Friday, April 12, 2013

ஆபிரிக்காவில் பசியிருக்கும் ஈழப்போராளியின் குழந்தைகள்.

அவன் ஒரு கடற்புலிப்போராளி. அவனொரு திறமையான சண்டைக்காரன். அவனொரு சிறந்த படகோட்டி , அவனொரு சிறந்த கலைஞன் , நடிகன்....! இப்படித்தான் அவனைப்பற்றிய அறிதல் இருந்தது.

2009 முடிவுகளின் பின்னர் நாட்டைவிட்டுத் தப்பிவிட ஆயிரக்கணக்கில் நேசித்த தாயகத்தைவிட்டு வெளியேறவும் அவர்களது குடும்பங்களையும் குழந்தைகளையும் காப்பாற்றவும் வேண்டிய கட்டாயத்தில் இந்தியா , இந்தோனேசியா ,மலேசியா என கடல்கடக்கத் துணிந்தார்கள்.

எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சமென புதிய புதிய வெளிநாடனுப்பும் முகவர்கள் பாதிக்கப்பட்ட போராளிகளை அணுகினார்கள். வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பல அழைப்புக்கள். துறைசார்ந்த நட்புகள் தொடக்கம் பல அழைப்புகள் தெரிந்த அறிந்த பழகியவர்களென நாடிவரத் தொடங்கிய 2010இன் ஆரம்பம்....!

இந்தியா வந்துவிடு இந்தோனேசியா வந்துவிடு மலேசியா வந்துவிடு ஐரோப்பா , அவுஸ்ரேலியா , கனடாவிற்கு அழைக்க முடியுமென்ற ஆசை வார்த்தைகளும் வாக்குறுதிகளும் கொடுத்த உற்சாகத்தில் பலர் ஒளித்தொழித்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரம் தான் அவனும் இனிமேல் வாழ முடியாதென்ற முடிவில் இருந்தவற்றையெல்லாம் விற்று தெரிந்தவர்களிடமும் உதவி பெற்று ஒன்பதரை லட்சரூபாவை சேகரித்து பயணமுகவராக அறிமுகமானவர்களிடம் பணத்தையும் கொடுத்து 2பிள்ளைகள் மனைவியோடு நாட்டைவிட்டு வெளியேறினான். 

கனடா போகலாம் என 2011இல் கப்பல் ஏறினான். நன்றாய் துளிர்த்து வளர்ந்த செடியொன்றை இடையில் பிடுங்கியெறிவது போன்ற வலியை மனசு அனுபவித்தாலும் தனது குடும்பத்திற்கான தனது குழந்தைகளுக்கான நல்வாழ்வொன்று வெளிநாட்டில் காத்திருப்பதாக நம்பி எல்லாத் துயர்களையும் தாங்கினான்.

கனடாக்கனவறுந்து தென்னாபிரிக்காவின் நாடொன்றில் கரை சேர்ந்தார்கள். நம்பிக்கை கொடுத்து காசை வாங்கியவர்கள் கைவிரித்தார்கள். வாழ்வா சாவா நிலமையில் அன்றாடத் தேவைகள் , பசி , அடுத்த கட்ட வாழ்வுக்கான வழி எதுவும் தெரியாது போனது.

ஐஆழு நிறுவனம் நாடுதிரும்ப விரும்புகிறவர்களை திருப்பியனுப்ப உதவுவதாகச் சொன்னார்கள். நாடுதிரும்பி இனி வாழவும் முடியாத நிலமை. நாடு திரும்பினால் நேரடியாக சிறையே நிரந்தரமாகும். ஏற்கனவே நடந்த இராணுவ தொந்தரவுகள் திரும்பவும் குடும்பம் மீது பாயும் என்ற அச்சம். கையில் இருந்ததெல்லாம் கரைந்து பிள்ளைகளுக்கு சோறு கொடுக்கவும் வழியற்றுப்போய்விட்டது.

எல்லாம் இழந்து இனி வழியேதுமற்ற நிலமையில் தெரிந்த அறிந்த எல்லாரையும் நாடி உதவி கோரினான். அப்படி அவன் தேடி வரும் வரை எனக்கு அவன் பற்றி தெரிந்தது இவ்வளவும் தான்.

000             000             000

உதவியென அழைக்கிற பல குரல்கள் போலவே அவனது குரலும். ஸ்கைப்பில் ஒருநாள் அழைத்தான். எனது தொடர்பைக் கொடுத்த ஒரு போராளியின் பெயரைச் சொல்லி அறிமுகமானான்.

அக்கா எனக்கேதாவது உதவி செய்யுங்கோ.....! என்னாலை ஊருக்கும் போகேலாது....இங்கை ஏதும் வேலை தேடிச் செய்யலாமெண்டு முயற்சி செய்யிறன் ஆனால் கிடைக்குதில்லை. பிள்ளைகள் சோளம் களிதான் சாப்பிடுதுகள்....! அப்பா சோறு வேணுமெண்டு கேக்குதுகளக்கா....! என்ரை பிள்ளையளுக்கு சோறு சமைச்சுக்குடுக்க ஏதாவது உதவுங்கோ அக்கா....!

உடனடியாக எதுவித வாக்குறுதியையும் கொடுக்க முடியாதிருந்தது. சில மணித்துளிகள் மட்டுமே அவனால் ஸ்கைபில் பேச முடிந்தது. தனது தொடர்புக்கான தொலைபேசியிலக்கத்தை எழுதிவிட்டுச் சொன்னான்....!

ஸ்கைப் காசு முடியுதக்கா நேரம் கிடைச்சா ஒருக்கா ரெலிபோனெடுங்கோக்கா....!

உங்கடை நாட்டுக்கு சரியான காசு போகும் ரெலிபோனுக்கு....! நெற்கபே வரேலுமெண்டா ஸ்கைப்பில இலவசமா கதைக்கலாம். எனச்சொன்ன எனக்குச் சொன்னான்...,

அக்கா நெற்கபேக்கு நான் இருக்கிற இடத்திலயிருந்து வாறதுக்கு ஒரு மணித்தியாலம் செல்லும். முச்சக்கரவண்டியில வாறதெண்டா காசு அதாலை நான் நடந்துதான் வந்து கதைக்க வேணும். என்னாலை வேகமா நடக்கேலாது நீங்கள் அப்பிடியெண்டா மிஸ்கோல் விடுங்கோ ஒருமணித்தியாலத்தில வந்திருவன். அன்று போய்விட்டான்.

அதோ இதோ என்ற கொடையாளர்கள் சிலரிடம் அவனுக்காக உதவி வேண்டி தொடர்பு கொண்ட போது எல்லாத்தரப்பும் கழுவும் நீரில் நழுவும் மீன்களாக ஆரவாரமில்லாமல் ஒளிக்கத் தொடங்கினார்கள். ஒரு போராளி மட்டும் அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற முயற்சியில் இணைந்து தனது தொடர்புகளுக்கால் உதவியைத் தேடிக்கொண்டிருந்தான். அதுவும் கைகூடவில்லை.

அவனுக்கு உதவியை எங்காவது பெற்று வழங்க வேண்டுமென்ற முயற்சியில் இணைந்த போராளியே எனக்கு அவன் நடித்த குறும்படம் பற்றிச் சொன்னான். அவனுடன் கதைத்தபடி Youtubeஇல் அந்தக்குறும்படத்தைத் தேடியெடுத்தேன்.

ஏற்கனவே 4தடவை பார்த்த அந்தப்படம் அதில் நடித்தவர்கள் பற்றித் தெரியாதிருந்த போது ஒரு கரும்புலியின் வாழ்வு பற்றிய உண்மை மட்டுமே அறிந்திருந்தேன். அந்தப் பாத்திரமாகவே அவன் வாழ்ந்து நடித்திருந்தான். நடிப்போடு மட்டுமன்றி விடுதலைப்பாதையில் அவனும் இறுதி வரை பயணித்திருந்தான் என்ற உண்மை அவன் மீதான மதிப்பை உயர்த்தியது.

மறுநாள் ஸ்கைப் வந்தான். அக்கா நேற்று உங்களுடன் பேசியதாக வீட்டில் சொன்னேன் பிள்ளைகள் கேட்டார்கள் நாளைக்கு நாங்கள் சோறு சாப்பிடலாமா என்று. கடந்த ஒரு கிழமையாக சோளன் களிதான் சாப்பிடுகிறார்கள். மகளுக்கு சத்துக்குறைவு அதாலை ஒரே வருத்தம் மகன் பறவாயில்லை இருக்கிறான் எனக்கு அவசர உதவியாக என்ரை பிள்ளையளுக்கு சோறு குடுக்க ஏதாவது செய்வீங்களோ அக்கா ?

யாரிடமாவது உதவி பெற்று தனது குழந்தைகளின் பசி போக்க விரும்பும் தந்தையாக அவன் குரல் உடைகிறது. புலரிடம் தனது குழந்தைகளுக்காக உதவி கோரி நொந்து நம்பிக்கையிழந்து போன பின்னால் கடைசி முயற்சியாக வந்திருப்பதாகச் சொன்னான். முதலில் தனது பிள்ளைகளின் முகத்தை ஸ்கைப்பில் போட்டான். பின்னர் தனது முகத்தையும் போட்டுக் காட்டினான்.

பட்டினியால் நலிவுற்ற ஆபிரிக்கநாடுகளின் குழந்தைகள் மனிதர்களை தொலைக்காட்சி பத்திரிகைகளில் பார்த்த நினைவுதான் அவனது குழந்தைகளின் முகங்களையும் அவனது முகத்தையும் பார்த்த போது நினைவு வந்தது. இன்னும் கண்ணுக்குள் அந்த முகங்களும் அந்தக் கண்களில் நிரம்பியிருந்த வெறுமையும் மட்டுமே நினைவில் நிற்கிறது.

10.04.2013 மதியம் ஸ்கைப் வந்திருந்தான். அக்கா யாராவது உதவ முன்வந்தினமா ? பிள்ளைகளின்ரை சாப்பாடுதான் பெரிய பிரச்சனையா இருக்கு.....! எந்த முயற்சியும் பயனளிக்கவில்லையென்ற உண்மையைச் சொல்ல வேண்டி வந்துவிட்டது கைவிரித்த யாவரையும் சொன்னேன்.

கடைசி  முயற்சி உங்கட நிலமையை ஒரு பதிவாக எழுதட்டோ ? கட்டாயம் வாசிக்கிற ஒரு கருணையுள்ள மனமாவது உங்கடை பிள்ளையளுக்கு சோறுதர உதவலாம். முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடெதுக்கெண்டு நினைச்சானோ என்னவோ சொன்னான். எழுதுங்கோ பிரச்சனையில்லை.
அன்று தன்னைப்பற்றிய முழுமையான விபரங்களையும் சொல்லிக் கொண்டிருந்தான்.

15வயதில் இயக்கத்தில் இணைந்தவன். 29வயது வரை போராளியாக வாழ்ந்திருக்கிறான். 98இல் சமரொன்றில் காயமடைந்து ஒரு கால் ஊனமுற்று காயம் ஆறி மீளவும் களவாழ்வு. 2005இல் நீதி நிர்வாகத்துறையில் இணைக்கப்பட்டு நீதிநிர்வாகம் கற்று சட்டத்தரணியாகி 2008வரையும் சட்டத்துறையில் பணியாற்றினான்.

இறுதிக்களம் உக்கிரமடைந்ததோடு மீண்டும் சண்டையில் போய் நின்றான். நாட்டுக்காய் புறப்பட்ட போது எடுத்துக் கொண்ட சத்தியத்தைக் காக்க சண்டையில் நின்றவன் 2009இல் மீண்டும் காயமடைந்தான். 98இல் காயமடைந்த அதேகால் மீண்டும் காயமடைந்து கடுமையாகப் பாதிப்புற்றான்.

பட்டகாலிலே படும் என்ற பழமொழி அவனுக்குச் சரியாகவே பொருந்தியது.
கடைசிவரை நேசித்த மண்ணுக்குள் நின்று அந்த மண் மீளும் என்ற கனவோடு புதைந்தவர்களின் கனவுகளைச் சுமந்து களமாடி ஊனமாகி எல்லாம் இழந்து ஒரேநாளில் மயானமாகிய முள்ளிவாய்க்காலைவிட்டு எதிரியிடம் கையுயர்த்திச் சரணடைந்தவர்களோடு அவனும் அவனது குடும்பமும் சரணாகதியாகி.....!

காலம் கைவிட்டு கடவுள்களும் கைவிட்டு அனாதையான வன்னிமண்ணும் 3லட்சத்துக்கு மேலான மக்களும் இறுதிவரை போராடிச் சரணடைந்த 11ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளும் அனாதைகளாகினர்.

000                 000               000

11.04.2013 தொடர்பு கொண்டேன். அவன் இருக்கும் நாட்டில் இரவு 12மணி. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து வறுமையால் வாடும் அந்த நாட்டில் வேலை தேடுவதே வளமையென்றான். அன்று யாரோ ஒருவரோடு சேர்ந்து ஒரு பாண்தயாரிக்கும் வெதுப்பகம் போனான். காலையிலிருந்து மாலைவரை அந்த வெதுப்பகத்திற்குத் தேவையான விறகு கொத்திக் கொடுத்தானாம். இரவு அந்த நாட்டுப்பணம் 2ஆயிரம் கிடைத்திருக்கிறது. ஒரு கிலோ அரிசியின் விலை அந்தநாட்டுக்காசு ஆயிரம் ரூபா விற்கிறது. வீட்டிற்கு 2கிலோ அரிசி வாங்கிக் கொண்டு போயிருக்கிறான். பிள்ளைகள் இரண்டும் ஏங்கும் சோற்றைக் கொடுக்க அன்றைய பணம் உதவியிருக்கிறது.

புpள்ளைகள் பள்ளிக்கூடம் போறேல்லயா ? அதுக்கெல்லாம் லச்சக்கணக்கில வேணுமக்கா....! இப்போதைக்கு என்ரை பிள்ளையளுக்கு சாப்பாடு வேணுமக்கா. அவன் வார்த்தைகளில் தெறித்த இயலாமையும் வறுமையும் முகத்தில் உமிழ்வது போல உறைத்தது. பாடசாலை போகும் வயதில் இருக்கும் பிள்ளைகள் இருவருக்கும் அவனே ஆசான்.

எனது பிள்ளைகள் படித்து பெரிய முன்னேற்றமடைய வேண்டும். ஒரு விஞ்ஞானியாக , ஒரு விமான ஓட்டியாக , ஒரு விண்வெளி ஆராட்சியாளராக இப்படி எனக்கு உள்ள எல்லாக் கனவுகளும் அவனுக்கும் அவனது மனைவிக்கும் நிச்சயம் இருக்கும். ஆனால் அன்றாட உணவே போராட்டமாக உள்ள போது அவனது கனவுகள் ?????

பிள்ளையள் ரெண்டும் இல்லையெண்டா நானும் மனைவியும் செத்திடுவமக்கா....! இண்டைக்கு எல்லாத்தையும் இழந்திட்டு நடுத்தெருவில நிக்கிற நிலமையும் இருந்திருக்காது....! இப்பிடி அவமானப்பட்டுக் கொண்டு வாழவும் தேவையில்லையக்கா....! அவன் வெறுப்பின் உச்சத்தில் கதைத்துக் கொண்டிருந்தான்.

அவனிடம் கறந்த ஒன்பதரை லச்சத்தையும் வேண்டி விழுங்கீட்டு எதுவுமே நடவாதது போல வாழும் முகவரால் எப்படித்தான் நிம்மதியாக உறங்க உண்ண உலாவ முடிகிறதோ ?

இல்லாதவன் பொல்லாதவானாகிறான் என்பது ஊர் மொழியொன்று. அவன் பொல்லாதவானாகாமல் இன்னும் பொறுமையோடிருப்பதே அதிசயமாயிருந்தது. அவனது பொறுமையின் ஆதாரம் அவனது இரு குழந்தைகளுமே.

கண்ணதாசன் எழுதிய பாடலொன்றில் வரும் வாசகங்கள் :- „'உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது'.

உயர்ந்தவர்களாய் மான மறவர்களாய் ஒருகாலம் உலகத்தாலும் எங்கள் இனத்தாலும் உச்சத்தில் ஏற்றி வைக்கப்பட்டவர்களின் நிலமை 2009இல் மாறியது. அவர்களை அவர்களது நிழல் மட்டுமில்லை அவர்கள் நிழல்களாய் வருவோம் என்று சபதம் செய்து வீரராய் மதித்த தமிழரே இன்று வீதியில் விட்டெறிந்து நல்ல வீணைகளை நலங்கெட புழுதியில் எறிந்து...!

'தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினையே அழித்திடுவோம்' எழுதிவிட்டுப் போனான் மீசைக்கவிஞன் பாரதி. இந்திய தேசத்தின் எழுச்சியின் குறியீடாகினான் பாரதி. எல்லா இலக்கண வரையறைகளுக்கும் உதாரணமாயும் உயர்வாயுமிருந்த என் சக உறவின் குழந்தைகளின் பசி போக்க நாங்கள் இந்த ஜெகத்தை எரிக்கவா முடியும் ?

பசியால் அழும் குழந்தைகளின் அழுகையில் உயிரை வதைக்கும் கொடுமை இனியுலகில் எந்தப் போராளிக்கும் வரவே கூடாது. ஒவ்வொரு முறையும் பிள்ளைகள் சாப்பிடும் போதும் அவன் தனது பிள்ளைகள் பற்றிச் சொன்னதே நினைவில் வருகிறது. அந்தக் குழந்தைகளின் அழுகையாக அவனது குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

அவன் நடிப்பில் வெளியாகிய குறும்படத்தை மீளவும் பார்க்கிறேன். தற்கொடையாளனாய் தன்னினத்தை மட்டுமே நேசித்து குடும்பம் அம்மா அக்கா சக தோழர்கள் யாவரையும் பிரிந்து போன அந்தக்கரும்புலியின் மறுவடிவமாகிய அவன் ஒரு காலத்தின் குறியீடாக....!

அவனது சிரிப்பு பேச்சு இன்று ஆபிரிக்க நாடுகளின் அடையாளமாக உருமாறிப் போன தோற்றமும் கண்ணீராய் வழிகிறது. யாருக்கென்று அழுவதென்று தெரியாது ஆனால் அவனது குழந்தைகளுக்காக இன்று அழுகிறேன். அவர்கள் சாக எங்கள் உயிர்காத்துப் புலம் பெயர்ந்து வாழும் இந்த வாழ்வைத் தந்த அவர்களுக்காய் அழுகிறேன்.

12.04.2013 இரவு அவனை அழைத்தேன். ஆறாத ரணமாக அவனது பிள்ளைகளின் பசியைத்தான் சொல்லி வருந்தினான். கையில் எதுவுமில்லை கடனும் வாழ்வின் சுமையும் அழுத்துகிற அவலத்தை அவனுக்குச் சொல்லி தப்பித்துப் போக முடியவில்லை. மாதத்தின் நடுப்பகுதி எல்லாம் முடிந்து கடனட்டையில் மிஞ்சியிருக்கும் 110€. அடுத்தமாதத் தொடக்கம் வரையில் அவசர தேவைகளுக்காக இருக்கிற 110€ அவன் வாழும் ஆபிரிக்க நாட்டுப்பெறுமதியில் 61600வரும்.

அடுத்த கிழமை என்னாலை முடிஞ்ச சின்ன உதவியொண்டை அனுப்புறன். யாராவது உங்களுக்கு உதவ வருவினம். அதுவரை பொறுத்திருங்கோ. சொன்ன எனக்குச் சொன்னான். நன்றியக்கா....! மாதம் ஒரு 30€ யாராவது உதவினால் ஒரு காலத்தின் பெறுமதியான அவனின் குழந்தைகள் பசியாறும்.....!

13.04.2013 (எழுதப்பட்ட நேரம் அதிகாலை 02.26)
பிற்குறிப்பு :- இந்தக் குடும்பத்துக்கு யாராவது உதவ விரும்பின் தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் வீட்டின் பிள்ளைகளின் பசிபோலவே அந்தக் குழந்தைகளுக்கும் பசிக்கிறது. அவர்கள் பசியாற்ற கருணையுள்ளம் படைத்தவர்களே உதவுங்கள்.

No comments: