து இப்போது ஒரு சிறுநீரகம் புற்றுநோயாகி வாழ்வின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிற ஒரு போராளித் தங்கைக்காக இக்கவிதை)

No comments: